சிறப்புக் கட்டுரைகள்

திருமணத்திற்கு முந்தைய கர்ப்பத்தால் ஏற்படும் தடுமாற்றங்கள் + "||" + By pre-marital pregnancy Stumbling blocks

திருமணத்திற்கு முந்தைய கர்ப்பத்தால் ஏற்படும் தடுமாற்றங்கள்

திருமணத்திற்கு முந்தைய கர்ப்பத்தால் ஏற்படும் தடுமாற்றங்கள்
பெண்கள் திருமணத்திற்கு முன்பே கர்ப்பம் ஆவது அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதில் அப்பாவி பெண்களே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.
பெண்கள் திருமணத்திற்கு முன்பே கர்ப்பம் ஆவது அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதில் அப்பாவி பெண்களே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். கல்விஅறிவின்மை, ஏழ்மை, விழிப்புணர்வின்மை ஆகிய மூன்றும்தான் அதற்கு முக்கிய காரணமாக இருந்துகொண்டிருக்கிறது. திருமணத்திற்கு முந்தைய கர்ப்பத்தை சமூகம் ஏற்றுக்கொள்வதில்லை. இந்த பாதிப்பிற்கு உள்ளாகும் பெண்களை எல்லைமீறியவளாகத்தான் இப்போதும் கருதுகிறது. அதனால் திருமணத்திற்கு முந்தைய கர்ப்பத்தை பெரும்பாலான குடும்பத்தினர் மறைக்கப்பார்க்கிறார்கள். குற்றவாளிகளாகும் ஆண்கள் இதனால் தப்பிக்கும் நிலை ஏற்பட்டுவிடுகிறது.

திருமணத்திற்கு முன்பே பாலியல் தொடர்புவைத்துக்கொள்ளக்கூடாது என்பதில் பெண்கள் உறுதியாக இருக்கிறார்கள். அதனால் அத்தகைய கர்ப்பத்தை அவமானமாக அவர்கள் கருதுகிறார்கள். காலத்திற்கு ஏற்ற மாற்றம் என்று பெண்கள் இதை சகித்துக்கொள்வதில்லை. ‘அது முழுக்க முழுக்க பாதுகாப்பற்ற நிலை. பெண்கள் தங்களைத் தாங்களே இழிவுபடுத்திக் கொள்ளும் செயல். அத்தகைய கர்ப்பத்தின் மூலம் பெண்கள் உடலளவிலும், மனதளவிலும் கடும் பாதிப்பிற்கு உள்ளாகிறார்கள்’ என்று அல்ட்ரா மாடர்ன் பெண்கள்கூட அடித்துச் சொல்கிறார்கள்.

காலம் வேகமாக மாறிக்கொண்டிருக்கிறது. கல்வி, வேலை, பயணரீதியாக ஆண்களும், பெண்களும் கலந்து பழகவேண்டியுள்ளது. பொழுதுபோக்கு என்ற பெயரில் இணைந்து, எல்லைமீறவும் செய்கிறார்கள். திருமண வயது வந்த பின்பும் திருமணம் செய்து கொள்ள விரும்பாத பெண்களும் பெருகிக்கொண்டிருக்கிறார்கள். ‘திருமணம் செய்துகொள்ளாமலே வாழ்க்கையை அனுபவிக்கலாம்’ என்ற சிந்தனை கொண்ட பெண்களும் உருவாகிவிட்டார்கள்.

இத்தகைய மாற்றத்திற்கு மேலைநாட்டு கலாசாரமும் ஒருவகையில் காரணம். ஆனால் அந்த நாடுகளில் திருமணத்திற்கு முன்பே ஒரு பெண் குழந்தை பெற்றுக்கொண்டாலும், அதற்கான பொறுப்பை அந்த நாட்டு அரசாங்கம் ஏற்றுக்கொள்கிறது. அதற்கான பராமரிப்பு, படிப்பு, மருத்துவம் போன்ற அனைத்தும் அந்த நாட்டிற்கான செலவினத்தில் சேர்ந்துவிடுகிறது. நம் நாட்டில் அப்படியல்ல. திருமணத்திற்கு முன்பே பிறக்கும் குழந்தையை சமூக குற்றவாளியாக பார்க்கும் அவலம்தான் இருந்துகொண்டிருக்கிறது. அதனால் திருமணத்திற்கு முந்தைய கர்ப்பத்தால் குழந்தை பிறந்துவிட்டால் அதனை கூடுமானவரை ஒதுக்கித்தள்ளவே முயற்சிக்கிறார்கள். அந்த குழந்தைகள் நாளடைவில் தாழ்வு மனப்பான்மைக்கு உள்ளாகி தன்னை ஒதுக்கிய சமூகத்தையே பழிவாங்கும் வெறியோடு சமூக குற்றவாளியாக உருவாகும் நிலையும் உருவாகிவிடலாம்.

