குடியரசு தின விழா சிறப்பு விருந்தினர் ஜெயிர் போல்சனரோ


குடியரசு தின விழா சிறப்பு விருந்தினர் ஜெயிர் போல்சனரோ
x
தினத்தந்தி 25 Jan 2020 10:34 AM GMT (Updated: 25 Jan 2020 10:34 AM GMT)

பிரேசில் ஜனாதிபதி ஜெயிர் போல்சனரோ ஒரு உறுதியான மனிதராக கருதப்படுகிறார்; வலதுசாரி கடும் போக்காளர் மற்றும் வளர்ச்சியை முன்னெடுக்கும், சர்ச்சைக்குரிய அரசியல் வாழ்க்கையை கொண்ட தலைவர்.

சென்ற ஆண்டு நவம்பரில் பிரேசிலில் நடைபெற்ற 11-வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி,  2020 ஜனவரி 26-ல் நடைபெற உள்ள இந்திய குடியரசு தின விழாவின் சிறப்பு விருந்தினராக வரும்படி பிரேசில் ஜனாதிபதி ஜெயிர் போல்சனரோவுக்கு அழைப்பு விடுத்தார். 

பிரிக்ஸ் (பி.ஆர்.ஐ.சி.எஸ்) என்பது பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய நாடுகளின் மொத்த பொருளாதாரங்கள் அளவை பற்றி கோல்ட்மென் சாக்ஸ் என்ற பொருளியலாளர்(தென்ஆப்பிரிக்கா நீங்கலாக)2003-ல் உருவாக்கிய சுருக்கப் பெயராகும். டைம் பத்திரிகை உருவாக்கியுள்ள, உலகில் மிகவும் செல்வாக்கு மிக்க 100 மனிதர்கள் பட்டியலில் ஜனாதிபதி போல்சனரோவை, ஏப்ரல் 2019-ல் சேர்த்தது.

இந்த அழைப்பு, உலகில் பெரும் பொருளாதார வல்லமை கொண்ட நாடுகளுடனான உறவை பலப்படுத்துவதன் மூலம் இந்தியாவை  5 லட்சம் கோடி டாலர்  பொருளாதாரமாக வளர்த்தெடுக்க உறுதி பூண்டிருக்கும் இந்திய பிரதமர் அளித்துள்ள சமிக்ஞை என்று கருதப்படுகிறது. சீனாவுடனான சமீபத்திய உறவு மேம்பாட்டு நடவடிக்கைகளும் இதை காட்டுகிறது.

இந்தியா, பிரேசில் இடையே தூதரக உறவுகள் 1948-ல் ஏற்படுத்தப்பட்டது. ரியோ டி ஜெனிரோ வில் இந்திய தூதரகம் 1948-ல் திறக்கப்பட்டு, 1971-ல் பிரேசில்லாவிற்கு மாற்றப்பட்டது. ஜனாதிபதி போல்சனரோ,  இந்தியாவிற்கு வருகை தரும் நான்காவது பிரேசில் ஜனாதிபதி ஆவார். இவருக்கு முன்பு ஜனாதிபதி தில்மா ரூசெப் (மார்ச் 2012),  ஜனாதிபதி லூலா (2004, 2007 மற்றும் 2008) மற்றும் ஜனாதிபதி ஹென்றி கார்டொசோ (1996) ஆகியோர் இந்தியா வந்துள்ளனர்.

இந்திய தரப்பில் இருந்து, பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 2014-லும்,  பிரதமர் மன்மோகன் சிங் 2006-லும்,  ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன் 1998-லும், பிரதமர் நரசிம்ம ராவ் 1999-லும், பிரதமர் இந்திரா காந்தி 1968-லும்,   துணை ஜனாதிபதி டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் 1954-லும் பிரேசில் சென்றுள்ளனர். 1950 முதல்,   டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக, ஏதாவது ஒரு உலக நாட்டின் அதிபர் அல்லது பிரதமரை இந்தியா அழைக்கிறது. 1955-ல், இன்றும் உள்ள வடிவில், புது டெல்லி ராஜ்பாத்தில் நடைபெறும் குடியரசு தின அணி வகிப்பு உருவாக்கப்பட்டது.

ஜனாதிபதி ஜெயிர் போல்சனரோ

2020 குடியரசு தின விழாவின் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி போல்சனரோ,  ராணுவ அதிகாரியாக பணியாற்றி, ஓய்வு பெற்ற பின், அரசியல்வாதியாக மாறியவர். பிரேசிலின் 38-வது ஜனாதிபதியாக 2019, ஜனவரி 1-ந் தேதி பதவியேற்ற இவர் ஒரு சர்ச்சைக்குரிய அரசியல்வாதியாவார். 

அதி தீவிர வலதுசாரி கொள்கைகளுக்காக அறியப்பட்ட போல்சனரோ, 2018-ல் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் முன்பு, ரியோ டி ஜெனிரோ மாநிலத்தின் சார்பில், பிரேசில் நாடாளுமன்றத்தில் 1991 முதல் 2018 வரை பணியாற்றினார். 

