டெல்லியில் கெஜ்ரிவால் கரை சேருவாரா?


டெல்லியில் கெஜ்ரிவால் கரை சேருவாரா?
x
தினத்தந்தி 26 Jan 2020 5:06 AM GMT (Updated: 26 Jan 2020 5:06 AM GMT)

பிப்ரவரி 8-ந் தேதி அன்று, இந்திய தலைநகரான டெல்லியின் 1.47 கோடி வாக்காளர்கள், தங்களின் அடுத்த முதல்வரை தேர்தெடுக்க தேர்தலில் வாக்களிக்க இருக்கின்றனர்.

வ்வொரு டெல்லி வாழ் குடிமகனுக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் அளித்துள்ள 10 புதிய உறுதிமொழிகள் மற்றும் பொறுப்புள்ள சாதாரண மனிதன் என்ற அவரின் பிம்பம் ஆகியவை, டெல்லியை கைப்பற்ற திட்டமிடும் பா.ஜ.க.விற்கு பெரும் சவால்களாக உள்ளன.

டெல்லி மாநில முதல்-மந்திரியாக அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் வெற்றி பெறுவார் என்று கருத்துக் கணிப்புகள் மற்றும் அரசியல் ஆய்வாளர்கள் கூறினாலும், பிராந்திய அரசியல் தலைவர்கள், பா.ஜ.க. மற்றும் பா.ஜ.க. எதிர்ப்பாளர்கள், தேர்தல் களத்தை கூர்ந்து கவனித்து வருகின்றனர்.

பிப்ரவரி 8-ந் தேதி அன்று, இந்திய தலைநகரான டெல்லியின் 1.47 கோடி வாக்காளர்கள், தங்களின் அடுத்த முதல்வரை தேர்தெடுக்க தேர்தலில் வாக்களிக்க இருக்கின்றனர்.

மராட்டியம், அரியானா மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் தோல்வியை சந்தித்த பின் டெல்லியில் வெற்றி பெறத் துடிக்கும் பா.ஜ.க., மராட்டியம் மற்றும் ஜார்கண்டில் பா.ஜ.க. அல்லாத அரசுகள் உருவாக்கத்தில் சிறிய பங்கினை வகித்ததால் புத்துயிர் பெற்றுள்ள காங்கிரஸ் ஆகியவை இதர வலிமையான போட்டியாளர்கள். டெல்லியில் தொடர்ந்து நடைபெறும், குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு எதிர்ப்பு போராட்டங்கள், ஜே.என்.யு.வில் நடந்த வன்முறை சம்பவத்தினால் ஏற்பட்டுள்ள சர்ச்சை மற்றும் மாணவர்கள் போராட்டங்களை தூண்டி விடும் எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடு ஆகியவை அரசியல் களத்தை மேலும் சிக்கலாக்கியுள்ளன.

ஆட்சி மீதான அதிருப்திக்கும் தொடர்ச்சியான ஆட்சிக்கும் இடையே உள்ள முரண்பாடு, வளர்ச்சி அரசியலுக்கும், வெறுப்பு அரசியலுக்கும் உள்ள முரண்பாடு, உள்ளூர் மற்றும் தேசிய பிரச்சினைகளுக்கிடையே உள்ள முரண்கள், பிராந்திய தலைவருக்கும், தேசிய தலைவருக்கும் உள்ள முரண்பாடுகள் ஆகியவை டெல்லி தேர்தலை பாதிக்கும் என்பதால், இவை அரசியல் பிரசாரங்களை திட்டமிடுபவர்களின் வல்லமைக்கு சவாலாக இருக்கின்றன.

அசாதாரணமான போர்த்தந்திரம்

கெஜ்ரிவால், எப்போதும் ‘யாரும் நினைத்துப் பார்க்காத’ புதிய வகை போர்த்தந்திரங்களை வகுப்பவர் என்று அறியப்படுபவர். இவை அதிசயத்தக்க முறையில், ‘சாதாரண மனிதனின்’ வாக்குகளை பெற உதவி வருகிறது. அவரின் நடத்தை மற்றும் எளிய உடைகளின் மூலம் வெகு மக்களின் அன்பை அவர் ஏற்கனவே பெற்றுள்ளார்.

