திருமணத்திற்கு பின்பும் காதல் பூக்கும்; மகிழ்ச்சிக்கான புது மந்திரங்கள்


திருமணத்திற்கு பின்பும் காதல் பூக்கும்; மகிழ்ச்சிக்கான புது மந்திரங்கள்
x
தினத்தந்தி 19 Jan 2020 5:00 AM GMT (Updated: 18 Jan 2020 6:38 PM GMT)

“கணவனை அலங்கரிக்கும் பொறுப்பை மனைவியும், மனைவிக்கு பூச்சூடி அழகுபடுத்தும் பொறுப்பை கணவனும் ஏற்றுக்கொண்டால் அந்த குடும்பத்தில் எல்லையற்ற மகிழ்ச்சி நீடிக்கும்...”

காதலித்து திருமணம் செய்துகொண்ட ஜோடிகளே, திருமணத்திற்குப் பின்பு தங்களிடம் காதல் உணர்வு குறைந்துவிட்டதாக புலம்புவது உண்டு. ஆனால் பெற்றோர் பார்த்து நிச்சயித்து ‘அரேஞ்டு மேரேஜ்’ செய்துகொண்ட பல ஜோடிகள், தாங்கள் காதலில் ஈடுபட்டு வாழ்க்கையை அமர்க்களப்படுத்திக்கொண்டிருப்பதாக சொல்கிறார்கள். ‘வாழ்க்கையின் மகிழ்ச்சியே கணவனும்- மனைவியும் தங்களை ஒருவரை ஒருவர் காதலிப்பதில்தான் அடங்கியிருக்கிறது’ என்றும் அவர்கள் சொல்கிறார்கள். அத்தகைய ஜோடிகளின் ருசிகர காதல் வாழ்க்கை அனுபவங்கள்!

“தங்கள் கல்யாண வாழ்க்கை திருப்திகரமாக இல்லை என்று சொல்லும் தம்பதிகள் அனைவருமே தங்களுக்குள் காதல் உணர்வற்றவர்களாக இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை” என்கிறார்கள் மும்பையை சேர்ந்த சோனு-ரீட்டா தம்பதியினர்.

“எல்லா ஜோடிகளுமே எத்தனையோ ஆசைகள், கனவுகளுடன்தான் திருமணம் செய்து கொள்கிறார்கள். ஆனால் அன்பு, நம்பிக்கை, விட்டுக் கொடுத்தல், ஏற்றுக்கொள்ளுதல் போன்ற பண்புகள் இல்லாததால்தான் அவர்களுக்குள் இணக்கமான இல்லறம் அமைவதில்லை. அந்த பண்புகள் இ்ல்லாமல் போனதற்கு அவர்கள் காதலிக்கவில்லை என்பதே உண்மை. காதல் இருந்துவிட்டால் அன்பும், நம்பிக்கையும், விட்டுக்கொடுத்தலும் தானாகவே வந்துவிடும். அது அவர்களின் வாழ்க்கையை வசந்தமாக்கிவிடும்” என்கிறார் சோனு.

திருமணமாகி 7 ஆண்டுகளாகும் இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ரீட்டா சொல்கிறார் “பெற்றோர் பார்த்து திருமணம் செய்து வைத்தபோது, கணவர் எப்படியிருப்பாரோ என்ற பயம் எனக்குள் இருந்தது. அவர் எனக்கானவர், நான் அவருக்கானவள் என்ற இணக்கம் எங்களுக்குள் தோன்றிய உடனே எங்களுக்குள் காதல் அரும்பிவிட்டது. அந்த காதல் உணர்வை நாங்கள் நாளுக்கு நாள் வளர்த்துக்கொண்டிருக்கிறோம். அதனால் எங்களை போன்ற மகிழ்ச்சியான தம்பதிகள் வேறு யாரும் இல்லை என்று எங்களால் உறுதிபட சொல்லமுடியும்” என்கிறார்.

அக்‌ஷய் திரிபாதி என்பவர் சொல்கிறார்:

“எங்கள் திருமணத்தன்று என் மனைவி விட்ட கண்ணீர்தான் அவள் மீது எனக்கு காதல் தோன்ற காரணமாயிற்று. திருமணம் முடிந்ததும், அவளை எங்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்க தயாரானார்கள். பெற்றோர் மற்றும் குடும்பத்தினரிடம் இருந்து அவள் பிரியாவிடை பெற்றபோது அவள் அழுது குமுறிவிட்டாள். அவளது கண்ணீர் என்னிடமும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இத்தனைக்கும் எங்கள் இருவரது ஊருக்கும் இடையே அதிக தொலைவு இல்லை. நினைத்தநேரத்தில் அங்கே சென்றுவிட முடியும். ஆனாலும் அந்த அழுகை அவளது அன்புணர்வையும், பெற்றோரை அவள் பிரிந்துவரும் துயரத்தையும் எனக்கு உணர்த் தியது. அந்த நேரத்தில் எனக்கும் கண்ணீர் வந்துவிட்டது. அதைச்சொல்லி இப்போதும்கூட என் நண்பர்கள் என்னை கேலி செய்வார்கள்.