காம்பினாஸில் (சாவோ பாலோ) 1955 மார்ச் 21 அன்று போல்சனரோ பிறந்தார்.  ராணுவ கல்லூரியில் 1977-ல் பட்டம் பெற்ற பின், பிரேசில் ராணுவத்தில் பணி புரிந்தார்.

1986-ல் வெஜா என்ற பிரபல செய்தி பத்திரிகைக்கு அளித்த பேட்டியில்,  ராணுவத்தினருக்கு அளிக்கப்படும் ஊதியம் மிகக் குறைவாக இருப்பதை பற்றி பேசியதன் மூலம் அரசியலில் முக்கியத்துவம் பெற்றார்.  பட்ஜெட்டில் செய்யபட்ட நிதி வெட்டுகளினால்,  ராணுவ தலைமையகம்,  அதிகாரிகளை பணி நீக்கம் செய்வதாகவும், ஒழுங்கு நடவடிக்கைகளின் விளைவாக அவர்கள் நீக்கப்படுவதாக ராணுவ தலைமையகம் அதிகாரபூர்வமாக சொல்லியிருப்பது தவறு என்றும் கூறியிருந்தார். 

இந்த பேட்டியை தொடர்ந்து அவரின் உயர் அதிகாரிகளின் கண்டிப்புக்கு ஆளானாலும், சக அதிகாரிகள் மற்றும் அவர்களின் மனைவிகளின் பாராட்டை போல்சனரோ பெற்றார்.  இதனால் பிரேசிலின் புதிய ஜனநாயக சிவில் அரசின் மீது அதிருப்தி கொண்ட பல கடும்போக்காளர்கள் மற்றும் வலதுசாரிகள் மத்தியில் புகழடைந்தார். 

1988-ல், ரியோ டி ஜெனிரோ மாநகராட்சியின் உறுப்பினராக சி.பி.டியின் சார்பில் (கிறிஸ்தவ ஜனநாயக கட்சி) போல்சனரோ தேர்ந்தெடுக்கப்பட்டு, 1991 வரை அதில் பணியாற்றினார். அவரின் வாழ்க்கை வரலாற்றை அவரின் மகன் பிளாவியோ எழுதியுள்ளார். அதில் “மாநகராட்சி வேட்பாளராக அவர் போட்டியிட காரணம்,  சில உயர் அதிகாரிகளின் துன்புறுத்தலில் இருந்து தப்பிக்க அவருக்கு அது தான் ஒரே வாய்ப்பாக இருந்தது தான். அரசியலில் அவர் நுழைந்தது சந்தர்ப்பவசத்தால் தான். ராணுவத்தில் பணியை தொடர்வதே அவரின் விருப்பம்“ என்று கூறப்பட்டுள்ளது.

1990 தேர்தல்களில், சி.பி.டி கட்சி வேட்பாளராக ரியோ டி ஜெனிரோ தொகுதியில் போட்டியிட்ட போல்சனரோ, நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1991 முதல் 2018 வரை தொடர்ந்து ஏழு முறை நாடாளுமன்ற வேட்பாள ராக பணியாற்றி, அரசியல் அனுபவமும், அந்தஸ்தும் அடைந்தார்.

ஜூலை 2018-ல், எதிர் வரும் ஜனாதிபதி தேர்தலில், சமூக தாராளவாத கட்சி (பி.எஸ்.எல்),  தனதுஅதிகாரபூர்வ ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக போல்சனரோ போட்டியிடுவார் என்று அறிவித்தது. பிரேசிலிய தொழிலாளர் மறுமலர்ச்சி கட்சியுடன் போல்சனரோ ஒரு கூட்டணியை அமைத்து, அதன் மூலம் “அனைத்திற்கும் மேலாக பிரேசில், அனைவருக்கும் மேலாக கடவுள்“ என்ற தேர்தல் கோஷத்தை உருவாக்க வகை செய்தார். 

ஆனால் இதை எதிர்த்து பிரேசிலின் உச்ச தேர்தல் நீதிமன்றத்தில், இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றை நீதிமன்றம் தள்ளுபடி செய்த பின், ஆகஸ்டு 2018-ல் அவர் அதிகாரபூர்வமாக ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். 

2018 அக்டோபரில் நடைபெற்ற தேர்தலில், 46 சதவீத வாக்குகளை பெற்று போல்சனரோ முதலிடத்தை பிடித்தார். ஆனால் வெற்றி பெறத் தேவையான 50 சதவீத வாக்குகளை பெற முடியவில்லை.  இரண்டாவது சுற்றில்,  55.13 சதவீத வாக்குகளை பெற்று, போல்சனரோ தேர்தலில் வெற்றி பெற்று, பிரேசிலின் 38-வது ஜனாதிபாதியாக உரிமை கோரினார்.