அவரின் அசாதாராணமான வழக்கத்திற்கேற்ப, ஜனவரி 19 அன்று, ‘கெஜ்ரிவாலின் உறுதிமொழி அட்டை’ ஒன்றை வெளியிட்டு, அதில் டெல்லியின் ஒவ்வொரு குடிமகனுக்கும் மலிவு விலையில் மருத்துவ வசதிகள், பெண்களின் பாதுகாப்பு, பெண்கள் மற்றும் மாணவர்களுக்கு இலவச பேருந்து பயண வசதி, மேம்படுத்தப்பட்ட அரசு பள்ளிகள், பட்டப்படிப்பு வரை அனைவருக்கும் கல்வி, மாநகர் மற்றும் யமுனை நதியை சுத்தப்படுத்துதல் உள்ளிட்ட 10 விஷயங்களை அளிக்க உறுதியளித்துள்ளார்.

இந்த குழப்பமற்ற நேரடியான செயல்பாட்டு முறை, மக்கள் நலன்களில் அக்கறை கொண்டவர் என்ற பிம்பம் ஆகியவை மூலம் 70 சட்டமன்ற தொகுதிகளுக்கான 2015 சட்டமன்றதேர்தலில் 67 இடங்களில் வென்று, பா.ஜ.க.வின் பலத்தை வெறும் 3 இடங்களாக குறைத்தார். இத்தனைக்கும் அன்று மோடி அலை உச்சத்தில் இருந்தது.

இதை மீண்டும் முன்னெடுத்த கெஜ்ரிவால், ஜனவரி 22-ந் தேதி தனது டெல்லி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த போது, எதிர்கட்சிகளை பற்றிய தனது நிலைப்பாட்டில் மாற்றத்தை வெளிப்படுத்தி பத்திரிகையாளர்களை ஆச்சரியப்படுத்தினார். அரசியல் சட்டப் பிரிவி 370 ரத்து மற்றும் குடியுரிமை திருத்த சட்டம் ஆகியவை பற்றி பா.ஜ.க. பெருமையாக பிரசாரம் செய்து வரும் வேளையில், கெஜ்ரிவால், தனது தேர்தல் பிரசாரத்தில் உள்ளுர் பிரச்சினைகளை மட்டும் முன்னெடுத்துள்ளார்.

அவரின் நிலைப்பாட்டை மாற்றியமைத்து, “அமித்ஷா மற்றும் அனைத்து பெருந்தலைவர்களும் தங்களின் உரைகளில் என்னை சாடுவதை மட்டும் செய்தனர். நான் அதுபோல் எதுவும் செய்யமாட்டேன். நாங்கள் யாரையும் சாட மாட்டோம். 70 ஆண்டுகளில் முதன் முறையாக மக்கள் பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளுக்காக வாக்களிக்க உள்ளனர். எங்களின் பிரசாரம் அனைத்தும், நேர்மறையான பிரசாரமாகவே இருக்கும்” என்றார்.

முதல்வராக யாரையும் முன்னிருத்தாத பா.ஜ.க.

பா.ஜ.க. தரப்பில் முதல்-மந்திரி வேட்பாளராக யாரையும் முன்னிறுத்த முடியாத நிலைமையையும் கெஜ்ரிவால் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டுள்ளார். “முதல்வராக அவர்கள் யாரையும் முன்னிறுத்த முடியவில்லை. மக்கள் இதை கேட்பதால், நாங்கள் இந்த கேள்வியை எழுப்புகிறோம். ஒரு கட்சி வெற்றி பெற்றால், யார் முதல்வராவார் என்பது மக்களுக்கு தெரிய வேண்டும்” என்றார். முன்னதாக, பா.ஜ.க. ஏழு முதல்-மந்திரி வேட்பாளர்களை கொண்டுள்ளதாகவும் கெஜ்ரிவால் கூறியிருந்தார்.

டெல்லி தேர்தல்களில் பிரதமர் மோடி தான் கட்சியின் முகமாக இருக்கிறார் என்று கூறிய பா.ஜ.க.வில் டெல்லி தலைவர்களை கிண்டல் செய்த கெஜ்ரிவால், மோடியின் முகத்தை பா.ஜ.க. பயன்படுத்தினாலும், அவர் டெல்லி முதல்-மந்திரியாக முடியாது என்றார்.

