நிதி ஆண்டின் முதல் 9 மாதங்களில் கச்சா எண்ணெய் உற்பத்தி 5.8 சதவீதம் சரிவடைந்தது; இறக்குமதிக்கான தேவை அதிகரிக்கிறது


நிதி ஆண்டின் முதல் 9 மாதங்களில் கச்சா எண்ணெய் உற்பத்தி 5.8 சதவீதம் சரிவடைந்தது; இறக்குமதிக்கான தேவை அதிகரிக்கிறது
x
தினத்தந்தி 24 Jan 2020 8:42 AM GMT (Updated: 24 Jan 2020 8:42 AM GMT)

நம் நாட்டில், நடப்பு நிதி ஆண்டின் முதல் 9 மாதங் களில் (2019 ஏப்ரல்-டிசம்பர்) கச்சா எண்ணெய் உற்பத்தி 5.8 சதவீதம் சரிவடைந்துள்ளது. எனவே எண்ணெய் இறக்குமதிக்கான தேவையும் அதிகரிக்கும் நிலை உள்ளது.

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

புதுடெல்லி

தேவை அதிகரிக்கிறது

2015-16-ஆம் நிதி ஆண்டில் இறக்குமதி எண்ணெய்க்கான தேவை 18.47 கோடி டன்னாக இருந்தது. அடுத்த ஆண்டில் அது 19.46 கோடி டன்னாக உயர்ந்தது. 2017-18-ல் 20.62 கோடி டன்னாக அதிகரித்தது. சென்ற நிதி ஆண்டில் (2018-19) 21.16 கோடி டன்னை எட்டியது.

நடப்பு 2019-20-ஆம் நிதி ஆண்டில் நம் நாடு 23.30 கோடி டன் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்ய வேண்டி இருக்கும் என்று மத்திய அரசு மதிப்பீடு செய்துள்ளது. ஆக, தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

நம் நாடு சவுதி அரேபியா, ஈரான், ஈராக் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்து வருகிறது. உள்நாட்டில் உற்பத்தி குறைவாக இருப்பதால் மொத்த கச்சா எண்ணெய் தேவையில் பெருமளவை இறக்குமதி வாயிலாகவே பூர்த்தி செய்ய வேண்டி இருக்கிறது. உலக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதியில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருக்கிறது.

தொடர் சரிவு

கச்சா எண்ணெய்க்கான தேவை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் உள்நாட்டு உற்பத்தியும் குறைந்து வருகிறது. 2015-16-ஆம் நிதி ஆண்டில் நாட்டின் எண்ணெய் உற்பத்தி 3.69 கோடி டன்னாக இருந்தது. 2016-17-ஆம் ஆண்டில் அது 3.60 கோடி டன்னாக குறைந்தது. 2017-18-ல் 3.57 கோடி டன்னாக சரிந்தது. சென்ற நிதி ஆண்டில் (2018-19) 3.42 கோடி டன்னாக சரிந்தது.

2.44 கோடி டன்

நடப்பு 2019-20-ஆம் நிதி ஆண்டில், டிசம்பர் வரையிலான 9 மாதங் களில் நம் நாட்டில் மொத்தம் 2.44 கோடி டன் கச்சா எண்ணெய் உற்பத்தி ஆகி உள்ளது. சென்ற நிதி ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது இது 5.8 சதவீதம் குறை வாகும். எனவே, முதல் 9 மாதங்களில் உள்நாட்டு எண்ணெய் தேவையில் இறக்குமதியின் பங்கு (83.5 சதவீதத்தில் இருந்து) 84.9 சதவீதமாக உயர்ந்துள்ளது.

2013-14-ஆம் நிதி ஆண்டில் நாட்டின் மொத்த எண்ணெய் தேவையில் இறக்குமதியின் பங்கு 77 சதவீதம் என்ற அளவில் இருந்தது. 2014-15-ஆம் ஆண்டில் மொத்த எண்ணெய் தேவைப்பாட்டில் இறக்குமதியின் பங்கு 78.3 சதவீதமாக உயர்ந்தது. 2015-16-ல் அது 80.6 சதவீதமாக உயர்ந்தது. 2016-17-ல் 81.7 சதவீதமாக அதிகரித்தது. 2017-18-ல் 82.9 சதவீதமானது. சென்ற நிதி ஆண்டில் (2018-19) 83.7 சதவீதத்தை எட்டியது.

2022-ஆம் ஆண்டிற்குள் நாட்டின் மொத்த எண்ணெய் தேவையில் இறக்குமதியின் பங்கை 67 சதவீதமாக குறைக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. ஆனால் இன்றைய நிலவரங்களை வைத்துப் பார்க்கும்போது 3 ஆண்டுகளுக்குள் இறக்குமதி தேவையை 67 சதவீதமாக குறைக்க நினைப்பது பகல் கனவாகத்தான் இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

இறக்குமதி செலவினம்

தேவை அதிகமாக இருப்பதால் நமது எண்ணெய் இறக்குமதி செலவினமும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2016-17-ஆம் நிதி ஆண்டில், நம் நாடு 7,020 கோடி டாலருக்கு (சுமார் ரூ.4.70 லட்சம் கோடி) எண்ணெய் இறக்குமதி செய்தது. 2017-18-ஆம் ஆண்டில் 8,800 கோடி டாலருக்கு இறக்குமதி செய்யப்பட்டது. சென்ற நிதி ஆண்டில் (2018-19) அது 11,190 கோடி டாலரை எட்டியது. நடப்பு நிதி ஆண்டில் 11,270 கோடி டாலர் (ஏறக்குறைய ரூ.8 லட்சம் கோடி) செலவிட வேண்டி இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

Next Story