முன்னாள் ஜனாதிபதி மைக்கேல் மெமெரின் பதவி காலம் முடிந்த பின், 2019 ஜனவரி 1-ந் தேதி பதவி ஏற்றார். செப்டம்பர் 2018-ல், தேர்தல் பிரசாரத்தின் போது, ஜூயிஸ் டி போரோ நகரில் தனது ஆதரவாளர்களுடன் கலந்துரையாடிய போது, வயிற்றில் கத்தியால் குத்தப்பட்டார். 

சொந்த வாழ்க்கை

ஜனாதிபதி போல்சனரோ மூன்று முறை திருமணமானவர். அவருக்கு ஐந்து பிள்ளைகள்.  முதல் மனைவி ரோஜெரியா நான்டெஸ் பிராகா மூலம் மூன்று மகன்கள், இரண்டாவது மனைவி ஆனா கிரிஸ்டினா வலே மூலம் ஒரு மகன் மற்றும் தற்போதைய மனைவி மிசேல் டி பாலா ரெய்னால்டோ மூலம் ஒரு மகளும் உள்ளனர். அவரது செயலாளராக இருந்த மிசேலை அவர் 2007-ல் திருமணம் செய்தார். 

விமர்சனங்களை மின்னஞ்சலில் அனுப்ப : NRD.thanthi@dt.co.in

பிரேசில் - இந்திய உறவுகள்  

கோவா செல்லும் நீண்ட பயணத்தில் இரு இடை நிறுத்தமான பிரேசில். போர்ச்சுகீயர்களின் முக்கிய காலனியாக இருந்தது. இந்த போர்ச்சுகீய தொடர்பினால், இந்தியா மற்றும் பிரேசில் இடையே பல முக்கிய விவசாய பயிர்கள் பரிமாறப்பட்டன. காலனிய காலங்களில், இந்திய கால்நடைகளை பிரேசில் இறக்குமதி செய்தது. இன்று அங்கு உள்ள கால்நடைகளில் பெரும் பகுதி இந்தியாவில் இருந்து சென்ற ரகங்கள் தான்.
போர்ச்சுகீயர்கள் கட்டுபாட்டில் இருந்த கோவா மற்றும் இதர சில பகுதிகளின் விடுதலையின் போது, இரு நாடுகளுக்கும் இடையே உரசல் ஏற்பட்டது. இந்தியாவில் இருந்த போர்ச்சுகீய காலனி பகுதிகளை விட்டு வெளியேறும்படி இந்தியா வற்புறுத்தியது. கோவா மீதான போர்ச்சுகீயர்களின் உரிமை கோரலை பிரேசில் ஆதரித்தது. 

பல உள்நாட்டு சிக்கல்களினால் பலவீனமான நிலையில் இருந்த போர்ச்சுகலிடம் இருந்து, கோவாவை, ராணுவ நடவடிக்கை மூலம்  இந்தியா கைபற்றும் என்பது தெளிவான பிறகு, 1962-ல் பிரேசில் தனது நிலைபாட்டை மாற்றிக் கொண்டது.

போல்சனரோவை பற்றி டைம் பத்திரிகை
 

 டைம் பத்திரிகை உருவாக்கியுள்ள, உலகில் மிகவும் செல்வாக்கு மிக்க 100 மனிதர்கள் பட்டியலில் ஜனாதிபதி போல்சனரோவை, ஏப்ரல் 2019-ல் சேர்த்தது. 

 பிரேசில் ஜனாதிபதியாக பதவியேற்ற பின் மூன்று மாதங்களில்,  பிரேசிலில் கடந்த பத்தாண்டுகளாக தொடர்ந்த உயர் மட்ட ஊழல்கள் ஆட்சிகளுக்கு முற்றிலும் மாறுபட்ட ஆட்சியை முன்னெடுத்துள்ளார். அதிகரித்து வரும் கடன்களை மட்டுப்படுத்த தேவையான பொருளாதார சீர்திருத்தங்களை முன்னெடுக்க, கடந்த ஒரு தலைமுறையில், இவர் தான் மிகவும் நம்பத்தகுந்த மனிதராக உள்ளார். ஆபத்தான ஆணாதிக்க போக்குகளுக்கு ஒரு முன்மாதிரியாக உருவெடுத்துள்ள இந்த முன்னாள் ராணுவ அதிகாரி, ஓரினச்சேர்கையாளர்களை வெறுக்கும் மிகப்பிற்போக்கான தலைவராக, கலாசார போர் ஒன்றை முன்னெடுத்துள்ளார்

பிரேசில் பற்றி

அதிகாரபூர்வ பெயர்:  பிரேசில் கூட்டாட்சி குடியரசு
பரப்பளவு : 85.5 கோடி
சதுர கிலோமீட்டர்கள் (இந்தியாவை விட சுமார் 2.6 மடங்கு அதிகம்)
தலைநகர் : பிரேசில்லா
மொழி : போர்ச்சுகீஸ்
மக்கள் தொகை : 20.28 கோடி (2014 கணிப்பு)


Next Story