பா.ஜ.க. எதிர்கொண்டுள்ள சவால்கள்

பா.ஜ.க.வின் உள்ளூர் தலைமை இடையே கோஷ்டி மோதல்கள் வலுத்துள்ளன. கட்சியின் மாநிலத் தலைவரான மனோஜ் திவாரியை, கேபினெட் அமைச்சர் விஜய் கோயல் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் விஜேந்தர் குப்தா தலைமையிலான குழுக்கள் மறைமுகமாக எதிர்த்து வருகின்றன. மறைந்த தனது தந்தையான சாகேப் சிங் வர்மாவின் அரசியல் வாரிசாக தம்மை முன்னிறுத்திக் கொள்ளும் பிரவேஷ் வர்மாவை ஒரு கோஷ்டி முன்மொழிகிறது. பா.ஜ.க.வின் முன்னாள் மாநில தலைவரான சதீஷ் உபாதையா மற்றும் மத்திய மந்திரி ஹர்சவர்தன் ஆகியோரும் முதல்-மந்திரி போட்டியில் உள்ளதாக கருதப்படுகிறது.

மோடி அரசின் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக மாணவர்கள் மற்றும் பெண்களினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்கள் மற்றும் அவற்றை அடக்க காவல் துறை எடுத்த நடவடிக்கைகள் ஆகியவற்றை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பயன்படுத்தி, அதன் மூலம் மோடி அரசு சாதாரண மக்களின் உணர்வுகள் மற்றும் கவலைகளை பற்றி அக்கறையில்லாமல் இருப்பதாக ஒரு கருத்தை உருவாக்க முயல்கின்றனர்.

வெங்காய விலை உயர்வின் காரணமாக, 21 ஆண்டுகளுக்கு முன்பு, 1998-ல், டெல்லியில் சுஷ்மா சுவராஜ் தலைமையிலான பா.ஜ.க. அரசு அதிகாரமிழந்தது.

2013-ல் பிரதமர் வேட்பாளராக மோடி இருந்த போது எழுந்த வலிமையான மோடி அலையின் உதவியால் பா.ஜ.க. மீண்டும் ஆட்சியை பிடிக்கும் நிலையை நெருங்கியது.

ஆனால் பெரும்பான்மை பலம் கிடைக்காத நிலையில், ஆட்சியமைக்க கோராமல், உயர்ந்த தார்மீக நிலைப்பாட்டை எடுத்தது. இதையடுத்து, வெளியில் இருந்து காங்கிரஸ் கட்சி அளித்த ஆதரவை கொண்டு, அன்று அரசியலில் புதிதாக நுழைந்திருந்த கெஜ்ரிவால் ஆட்சியமைத்தார். 2013-ல் ஆம் ஆத்மி என்ற புதிய கட்சியை தொடங்கி, அன்றைய டெல்லி முதல்-மந்திரி ஷீலா தீட்சித் மற்றும் அவரின் காங்கிரஸ் கட்சியை அதிர செய்தார் கெஜ்ரிவால். காங்கிரஸ் கட்சி வெளியில் இருந்து ஆதரவளித்த நிலையில், கெஜ்ரிவால் 49 நாட்கள் டெல்லி முதல்-மந்திரியாக பணியாற்றினார்.



பூர்வாஞ்சலிகளின் வாக்கு வங்கி

டெல்லி மாநில தேர்தல்களில் பூர்வாஞ்சலி வாக்கு வங்கி முக்கிய பங்கு வகிக்கிறது. மொத்த டெல்லி வாக்காளர்களில் பூர்வாஞ்சலிகள் 33 சதவீதமாக, தோராயமாக 32 சட்டமன்ற தொகுதிகளில், பெரும்பாலும் அங்கீகாரம் இல்லாத காலனிகளில் வசிக்கின்றனர்.

2015-ல் ஏராளமான பூர்வாஞ்சலி வேட்பாளர்களை கெஜ்ரிவால் களமிறக்கினார். நடப்பு சட்டமன்றத்தில், கிழக்கு உத்தர பிரதேசம் மற்றும் பீகாரில் இருந்து குடியேறிய மக்களில் இருந்து, கோபால் ராஜ், சஞ்சை சிங், திலிப் பாண்டே மற்றும் சோம்நாத் பாரதி போன்ற முக்கிய தலைவர்கள் உள்ளிட்ட 13 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.

பா.ஜ.க.வின் பாரம்பரியமான வாக்கு வங்கி பஞ்சாபி - பனியாயக்கள் இருப்பதால், இவர்களை பா.ஜ.க. உதாசீனப்படுத்தி வந்தது. போஜ்பூரி பாடகர் மற்றும் சினிமா நட்சத்திரமான மனோஜ் திவாரியை கட்சியின் டெல்லி மாநிலத் தலைவராக நியமித்து, அதன் மூலம் இந்த வாக்கு வங்கியை வென்றெடுக்க இன்று பா.ஜ.க. முயல்கிறது.

