தமிழகத்துக்கு புதிய ரெயில்கள் எதிர்பார்ப்பு


தமிழகத்துக்கு புதிய ரெயில்கள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 26 Jan 2020 5:45 AM GMT (Updated: 26 Jan 2020 5:45 AM GMT)

நாட்டின் முதுகெலும்பான ரெயில்வே திட்டங்களிலும், புதிய ரெயில்கள் இயங்குவதிலும் மிகப்பெரும் பின்னடைவை தொடர்ந்து தமிழகம் சந்தித்து வருகிறது.

நாட்டின் முதுகெலும்பான ரெயில்வே திட்டங்களிலும், புதிய ரெயில்கள் இயங்குவதிலும் மிகப்பெரும் பின்னடைவை தொடர்ந்து தமிழகம் சந்தித்து வருகிறது. அண்டை மாநிலமான கேரளாவுக்கு அதிக ரெயில்களை கேட்டு பெறுவதில் கேரள மக்கள் பிரதிநிதிகள் அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள். தமிழக மக்கள் பிரதிநிதிகள் அவ்வாறு ஆர்வம் காட்டுவதில்லை. இது தமிழக வளர்ச்சிக்கு மிகப்பெரும் பின்னடைவை ஏற்படுத்துகிறது.

கல்வி, வேலை, வியாபாரம் சம்பந்தமாக குமரி, நெல்லை, தூத்துக்குடி, மதுரை போன்ற மாவட்டங்களில் இருந்து பயணிகள் தினமும் ரெயில்களில் சென்னை வந்து செல்ல விரும்பினாலும், ரெயில்களில் டிக்கெட் முன்பதிவு கிடைக்காததால் பஸ்களில் வந்து செல்வதால் தென்மாவட்டங்களிலிருந்து பல ஆயிரக்கணக்கான பஸ்கள் சென்னைக்கு இயங்குகிறது. இதனால் சாலை விபத்துகள், உயிரிழப்புகள் என தொடர்ந்து தமிழகம் முதலிடம் பிடித்து வருகிறது.

கடந்த 5 ஆண்டுகள் கேரளா பெற்ற ரெயில்கள்:-

(1)புனலூர்-கன்னியாகுமரி பயணிகள் ரெயில், (2) திருவனந்தபுரம்-நிஜாம்முதீன் வாராந்தர ரெயில், (3) காசர்கோடு-முகாம்பிகை பயணிகள் ரெயில், (4) கொச்சுவேலி-ஈரோடு வாராந்திர ரெயில், (5) ஹத்தியார்-எர்ணாகுளம் வாராந்திர ரெயில், (6) ஹவுரா-எர்ணாகுளம் அந்தியோதியா வாராந்திர ரெயில், (7) புனலூர்-பாலக்காடு பாலருவி விரைவு ரெயில், (8)மங்களுர்-கொச்சுவேலி அந்தியோதியா வாரம் இருமுறை ரெயில், (9) கன்னூர்-ஆலபுழா தினசரி ரெயில், (10) கொச்சுவேலி-வானாசவாடி வாரம் இருமுறை ஹம்சப்பர் ரெயில், (11) எழும்பூர்-கொல்லம் தினசரி ரெயில், (12) எர்ணாகுளம்-வேளாங்கண்ணி வாராந்திர நிரந்திர சிறப்பு வண்டி (வழி) கோட்டையம் கொல்லம், தினசரி ரெயில் (13) கொச்சுவேலி-நிலம்பூர் தினசரி விரைவு வண்டி.

கடந்த 5 ஆண்டுகள் தமிழகம் பெற்ற ரெயில்கள்:- (1) தாம்பரம்-நாகர்கோவில் அந்தியோதியா தினசரி ரெயில், (2) கோயம்பத்தூர்-பெங்களுரு உதயா விரைவு ரெயில், (3) சென்னை-மதுரை வாராந்திர ரெயில் (4) எழும்பூர்-மதுரை தேஜா தினசரி ரெயில் (5) தாம்பரம்-நாகர்கோவில் வாரம் மூன்று முறை (6) எழும்பூர்-செங்கோட்டை சிலம்பு விரைவு ரெயில் வாரம் மூன்று நாட்களாக இயக்கப்படுகிறது.

தாம்பரத்தில் மின்சார ரெயில் பயணிகளுக்கான வசதி சீராக உள்ளன. தாம்பரம் ரெயில் நிலையம், சென்னை சென்டிரல், எழும்பூர் ரெயில் நிலையங்களுக்கு இணையாக கிரேடு-1 ஆக தரம் உயர்ந்துள்ளது. ஆனால் தாம்பரம் ரெயில்நிலையத்தில் அடிப்படை வசதிகள் சரியாக அமைக்கப்படவில்லை. தமிழகத்தில் புதிய ரெயில்களை இயக்க ரெயில்வே அதிகாரிகள் முனைப்பு காட்ட வேண்டும்.

