தினம் ஒரு தகவல் : மின்னணு கழிவுகளை கையாள்வது எப்படி?


தினம் ஒரு தகவல் : மின்னணு கழிவுகளை கையாள்வது எப்படி?
x
தினத்தந்தி 20 Jan 2020 4:45 AM GMT (Updated: 20 Jan 2020 4:45 AM GMT)

இன்று வீட்டுக்கொரு மரம் இருக்கிறதோ இல்லையோ, வீட்டுக்கு இரண்டுக்கு மேற்பட்ட செல்போன்கள் இருக்கின்றன. கடந்த 20 ஆண்டுகளாக இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியும் அதன் ஒரு பகுதியாக இளைஞர்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்பும் கிடைத்திருந்தாலும், மென்பொருள் நிறுவனங்களில் இருந்தும், தயாரிப்பு நிறுவனங்களில் இருந்தும் வெளியேற்றப்படும் மின்னணு கழிவுகளின் அளவும் பெருகியுள்ளது.

2005-ம் ஆண்டைப் போல ஆறு மடங்கு அதிக மின்னணு கழிவு 2012-ம் ஆண்டில் வெளியேற்றப்பட்டிருக்கிறது என்கிறது மாசுக் கட்டுப்பாட்டு வாரியம். எனவே, நம்மால் முடிந்த அளவுக்கு மின்னணு கழிவை வெளியேற்றாமல் இருக்கலாம். நமக்குத் தேவையில்லாத பொருள் (செல்போன், கம்ப்யூட்டர்), அடுத்தவருக்கு அத்தியாவசிய தேவையாக இருக்கலாம். அதனால் நமக்குப் பயன்படாத மின்னணு பொருட்களை தேவைப்படுகிறவர்களுக்கு தந்து உதவலாம்.

அப்படியில்லாதபட்சத்தில், நாம் வெளியேற்றும் மின்னணு கழிவு, அவற்றை சேகரிக்கும் சிறு வியாபாரிகளை சென்றடைகிறது. அங்கே அவை பிளாஸ்டிக், உலோகம் என வகைப்படுத்தப்பட்டு மீதியிருக்கும் கழிவு எரிக்கப்படும். சில வகை கழிவுகளை அப்படியே மண்ணில் போட்டுவிடுவார்கள். மின்னணு கழிவிலிருந்து வெளியேறும் காட்மியம், குரோமியம், பாதரசம், காரீயம் போன்ற நச்சுகள் மண்ணை மாசுபடுத்துவதுடன் நீரையும் மாசுபடுத்தும். மின்னணு கழிவை எரிப்பதால் உருவாகும் நச்சுப்புகை புற்றுநோயை ஏற்படுத்தலாம். நரம்பு மண்டலத்தில் பிரச்சினை, சுவாச கோளாறுகள், குழந்தைகளுக்கு பிறவி குறைபாடுகள் போன்றவற்றை உருவாக்கலாம்.

இப்போது சில நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை திரும்பப் பெற்றுக்கொள்கின்றன. இதை பயன்படுத்தி கொள்வது நல்லது. இல்லையென்றால் அரசு அங்கீகாரம் பெற்ற மறுசுழற்சி நிறுவனங்களின் உதவியை நாடலாம். அவர்கள், சரியான முறையில் மின்னணு கழிவை கையாள்வார்கள். இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுக்க தொழில் நிறுவனங்களைவிட வீடுகளில் தான் மின்னணு கருவிகளின் பயன்பாடு அதிகம். ஆனால் வீடுகளை விட நிறுவனங்களில் இருந்துதான் மின்னணு கழிவு அதிக அளவில் வெளியேற்றப்படுகிறது.

இவற்றை முறைப்படி கையாளவில்லை என்றால் இந்த பொருட்களை தரம் பிரிக்கும் பணியாளர்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் தீங்கு நேரலாம். மின்னணு கழிவை மத்திய அரசின் அனுமதி பெற்று இயங்கும் நிறுவனங்களிடம் ஒப்படைப்பது, சுற்றுச்சூழல் சீர்கேட்டை பெருமளவில் குறைக்கும். உதிரி பாகங்களை சேகரிக்கும் சிறு வியாபாரிகளிடம் அவற்றை கையாள்வதற்கான உபகரணங்கள் எதுவும் இருக்காது. உதாரணமாக பயன்படாத தொலைக்காட்சி பெட்டியின் கண்ணாடியை உடைக்கும்போது, உள்ளே இருக்கும் வாயு வெளியேறும். அது அங்கிருக்கும் பணியாளர்களையும், அந்த சுற்றுப்புறத்தையும் பாதிக்கும். ஆனால் பெரிய நிறுவனங்களில் இதற்கென தனிக் கட்டுமானம் இருக்கும். இவை பணியாளர்கள் உதவியின்றி, அங்கிருக்கும் குறைந்த காற்றழுத்த அறையில் தான் உடைக்கப்படும். இதனால் சூழல் மாசுபாடு குறைக்கப்பட்டு, பணியாளர்களும் பாதுகாப்புடன் இருக்கலாம்.

Next Story