வானவில் : பஜாஜ் சேடக்கின் இரண்டு வேரியன்ட் ஸ்கூட்டர்


வானவில் : பஜாஜ் சேடக்கின் இரண்டு வேரியன்ட் ஸ்கூட்டர்
x
தினத்தந்தி 22 Jan 2020 10:04 AM GMT (Updated: 22 Jan 2020 10:04 AM GMT)

புத்தாண்டில் ஆட்டோமொபைல் துறையில் பல புதுமையான வாகனங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அந்த வரிசையில் முதலில் வந்துள்ளது பஜாஜ் நிறுவனத்தின் பேட்டரி ஸ்கூட்டர்.

பேட்டரி ஸ்கூட்டர் தயாரிப்பை உறுதி செய்த பஜாஜ் நிறுவனம் தற்போது அதற்கான முன்பதிவை தொடங்கியுள்ளது. முதல் கட்டமாக புனே மற்றும் பெங்களூரு நகரங்களில் இந்த பேட்டரி ஸ்கூட்டர்களை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. இரண்டு வேரியன்ட்களில் இது அறிமுகமாகியுள்ளது. தொடக்க நிலை மாடல் அர்பன் என்ற பெயரில் அறிமுகமாகியுள்ளது. இதன் விற்பனையக விலை சுமார் ரூ.1 லட்சம். அடுத்து இதில் பிரீமியம் மாடல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் விற்பனையக விலை சுமார் ரூ.1.15 லட்சம்.

பிரீமியம் மாடலில் கூடுதலாக சில கண்கவர் மெட்டாலிக் வண்ணங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. முன்புறம் டிஸ்க் பிரேக் இடம்பெற்றுள்ளது. அர்பன் மாடலில் மெட்டாலிக் வண்ணங்கள் கிடையாது. அதேபோல இரண்டு சக்கரங்களுக்கும் டிரம் பிரேக் வசதி மட்டுமே உள்ளது. அடுத்த கட்டமாக மும்பை, டெல்லி மற்றும் சென்னை நகரங்களில் இந்த ஸ்கூட்டர் அறிமுகமாகிறது. தொடக்கத்தில் கே.டி.எம். விற்பனையாளர்கள் மூலம் பேட்டரி ஸ்கூட்டர்களை விற்பனை செய்ய பஜாஜ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. முன்பதிவு முறை முற்றிலும் டிஜிட்டல் மயமாகும். நிறுவன இணையதளத்தில் ரூ.2 ஆயிரம் செலுத்தி முன்பதிவு செய்யலாம். பெங்களூருவில் 13 விற்பனையாளர்களும், புனேயில் 4 விற்பனையகங்களும் உள்ளன. புனேயில் வாடிக்கையாளர் மையம் ஒன்றும் உள்ளது. இதில் இந்த வாகனத்தை ஓட்டிப் பார்க்கும் வாய்ப்பும் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்படுகிறது.

இந்த பேட்டரி ஸ்கூட்டரில் 3 கிலோவாட் மற்றும் 4 கிலோவாட் எலெக்ட்ரிக் மோட்டாரும், பிரத்யேக டிரான்ஸ்மிஷனும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் உள்ள லித்தியம் அயன் பேட்டரி நிரந்தரமாக பொருத்தப்பட்டுள்ளது. இது ஒரு முறை சார்ஜ் செய்தால் எகானமி மோடில் 95 கி.மீ. தூரம் வரை ஓடும். ஸ்போர்ட் மோடில் 85 கி.மீ. வேகத்தில் ஓடும். இதை பிரீமியம் தயாரிப்பாக உருவாக்கியுள்ளது பஜாஜ் நிறுவனம். பெதர் டச் ஸ்விட்ச் கியர், புல் எல்.இ.டி. லைட், டிஜிட்டல் கன்சோல் உள்ளிட்ட பிரீமியம் அம்சங்கள் இதில் உள்ளன. இதில் டச் டவுன் மோட் எனும் வசதி உள்ளது. வாகனங்களை வேகமாக முந்திச் செல்ல வேண்டியிருந்தால் அப்போது இதை பயன்படுத்தலாம்.

இந்த ஸ்கூட்டருக்கு 3 ஆண்டு மற்றும் 50 ஆயிரம் கி.மீ. வரையிலான உத்தரவாதத்தையும் இந்நிறுவனம் அளித்து உள்ளது. இதில் உள்ள பேட்டரி முழுமையாக சார்ஜ் ஆக 5 மணி நேரம் ஆகும். 25 சதவீதம் சார்ஜ் ஆக ஒரு மணி நேரம் போதுமானது. சார்ஜிங் பாயிண்ட் வசதியையும் இந்நிறுவனம் அளிக்கிறது. இதை நிறுவனத்தின் தேர்ச்சி பெற்ற மெக்கானிக்குகள் வீட்டில் நிறுவித் தருவர்.

ஓராண்டுக்கு இலவசமாக இணையதள தகவல் தொகுப்பை இந்நிறுவனம் அளிக்கும். இதன் மூலம் ஸ்கூட்டரின் சார்ஜிங் மையம் இருக்குமிடம் உள்ளிட்ட விவரங்களை ஸ்மார்ட்போன் மூலம் வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்ளமுடியும். இப்போதைக்கு பஜாஜ் பேட்டரி ஸ்கூட்டருக்கு மிக நெருங்கிய அளவிலான போட்டி தயாரிப்பாக ஏதெர் 450 மற்றும் 450 எக்ஸ் மாடல் ஸ்கூட்டர்கள் உள்ளன.

Next Story