ஏற்கனவே தாம்பரம், நாகர்கோவில் இடையே வாரத்தில் ஐந்து நாட்கள் ரெயிலை இயக்க ரெயில்வே வாரியம் அனுமதி அளித்தும் தாம்பரத்திலிருந்து நாகர்கோவிலுக்கு மூன்று நாட்கள் திங்கள், செவ்வாய், புதன் மட்டும் இயக்கப்படுகிறது. தொடர்ந்து வெள்ளி, சனிக்கிழமைகளில் சென்னை எழும்பூரிலிருந்து நாகர்கோவிலுக்கும், நாகர்கோவிலிருந்து எழும்பூருக்கும் ஞாயிறு, திங்கள்கிழமைகளிலும் ஐந்து நாட்களாக நீடித்துநாஞ்சில் அதிவிரைவு ரெயில் என்ற பெயரில் இயக்க வேண்டும்.

தென்மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று குமரி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், சாத்தூர், மதுரை, திண்டுக்கல் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வேளாங்கண்ணி சென்று வர இதுவரை ரெயில்வே நிர்வாகம் ரெயிலை இயக்க முன்வரவில்லை. ஆகவே சனிக்கிழமை மாலை 5மணிக்கு நாகர்கோவிலிருந்து நெல்லை, மதுரை, திருச்சி, தஞ்சாவூர் வழியாக வேளாங்கண்ணிக்கு அதிவிரைவு வாராந்திர ரெயிலாக தொடர்ந்து இயக்க வேண்டும். வேளாங்கண்ணியிலிருந்து ஞாயிறு மாலை 5,அல்லது 6மணி அளவில் புறப்பட வேண்டும். எழும்பூரிலிருந்து கொல்லம் செல்லும் அனந்தபுரி ரெயில் பதினெட்டு ஆண்டுகளாக சாதாரண விரைவு ரெயிலாக இயங்குகிறது. அதைஅதிவிரைவு ரெயிலாக இயக்க முனைப்பு காட்ட வேண்டும்.

இரவு 8.10 மணிக்கு மேல் நெல்லைக்கோ, நாகர்கோவிலுக்கோ, திருவனந்தபுரத்திற்கோ எழும்பூரிலிருந்து ரெயில்கள் இல்லை. இது பயணிகளுக்கு மிகுந்த சிரமத்தை உருவாக்குகிறது. ஆகவே 9.15 மணியளவில் எழும்பூரிலிருந்து திருவனந்தபுரத்திற்கு விழுப்புரம் திருச்சி, மதுரை, நெல்லை, நாகர்கோவில் டவுன் வழியாக புதிய அதிவிரைவு ரெயிலை இயக்க வேண்டும். குமரி முதல் கும்மிடிப்பூண்டி வரை 800 கிலோ மீட்டர் உள்ள ரெயில் பாதைகளில் தமிழ்நாடு ரெயில்கள் என்ற பெயரில் டெல்லி சென்று வரும் ரெயில்கள் தமிழகத்திற்குள் வெறும் 60 கிலோ மீட்டர் தூரம் மட்டுமே இயங்குகிறது. ஆகவே தென் தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் பயன்பெறும் வகையில் சென்னை-நியூடெல்லி நிஜி ரெயிலை எழும்பூர் வழியாக நாகர்கோவில் வரை நீட்டித்து இயக்குவதோடு தாம்பரம், விழுப்புரம், திருச்சி, மதுரை, நெல்லை ஆகிய இடங்களில் நிறுத்தி இயக்க வேண்டும்.

(6) மதுரையிலிருந்து வாரம் இரு முறை டெல்லி செல்லும் சம்பார்கிராண்டி ரெயிலை தூத்துக்குடி அல்லது நெல்லை வரை நீட்டித்தால் இரவு நேர பயணத்திற்கு மிகவும் வசதியாக இருக்கும். சென்டிரல் நாகர்கோவில் வாராந்திர ரெயிலில் திருச்சி செல்ல 6 அல்லது 8 பயணிகள் மட்டுமே பயணம் செய்கின்றனர். இதனால் நெல்லை, நாகர்கோவில், மதுரை செல்லும் பயணிகளுக்கு 2 மணி நேரம் தாமதம் ஆகி பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். ஆகவே இந்த ரெயில் திருச்சிக்கு செல்லாமல் கரூரிலிருந்து திண்டுக்கல், மதுரை, நெல்லை வழியாக நாகர்கோவிலுக்கு இயக்க வேண்டும். எழும்பூர்-செங்கோட்டை சிலம்பு ரெயிலை தினசரி இயக்க வேண்டும். தென் மாவட்டங்களுக்கு மின்சார ரெயில்கள் இயக்க வசதியாக கோவில்பட்டியிலோ, வாஞ்சிமணியாச்சியிலோ, நெல்லையிலோ பராமரிக்கும் நிலையம் அமைக்க வேண்டும். மின்சார ரெயில் என்ஜின் பழுதுபார்க்கும் லோகோ செட் அமைக்க வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகள் ரெயில்வே நிர்வாகமும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து செயல்பட்டு வரும் பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும்படி மத்திய அரசுக்கு அறிவுறுத்த வேண்டும்.

ஜெ.சூசைராஜ், பொதுச்செயலாளர், தென்னிந்திய ரெயில் பயணிகள் சங்கம்.

Next Story