அடித்தட்டு பெண்களே பெரும்பாலும் திருமணத்திற்கு முன்பு ஏமாற்றப்பட்டு கர்ப்பிணிகளாகிறார்கள். அதன் மூலம் அந்த பெண்களின் எதிர்காலமும், பிறக்கும் குழந்தைகளின் எதிர்காலமும் கேள்விக்குறியாகிறது. சம்பந்தப்பட்ட ஆண் பெரும்பாலும் தலைமறைவாகிவிடுகிறான். அல்லது தனக்கும் அதற்கும் சம்பந்தமே இல்லை என்பதுபோல் சமூகத்தில் நடமாடிக்கொண்டிருக்கிறான்.

நாம் கடைப்பிடிக்கும் கலாசாரத்தின் வெளிப்பாடுதான் நமது நாகரிகம். அதில் குறிப்பிடத்தக்கதாக இருப்பது, ஆண்-பெண் இருவரின் வாழ்க்கைமுறை. அந்த வாழ்க்கைமுறை தேசத்திற்கு தேசம் மாறுபடும். நாம் நமது நாட்டு கலாசாரத்தை கடைப்பிடிப்பதுதான் அதில் சரியானதாக இருக்கும். திருமணம் என்பது நமது நாட்டை பொறுத்தவரையில் சமூக அடையாளம். அந்த அடையாளத்தை அழிக்க முற்படும் போது, அவர்களை சமூகம் தனிமைப்படுத்த முயற்சிக்கிறது.

பெண்கள் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாவது, இந்தியாவில் பெரும் தவறாகவே பார்க்கப் படுகிறது. அதனால் அந்த கர்ப்பத்தை சமூகத்திடமிருந்து மறைக்கவே பெண்கள் விரும்புகிறார்கள். தவறான கர்ப்பத்தில் தடுமாறும் இன்றைய பெண்கள், அவசரப்பட்டு அதை அழிக்கவோ, மறைக்கவோ நினைக்கும்போது அது அவர்கள் உயிருக்கே ஆபத்தாகிவிடுகிறது. முரண்பாடான கர்ப்பமும், அதனால் ஏற்படும் பின்விளைவுகளும் முதலில் தனிநபர் பிரச்சினையாக இருந்தாலும், பின்பு அதுவே சமூக பிரச்சினையாக மாறிவிடுகிறது.

தேவையற்ற கர்ப்பத்தை அகற்றுவது என்பது திருமணமானவர்களுக்கு மட்டுமே கொண்டு வந்த நடைமுறை. திருமணமான பெண்களால் மட்டுமே கணவரின் ஒத்துழைப்போடு அதை நிதானமாக கையாள முடியும். திருமணமாகாத பெண்கள் கர்ப்பம் அடையும்போது அவர்கள் நிதானத்தை இழந்து அதை கலைக்க முன்வருகிறார்கள். அப்போது வெளியே தெரியாமல் அதை செய்து முடிக்கவேண்டும் என்ற பதற்றம்தான் ஏற்படும். அதை செய்யும் டாக்டரின் தகுதி பற்றி அவர்கள் சிந்திப்பதில்லை. அதனால் பெரும்பாலான அவசர கருக்கலைப்புகள் ஏதேனும் ஒரு விதத்தில் ஆபத்தாய் முடிகிறது.

ஆபத்தின்றி சரியான தருணத்தில், சரியான முறையில் கலைத்துவிட்டாலும், அவர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டுவிடுகிறார்கள். எதிர்காலத்தில் வேறு ஏதேனும் பரிசோதனைக்காக மருத்துவரை அணுக தயங்குவார்கள். திருமணத்தை தள்ளிப்போடவும் முயற்சி செய்வார்கள். திருமணத்திற்கு ஒப்புக்கொண்டாலும் முன்பு கருக்கலைப்பு செய்ததை வருங்கால கணவர் கண்டுபிடித்துவிடுவாரோ என்றும் கலங்குவார்கள். இதெல்லாம் மகிழ்ச்சியான மண வாழ்க்கைக்கும் தடையாகிவிடும். பழைய விஷயம் தெரிந்து யாராவது பிளாக் மெயில் செய்து நிம்மதியை கெடுக்கும் சூழ்நிலைகூட பல பெண்களின் வாழ்க்கையில் நடந்திருக்கிறது.

புதுடெல்லியை சேர்ந்த மகப்பேறு மருத்துவர் ஒருவர் இது பற்றி கூறும்போது, “பெண்கள் திருமணத்திற்கு முன்பு கர்ப்பம் அடைவது அதிகரித்து வருகிறது. ஒரு மருத்துவர் கர்ப்பத்தை கலைக்க மறுத்துவிட்டால் அடுத்த மருத்துவரை அணுகுகிறார்கள். உயிரைப் பற்றிக்கூட அப்போது அவர்கள் கவலைப்படுவதில்லை. அந்த பெண்ணின் குடும்பத்தினரும் இந்த விஷயத்தில் முரட்டுத்தனமாக நடந்துகொள்கிறார்கள்” என்கிறார்.

பெண்களின் உடலும், மனமும் புனிதமானது. அந்த புனிதத்தை காக்கவேண்டும் என்றால், திருமணத்திற்கு முந்தைய உடலுறவை தவிர்க்கவேண்டும்.