சிறப்புக் கட்டுரைகள்

தினம் ஒரு தகவல் : மூங்கில் கட்டுமானம் + "||" + Day One Information: Bamboo Construction

தினம் ஒரு தகவல் : மூங்கில் கட்டுமானம்

தினம் ஒரு தகவல் :  மூங்கில் கட்டுமானம்
உலகிலேயே மூங்கில் உற்பத்தியில் இரண்டாவது இடம் வகிக்கிறது இந்தியா. உலக மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மூங்கில் பொருட்களை கட்டுமானத்திற்கு திறம்பட பயன்படுத்துகின்றனர்.
இந்திய கட்டுமான துறையில் மட்டும் மூங்கில்களின் பயன்பாடு இன்னும் அதிகம் உணரப்படவேயில்லை. சூழலை மாசுபடுத்தாத, பாதுகாப்பான கட்டுமான பொருளாக மூங்கில் இருக்கிறது.

இந்தியாவில் 175 வகையான மூங்கில்கள் வளர்கின்றன. இந்தியாவின் மொத்த மூங்கில் வளர்ச்சியில் 20 சதவீத பங்கு வகிக்கும் மாநிலமாக மத்திய பிரதேசம் உள்ளது. வடகிழக்கு பிராந்தியத்தில் 28 சதவீத மூங்கில் மரங்கள் உள்ளன. இத்தனை மூங்கில் வளம் இருந்தும், வீட்டுக் கட்டுமான துறையினர் கான்கிரீட்டுக்கு நல்ல மாற்றாக இருக்கும் மூங்கிலை பயன்படுத்துவது குறித்து பரிசீலிக்கவே இல்லை.

பெரும்பாலான மக்கள் ஏழைகளாக இருக்கும் நம் நாட்டில், குறைந்த விலையில் அவர்களுக்கு குடியிருப்புகளை கட்டுவதற்கான தேவை இருக்கும் சூழலில் மூங்கில் நல்ல கட்டுமான பொருளாக மாற வேண்டியது அவசியம். மூங்கில் பொருளைப் பயன்படுத்துவதன் மூலம் செலவை குறைத்துவிட முடியும். அத்துடன் வீட்டின் ஆரோக்கிய சூழலும் மூங்கில் பொருட்களால் மேம்படும். ஒரு மூங்கில் கம்பு உற்பத்தி செய்யும் ஆக்சிஜன் ஒருவரின் வாழ்நாள் முழுமைக்கும் தேவையானது.

மூங்கில்கள் லேசானவை. அதே வேளையில் இரும்புக்கு நிகரான வலுவும் கொண்டவை. நில அதிர்வு வாய்ப்புள்ள பகுதிகளில் வீடுகளை பாதுகாப்பாக கட்டுவதற்கு மூங்கில் சிறந்த கட்டுமான பொருளாக இருக்கிறது. ஏனெனில் நில அதிர்வு விபத்துகளில் மூங்கில் லேசாக இருப்பதால் மனிதர் களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. அதே வேளையில் மூங்கிலின் தசைநார்கள் இரும்பை விட வலிமையாவை.

இரும்பு கம்பிகளால் செறிவூட்டப்பட்ட கான்கிரீட்டுக்கு மாற்றாக தற்போது மூங்கில்களால் செறிவூட்டப்பட்ட கான்கிரீட் பல நாடுகளில் வெற்றிகரமாக பயன்படுத்தப்படுகிறது. சுவர்கள், தூண்கள், கதவுகள், ஜன்னல்கள் மற்றும் தரைப்பூச்சுகளுக்கும் மூங்கில்கள் பயன்படுத்தப்படுகின்றன. காற்றாலைகளில் பயன்படுத்தப்படும் விசிறி பிளேடுகளைக்கூட மூங்கிலில் செய்கின்றனர்.

மூங்கில் பொருட்களினால் 2,500 பயன்பாடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. மூங்கிலை நாம் பயன்படுத்துவதில் பின்தங்கி இருக்கிறோம். வெள்ளையர்கள் மூங்கிலை ஏழைகளின் மரப் பொருள் என்று அழைத்தனர். அவர்கள் இந்தியாவுக்கு வருவதற்கு முன்பு நமது மரபான அறிவை பயன்படுத்தி நூற்றுக்கணக்கான உறுதியான கட்டிடங்களை நாம் கட்டியுள்ளோம்.

ஆனால் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் மரத்தை பயன்படுத்தினால்தான் கட்டிடம் உறுதியாக இருக்கும் என்ற மனநிலையை கொண்டுவந்தனர். ஏனெனில் ஐரோப்பாவில் அக்காலத்தில் மரம் மட்டுமே கிடைத்து வந்தது. அசாமில் நூறாண்டுகளுக்கும் மேல் தாக்குப்பிடிக்கும் மூங்கிலால் கட்டப்பட்ட கட்டிடங்கள் உண்டு. மூங்கில் இயற்கையாக மக்கி அழியக் கூடியது. ஆனாலும், வெகு காலம் தாக்கு பிடிப்பதற்கு நவீன வேதிச் செயல்முறைகளை குறைவான செலவில் செய்ய முடியும்.