வீரத்திருமகன் நேதாஜி


வீரத்திருமகன் நேதாஜி
x
தினத்தந்தி 23 Jan 2020 4:46 AM GMT (Updated: 23 Jan 2020 4:46 AM GMT)

இன்று (ஜனவரி 23-ந் தேதி) நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்ததினம்.

ன்று (ஜனவரி 23-ந் தேதி) நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்ததினம்.

1937 பொதுத்தேர்தலுக்கு பிறகு சோர்வுற்றிருந்த காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் கொடுக்க நினைத்த காந்திஜி, குஜராத்தில் உள்ள தப்தி நதிக் கரையில் ஹரிபுரா என்ற ஊரில் 1938 பிப்ரவரியில் கோலாகலமாகக் கூடிய அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில் சுபாஷ் சந்திர போசை தலைவராக கொண்டு வந்தார்.

1939-ல் மத்திய பிரதேசத்தில் ஜபல்பூருக்கு அருகில் உள்ள திரிபுரியில் கூடிய அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டிற்கு மவுலானா அபுல்கலாம் ஆசாத்தை தலைவராகத் தேர்ந்தெடுக்க வேண்டுமென்று காந்தி விரும்பினார்.

தலைவர் பதவிக்கு போட்டியிடுவதில் சுபாஷ் உறுதியாக இருந்தார்.

தலைவர் பதவிக்கு போட்டியிருந்ததால் மவுலானா அபுல்கலாம் ஆசாத் போட்டியிட விரும்பவில்லை. சுபாஷ் சந்திரபோசிற்கு எதிராக பட்டாபி சீதாராமையாவை தலைவர் பதவிக்கு காந்தி நிறுத்தினார். தலைவர் தேர்தலில் அதிகமான வாக்குகளைப் பெற்று சுபாஷ் வெற்றி பெற்றார். தேர்தல் முடிவு பற்றி கருத்து தெரிவித்த காந்தி, ‘பட்டாபியின் தோல்வி என் தோல்வி’ என்று கூறியது தேசத் தலைவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

காந்தியின் எதிர்ப்பை மீறி சுபாஷ் சந்திரபோஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு பட்டாபி சீதாராமையாவை தோற்கடித்தாரே தவிர, காந்தியின் ஒத்துழைப்பில்லாமல் காங்கிரஸ் மகாசபையை நடத்திச் செல்ல அவரால் இயலவில்லை. வேறு வழியில்லாமல் காங்கிரசில் இருந்து வெளியேறி பார்வர்டு பிளாக் என்ற கட்சியை நிறுவினார்.

1941 -ல் கொல்கத்தாவை விட்டு மாறுவேடத்தில் வெளியேறிய சுபாஷ் சந்திரபோஸ் கைபர் கணவாய் வழியாக ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூல் போய்ச் சேர்ந்தார். அங்கிருந்து மாஸ்கோ சென்று ஜெர்மன் தலைநகரான பெர்லினை அடைந்தார். ஹிட்லரை சந்தித்து ஆதரவையும் பெற்றார். அங்கு அவருக்கு முழு ராணுவப் பயிற்சியும் அளிக்கப்பட்டது.

அந்நாளைய ஜெர்மனிய நீர் மூழ்கிக் கப்பலில் பயணம் செய்து டோக்கியோ செல்வதென முடிவு செய்தார். அபித்ஹாசன் என்பவரை துணைக்கு அழைத்துக்கொண்டார். இரண்டாவது உலகப்போர் உச்சக் கட்டம் அடைந்த காலத்தில் நீர் மூழ்கிக் கப்பலில் வட அட்லாண்டிக் கடல், தென் அட்லாண்டிக் கடல், இந்தியப் பெருங்கடல், பசிபிக் கடல் வழியாக 98 நாட்கள் நெடிய பயணம் செய்து சுமித்ரா தீவை அடைந்தார். சுமித்ரா தீவில் இருந்து மலேசியாவின் ஒரு பிரிவான பினாங்கு தீவிற்கு சென்றார். அதன்பின் விமானம் மூலம் ஜப்பான் தலைநகரான டோக்கியோவை 1943 ஜூன் மாதத்தில் சென்றடைந்தார்.

டோக்கியோவில் ஜப்பானிய நாட்டு பிரதமர் டோஜோ, ராணுவ தளபதி சூசியாமா ஆகியோரைச் சந்தித்தார். ஜப்பானிடம் தோல்வியடைந்த ஆங்கிலேயர் விட்டுச் சென்ற இந்திய வீரர்களையும், தளபதிகளையும் கொண்ட இந்திய தேசிய ராணுவம் அமைத்து, இந்தியாவை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை எதிர்த்துப் போர் தொடங்க வேண்டும் என்ற தன் திட்டத்தை அவர்களிடம் தெரிவித்து, அவர்களுடைய முழு ஆதரவையும், உதவியையும் பெற்றார்.

ஜூலை 2-ந் தேதி சுபாஷ் சந்திர போஸ் டோக்கியோவில் இருந்து முழு நம்பிக்கையுடன் சிங்கப்பூர் வந்து சேர்ந்தார். புரட்சி வீரர் ராஷ் பிகாரி, போஸிடமிருந்து இந்திய விடுதலைக் கழகத்தின் தலைமையை ஏற்றுக் கொண்டார். விடுதலை ராணுவத்தின் பிரதம தளபதியாகவும் பதவி ஏற்றார். அன்று முதல் அவர் ‘நேதாஜி’ என்று அழைக்கப்பட்டார்.

