சிறப்புக் கட்டுரைகள்

மண்காட்டும் பண்பாடு...! + "||" + The culture of the earth ...!

மண்காட்டும் பண்பாடு...!

மண்காட்டும் பண்பாடு...!
மனித வாழ்வு இயற்கையோடு இணைந்தது. இவ்வாழ்வில் ஐந்து பெரும் சக்திகள் என்று சொல்லப்படும் நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு என்ற பஞ்ச பூதங்களோடு தொடர்புடையது.
னித வாழ்வு இயற்கையோடு இணைந்தது. இவ்வாழ்வில் ஐந்து பெரும் சக்திகள் என்று சொல்லப்படும் நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு என்ற பஞ்ச பூதங்களோடு தொடர்புடையது. குறிப்பாக மண் என்று சொல்லக்கூடிய சொல்லுக்கு பல பொருட்கள் உள்ளன. மண் அணு, ஒப்பனை, கழுவுதல், சுட்டசாந்து, துகள், நிலம், பூமி, மண்ணென்னேவல், மலை, மாட்சிமை, முழவின் மார்ச்சனை என கழகத் தமிழ் அகராதி பொருள் கூறுகிறது.

மண்பாண்ட கலை மிகவும் தொன்மை வாய்ந்ததாகவும் , பண்பாட்டின் எச்சங்களாகவும் காணக்கிடைக்கின்றன. தற்போது, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியிட்டுள்ள ‘கீழடி’ பற்றிய அறிக்கையில், சுடுமண் உருவங்கள் கிடைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதில் மனிதன் மற்றும் விலங்கு உருவங்கள் அகழாய்வில் கிட்டியுள்ளது. அவற்றோடு மண்ணால் செய்யப்பட்ட பானை ஓடுகள், பெண்கள் விளையாடும் வட்டச்சில்லுகள், சிறுவர்கள் விளையாடும் சுடுமண்ணால் ஆன சக்கரங்கள், வட்டச்சுற்றிகள் நமக்கு கிடைத்துள்ளன.

தமிழகத்திலேயும் மண்பாண்ட கலை தொன்மை காலத்திலேயே தோன்றியிருக்க வேண்டும். இலக்கிய இலக்கணங்களில் மண்பாண்டங்கள் பற்றிய செய்திகள் இடம் பெற்றிருப்பதை காணும்போது அதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே மண்பாண்டங்கள் புழக்கத்தில் இருந்திருக்க வேண்டும் என்பதை உணர முடிகிறது.

தமிழகத்தை பொறுத்தவரை பெரும்பாலும் கருப்பு, சிவப்பு நிற பாண்டங்களே செய்யப்பட்டிருக்கின்றன. ஏனைய கிரேக்க ரோமானிய நாடுகளை போல் பச்சை, நீலம் நிறமுடைய பாண்டங்கள் இருந்திருப்பதாகத் தெரியவில்லை. மேலும் தமிழகத்தில் சக்கர உதவியினால் நேர்த்தியான பானைகளை வனைந்திருக்கின்றனர். “மலையாள ஊராளி குறும்பர், சிங்களத்திலுள்ள வேடர்கள், ஆப்பிரிக்க நீக்ரோக்கள், சைபீரிய யாகுட்சுகள் போன்றோர் சக்கர உதவியின்றியே பானை வனைந்தனர்” என்ற செய்தி கிடைக்கிறது. எனவே பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே தமிழகத்தில் மண்பாண்ட கலை தோற்றம் பெற்றிருக்கின்றது என்பதை அறிய முடிகிறது. மனிதன் பிறந்தது முதல் அவனது இறப்புவரை சில மண்பாண்டங்கள் பயன்பட்டிருக்கின்றன. தண்ணீர் குடிக்க, உணவு சமைக்க, சாப்பிட, தானியங்கள் சேமிக்க என பல நிலைகளில் பயன்பாடுடைய பொதுக்கலையாக பல்வேறு வடிவமைப்புகளில் இக்கலை வளர்ச்சி பெற்று வந்திருக்கிறது.

நுண்கலை, பொதுக்கலையில் இருந்து வேறுபட்டதும் வரலாற்று அடிப்படையில் பிற்பட்டதும் ஆகும். கலைநயமும், நேர்த்தியும், வேலைப்பாடும் மிகுந்த படைப்புகளை நுண்கலை என்கிறோம். இது கண்ணால் கண்டும் மனத்தால் உணர்ந்தும் மகிழத்தக்கது. பயன்பாடு என்ற தேவை நிலையில் இருந்து மாறி உணர்வு பூர்வமான நுண்கலை தோன்றுவதாயிற்று.

“பண்டையக்கால எகிப்தியர்கள் பொதுக்கலையில் இருந்து படிப்படியாக விலங்குகள், தெய்வ உருவங்கள், இயற்கை பொருட்கள் போன்றவற்றை படைக்கலாயினர்” என்ற ஆங்கில நூற்குறிப்பு இதை உணர்த்தும், “சக்கரத்தையும், துடுப்பையும் கண்டுபிடித்தவர்கள் தாம் தொழில்; அறிவியல் ஆகியவற்றின் வரலாற்றின் முன்னோடிகளாவார்கள்” என்பர் அறிஞர். அவ்வகையில் இக்கலை இசை, கல்வி, ஓவியம், சிற்பம், மருத்துவம் எனப் பல கலைகளுக்கும் பயன்பட்டு வந்திருக்கிறது.