அவள் அத்தகைய அன்புமிக்க இடத்தில் இருந்து என்னைத் தேடி வரும்போது, நான் அவளுக்கு அதைப்போல கொஞ்சமும் குறைவில்லாத வாழ்க்கையை வழங்க வேண்டும் என்ற எண்ணமும், காதலும் என்னிடம் தோன்றியது. எந்த சூழலிலும் தான் அன்னியமானவள் என்ற எண்ணம் அவளுக்குள் எழுந்துவிடக் கூடாது என்று நினைத்தேன். அவளுக்கு முழு நம்பிக்கை அளிக்கும் வகையில் எங்கள் இல்வாழ்க்கை அமைந்ததற்கு அதுவே காரணம். அந்த நம்பிக்கையின் மறுபெயர்தான் காதல். எங்களுக்கு திருமணமாகி பத்து ஆண்டுகள் ஆன பின்பும் அதே காதல் உணர்வோடு ஊடலும், கூடலுமாய் இனிக்க இனிக்க வாழ்ந்து கொண்டிருக்கிறோம்..” என்கிறார் அக்‌ஷய் திரிபாதி.

“திருமணத்தி்ற்கு முன்பு எனது கணவர் பற்றியும், அவரது குடும்பத்தினர் பற்றியும் நான் கொஞ்சமும் அறிந்திருக்கவில்லை. அதனால் பல விஷயங்களில் ஒத்துப்போக முடியாமல் மோதிக்கொண்டிருந்தோம். அவர் அதிக சம்பளம் வாங்கும் வேலையில் இருந்தார். ஒருமுறை எங்களுக்குள் ஏற்பட்ட சண்டையில் நான் என் உடைகளை எல்லாம் எடுத்துக்கொண்டு அவரிடம் சொல்லிக்கொள்ளாமலே தாயார் வீட்டிற்கு கிளம்பினேன். ஆனால் நான் ரெயில் நிலையத்திற்கு செல்வதற்கு முன்பே, அவர் அங்குபோய் எனக்காக காத்திருந்து, டிக்கெட் வாங்கித்தந்து, ‘உன் அம்மா வீட்டிற்குதானே போகிறாய். போய்விட்டு வா..’ என்று கூறினார். அப்போதும் நான் கோபம் குறையாமல் அவரை திட்டினேன்.

அவரோ அமைதியாக என் அருகிலே அமர்ந்திருந்தார். என் சிந்தனை பலவிதமாக சென்றுகொண்டிருந்தது. சிறிது நேரத்தில் ரெயில் வந்தது. ஆனால் நான் ரெயிலில் ஏறவில்லை. ரெயில் கடந்து போனது. என் பொருட்களை தூக்க, வீட்டிற்கு வந்தோம். அன்று அவர் ஆசையோடு முத்தம் கொடுத்து அடக்கிவைத்திருந்த அன்பையும் அப்படியே கொட்டினார். அன்றே நாங்கள் இனி சண்டையே போடக்கூடாது என்று தீர்மானம்போட்டு, காதலை வளர்க்க என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று பட்டியலும் போட்டுவிட்டோம். உங்களுக்கும்கூட மோதலில் இருந்து காதல் பிறக்கலாம். அதற்கான வாய்ப்பை நீங்கள் இருவருமே உருவாக்குங்கள்” என்கிறார், பெங்களூருவை சேர்ந்த வினுஜா.

இவர் தனது கணவருடனான காதலை வளர்க்க தினமும் இரண்டு மணி நேரத்தை செலவிடுகிறாராம். “அந்த இரண்டு மணி நேரம்தான் எங்களுக்கு மிக இன்பமயமான நேரம். எதை இழந்தாலும் அந்த இரண்டு மணி நேரத்தை நாங்கள் இழக்க தயாரில்லை. மற்ற நேரங்களில் கருத்துவேறுபாடுகளும், சிற்சில கசப்புகளும் இருந்தாலும் அந்த நேரம் முழுக்க முழுக்க காதலும், ரொமான்ஸ்சும்தான்..” என்று கணவரை பார்த்து கண்ணடிக்கிறார், வினுஜா.

ராஜீவ் பாண்டேயின் கருத்து இன்னொருவிதமாக இருக்கிறது. அவர் சொல்கிறார்: “திருமணமான ஒருசில மாதங்களில் எனது தாயாரின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. அவருக்கு அறுவைசிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம் உருவானது. ஆஸ்பத்திரியில் அனுமதித்தோம். எனது தந்தையும் முதியவர். அவராலும் என் தாயாரை பராமரிக்க முடியாது. என்ன செய்வதென்று தெரியாமல் நான் தவித்துக்கொண்டிருந்த நேரத்தில் என் மனைவி, என்னை ஆறுதலாக அணைத்துக்கொண்டு, ‘நான் சில வாரங்கள் விடுப்பு எடுத்து, மருத்துவமனையில் இருந்தே மாமியாரை கவனிக்கிறேன்’ என்றாள். சொன்னதோடு இல்லாமல், இரண்டு வாரங்கள் அங்கேயே தங்கியிருந்து அவளது அம்மாபோல என் தாயாரை கவனித்துக்கொண்டாள். அது போன்ற பல விஷயங்கள் எங்களுக்குள் காதலை வளர்த்துக்கொண்டிருக்கிறது. காதலை வளர்ப்பதற்கு பேசினால் போதாது. செயல் தேவை. அந்த செயலில் தியாகமும் இருக்கவேண்டும்” என்கிறார், அவர்.

இப்படிப்பட்ட காதல் பூ உங்கள் வீட்டிலும் பூக்கும் வாய்ப்பு அதிகம்!


Next Story