அக்டோபர் 21-ம் நாள் சிங்கத்தீவு என்று அழைக்கப்பட்ட சிங்கப்பூரில் நேதாஜி, விடுதலை இந்திய தற்காலிக அரசாங்கத்தைப் பிரகடனப்படுத்தினார். இந்த அரசை ஒன்பது நாடுகள் அங்கீகரித்தன.

இந்தியாவில் காங்கிரஸ் மகாசபையின் கொடியாக உள்ள கைராட்டை சின்னமுள்ள மூவர்ணக் கொடியையே இந்திய தேசிய ராணுவத்தின் கொடியாக வானளாவப் பறக்கவிட்டார். சிங்கப்பூரில் இருந்து வானொலியில் பேசும்போது நேதாஜி, மகாத்மா காந்தியின் வாழ்த்துகளை கோரினார்.

மலேசியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து உணர்ச்சிமிகு உரையை நிகழ்த்தி தன் விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவு திரட்டினார். பொருள் படைத்தவர்களிடம் நிதியுதவியும் பெற்றார். ஒவ்வொரு நிகழ்ச்சியின் முடிவிலும் ‘ஜெய்ஹிந்த்’ என முழங்கப்பட்டது.

சிங்கப்பூரில் இருந்து செயல்பட்டு வந்த தலைமை செயலகம் பிறகு ரங்கூன் மாநகருக்கு மாற்றப்பட்டது. பிரிட்டிஷாரை எதிர்த்து இந்திய விடுதலை போரைத் தொடங்க திட்டமிட்டார் நேதாஜி. இந்திய தேசிய ராணுவம் தாய்லாந்தின் வழியாக ‘டெல்லி சலோ’ கோஷத்தை முழங்கிக் கொண்டு முன்னேறியது. 1944-ம் ஆண்டு பிப்ரவரி 4-ந் தேதி இந்தியாவின் வடகிழக்கு எல்லையான அரக்கான் மலைத்தொடரில் ஆங்கில ராணுவத்தோடு போர் தொடங்கியது.

மார்ச் 18 -ந் தேதி பிரிட்டிஷ் ராணுவம் பின் வாங்க, விடுதலை ராணுவம் முன்னேறி பர்மா எல்லையை கடந்து முதன் முதலாக இந்திய மண்ணில் காலடி வைத்தது. இந்த சம்பவம் நேதாஜி தனி மனிதனாக சிங்கப்பூர் வந்து சேர்ந்த ஒன்பது மாதங்களில் நடந்தது. இது மாபெரும் சாதனையாக எல்லோராலும் கருதப்பட்டது. பர்மா இந்தியா எல்லையிலுள்ள இம்பால், விடுதலை ராணுவத்தின் வசமாகிவிட மூன்றே மைல்கள்தான் எஞ்சியிருந்தன.

வெற்றிக் கொடியை சில மணி நேரத்திற்குள் பறக்கவிட ஆசை கொண்டிருந்த விடுதலை வீரர்களின் முன்னேற்றத்திற்கு பெருத்த மழையினால் ஏற்பட்ட வெள்ளம் ஒரு பக்கம் தடையாகியது. விமானப் படையினருக்கு தேவையான உதவி கிடைக்கவில்லை. ஆங்கிலேய விமானம் ஒரு பக்கம் குண்டு மழை பொழிந்தது. சூழ்நிலை சாதகமாக இல்லாததால் ராணுவ வீரர்களைத் திரும்பிவிட நேதாஜி உத்தரவிட்டார். இந்த சமயத்தில் உலகப் போர் கடைசி கட்டத்தை எட்டியது. போரின் முடிவு பிரிட்டனுக்குச் சாதகமாகத் திரும்பியது. மீண்டும் இம்பாலைத் தாக்க விடுதலை ராணுவத்தின் இரண்டாவது பகுதி மேஜர் ஜெனரல் ஷா நவாஸின் தலைமையில் புறப்பட்டது. மேஜர் தில்லானும் கர்னல் சேகலும் உடன் சென்றனர்.

ஆங்கிலேயரின் புத்தம் புதிய பீரங்கிகள், புதுப் போர் முறைகளான எந்திர துப்பாக்கிகள், குண்டு வீசும் நவீன விமானங்கள் ஆகியவற்றின் முன் விடுதலை ராணுவம் தோல்வியடைய நேர்ந்தது. விடுதலை ராணுவத்திற்கு அது வீழ்ச்சியானாலும் இந்திய விடுதலைக்கு அந்தப் போராட்டம் எழுச்சியைத் தந்தது.

இந்தநிலையில் 1945-ம் ஆண்டு 15-ந் தேதி ஜப்பான் சரணாகதி அடைந்ததும் இனியும் சிங்கப்பூரில் இருப்பது உசிதம் அல்ல என்று முடிவு செய்த நேதாஜி விமானத்தில் தன் நண்பர்களுடன் பேங்காக் பயணமானார். 1945 ஆகஸ்டு 18-ந்தேதி பிற்பகல் 2 மணிக்கு பார்மோசா தீவில் உள்ள தைஹோகூ என்ற ஊரில் விமானத்தில் ஏறிய 35 நிமிடங்களில் விமான விபத்தில் நேதாஜி சிக்கிக் கொண்டார். இரவு 9 மணிக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நேதாஜி உயிர் நீத்தார் என்ற செய்தியை இங்கிலாந்து வானொலி அறிவித்தது. ஆனால், மாவீரன் நேதாஜி இறப்பு குறித்து தொடர்ந்து சர்ச்சைகள் இருந்து வருகின்றன.

ஆ.கோபண்ணா, தலைவர், தமிழக காங்கிரஸ் ஊடகத்துறை

Next Story