சக்கரத்தை கண்டுபிடித்ததன் மூலம் இக்கலை அறிவியலுக்கு முன்னோடியாகவும், மனித இனம், நாகரிகம் ஆகியவற்றை அறிந்துகொள்ள பேருதவியாக இக்கலை சான்றாதாரமாகப் பயன்படுகிறது.

கல்விக்கு முன்னோடியாக இருந்தது மண்பாண்ட கலையே எனலாம். களிமண்ணைப் பிசைந்து சிறுசிறு பலகைகளை போல் அமைத்து அப்பலகையின் ஈரம் உலர்ந்து போவதற்கு முன்னமே ஆணி போன்ற கருவியினால் எழுதி உலர வைத்து புத்தகமாக உபயோகித்திருக்கின்றனர் என்ற செய்திகளின் மூலம் களிமண் சுவடியாக இக்கலை கல்வி கலைக்கு பயன்பட்டிருக்கிறது என்பதை அறிய முடிகிறது.

தற்போது கீழடி அகழாய்வில், 2600 ஆண்டுகள் பழமை வாய்ந்த நாகரிகத்தின் அடையாளமாய் தமிழ் பிராமி எழுத்துகள் பொறித்த பானை ஓடு கிடைத்திருப்பது இந்திய வரலாற்று ஆய்வில் ஒரு மைல் கல். இவற்றோடு மண்ணால் செய்யப்பட்ட கலன்களும் நமக்கு கிடைத்துள்ளமை, உலகின் மூத்த பண்பாட்டுக்கு நம்மை சொந்தக்காரர் ஆக்கிவிட்டன.

இசைக்கருவிகளும் மண்ணினால் செய்யப்பட்டிருக்கின்றன என்பதை அறிய முடிகிறது. புல்லாங்குழல், நாதசுரம், மிருதங்கம் (கடம்), தாளப்பானை, மண் முழவு, உடுக்கை போன்ற கருவிகள் மண்ணால் செய்யப்பட்டவை. இசைக்கருவிகள் சங்கக்காலத்தில் இசைக்கப்பட்ட செய்தி இலக்கிய வரிகளால் அறிய முடிகிறது. குறிப்பாக தோல்கருவிகள் மண்ணினால் செய்யப்பட்டும் மண்ணின் துணைகொண்டும் வாசிக்கப்பட்ட செய்தியை உரையாசிரியர்கள் தெளிவுபடுத்துகின்றனர்.

முழவைப்பற்றி செய்திகள் சங்க இலக்கியத்தில் மிகுதியான அளவில் உள்ளன. சங்கக்கால மக்கள் முழவை பலாப்பழத்துடன் பொருத்தி ஒப்புமை கண்டுள்ளனர்.

‘கானப்பலவின் முழவுமருள் பெரும்பழம்’முழவி னமைந்த பெரும்பழம் முழவின் ஒரு பக்கம் மண் (மார்ச்சனை) பூசப்பெற்றிருப்பதை பல பாடல்கள் கூறுகின்றன.

இன்றளவிலும் நாட்டுப்புறங்களில் உள்ள குயவர்கள், சாமி சிலைகள், குதிரைகள் போன்ற சிலைகளுக்கு மண்கொண்டு வர்ணம் தீட்டுவதையும் வேலைப்பாட்டிற்காக கோலமிடுவதையும் காண முடிகிறது. கோவில்களின் மதிற்சுவர்களிலும், வீடுகளிலும் மண் ஒரு வர்ண கலையாக பயன்படுத்தப்படுவதை அறியலாம். சிற்ப கலை வளர்ச்சி பெறுவதற்கு முற்பட்ட தொடக்க காலங்களில் மண்ணை கொண்டுதான் சிற்பம் செய்திருக்கக்கூடும். இரும்பை கண்டுபிடிப்பதற்கு முன்னரே மரத்தாலும், கல்லாலும் சிலை செய்திருக்கக்கூடும். இன்றளவிலும் மண்ணை கொண்டுதான் குயவர்கள் சிலையை செய்கின்றனர். காஞ்சீபுரம் கைலாச நாதர் கோவிலில் மண் சிற்பங்கள் எழிலான சிற்பங்கள்.

மண்ணிற்கு சில மருத்துவ குணங்கள் உண்டு. “மண்பாண்ட சமையல் ருசியான உணவாக இருப்பதுடன் குடற்புண் போன்ற நோய்கள் வராமல் தடுத்து உடலை குளிர்ச்சியாக இருக்கச் செய்கிறது. “சித்த மருத்துவத்தில்; மண் மருத்துவப் பொருளாக பயன்படுகிறதை அறிய முடிகிறது. “தலைவலி, கண்நோய், உடல் சூடு, கை, கால் வீக்கம், முடி உதிர்தல், பொடுகு, தேமல், சிரங்கு, படை போன்ற நோய்களை மண் சிகிச்சை அளிப்பதன் மூலம் நல்ல பலனை அடையலாம்” என்பர். எனவே மண், மருத்துவக் கலைக்கும் பயனுடையதாய் உள்ளது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள புற்றுமண் இன்றும் நோய் தீர்க்கும் மருந்தாக பக்தியுடன் மக்களால் பூசப்பட்டு வருகிறது. மண் பேசும் சரித்திரத்தை உணர மண் வரலாறு அறிவது, காலத்தின் கட்டாயம் ஆகும்.

முனைவர் சுரேஷ்சிவன், ஜனாதிபதி விருது பெற்ற செம்மொழி இசைத்தமிழ் அறிஞர், மதுரை.