எதிர்நோக்கியுள்ள சவால்கள்

கெஜ்ரிவாலை அவ்வப்போது அவருடைய சகாக்கள், அவருடன் இணைந்து கட்சியை உருவாக்கியவர்கள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்களினால், ஆணவம் மிகுந்தவர், சர்வாதிகார போக்கு கொண்டவர், ஆளும் அமைப்புக்கு எதிரானவர், வாக்குறுதிகளை கைவிட்டவர், பொய்யான சாதனைகளை பேசுபவர் என்றெல்லாம் குற்றம் சாட்டுவது வழக்கம்.

ஆனால் வெகு மக்கள் அவரின் நலத் திட்டங்களினால் ஏழைகள் பலன் அடைந்துள்ளதாக கூறுகின்றனர். மின்சாரம், கல்வி மற்றும் மருத்துவ வசதிகள் ஆகியவை கெஜ்ரிவாலின் சாதனைகளில் முக்கியமானவை.

பா.ஜ.க.வை சேர்ந்த இந்துத்துவ சார்புள்ள வாக்காளர்கள், கெஜ்ரிவாலை அந்த சித்தாந்ததிற்கு முரணானவராக கருதவில்லை என்று பல அரசியல் நோக்கர்கள் நம்புகின்றனர். இது டெல்லியில் நிறுவப்பட்ட, ‘மத்தியில் மோடி, டெல்லியில் கெஜ்ரிவால்’ என்ற கோஷத்தை தாங்கிய பதாகைகள் மற்றும் போஸ்டர்கள் மூலம் வெளிப்பட்டது. இவற்றின் அடிக்குறிப்புகள் பலவற்றிலும் பா.ஜ.க. தொண்டர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. இது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் வெளியில் தெரியாத, மறைமுக ஆதரவை காட்டுவதாக சிலர் கருதுகின்றனர். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பேராதரவுடன் நடத்தப்பட்ட, அன்னா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தில், ஆரம்ப காலங்களில் கெஜ்ரிவால் ஈடுபட்டிருப்பதையும் இவர்கள் குறிப்பிடுகின்றனர்.

மேலும் 2015-ல், காமன்வெல்த் விளையாட்டுகளில் ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட காங்கிரஸ் கட்சிக்கும், மறைந்த ஷீலா தீ்ட்சித்துக்கும், தேசிய அளவிலான ஊழல்களுக்கும் மாற்று ஒன்றை மக்கள் நாடினர்.

அரசியல் சட்டப் பிரிவு 370 நீக்கம், முத்தலாக் ஒழிப்பு மற்றும் குடியுரிமை திருத்த சட்டம் ஆகியவற்றிற்கு பிறகு, காங்கிரஸ் கட்சி, சாஹீன் பாக்கில் தொடரும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டங்களின் மூலம் டெல்லியில் உள்ள முஸ்லிம் வாக்காளர்களின் ஆதரவை மீட்டெடுக்க முயல்கிறது. மோடி எதிர்ப்பு பேசும், கெஜ்ரிவாலை நிராகரிக்கும் முஸ்லிம் வாக்கு வங்கி ஒன்று பெரிய அளவில் அங்கு உள்ளதாகவும், அதை கொண்டு தாம் மீண்டெழ முடியும் என்றும் காங்கிரஸ் தலைமை நம்புவதே இதற்கு காரணம்.

குடியுரிமை திருத்த சட்டம் பற்றி ஒரு வெளிப்படையான கருத்தை தெரிவிக்கவும், தெளிவான நிலைப்பாட்டினை எடுக்கவும் கெஜ்ரிவால் தயங்குவதை இஸ்லாமிய சமூகத்தினர் விருப்பவில்லை. தாம் இந்துக் கோவில்கள் மற்றும் சடங்குகளுக்கு செல்வதை பற்றிய பதிவுகளை கெஜ்ரிவால் சமூக ஊடங்களில் இடுவது, இந்த உணர்வை மேலும் அதிகரிக்க செய்கிறது.

இதனால் கெஜ்ரிவால் கரை சேருவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

விமர்சனங்களை மின்னஞ்சலில் அனுப்ப:

NRD.thanthi@dt.co.in

Next Story