இரண்டு தினங்கள் தொடர் சரிவுக்கு பின் சென்செக்ஸ் 232 புள்ளிகள் ஏற்றம் நிப்டி 74 புள்ளிகள் முன்னேறியது


இரண்டு தினங்கள் தொடர் சரிவுக்கு பின் சென்செக்ஸ் 232 புள்ளிகள் ஏற்றம் நிப்டி 74 புள்ளிகள் முன்னேறியது
x
தினத்தந்தி 30 Jan 2020 9:00 AM GMT (Updated: 30 Jan 2020 9:00 AM GMT)

இரண்டு தினங்கள் தொடர் சரிவுக்கு பின் புதன்கிழமை அன்று பங்கு வர்த்தகம் ஒரளவு விறுவிறுப்பாக இருந்தது.

மும்பை

இரண்டு தினங்கள் தொடர் சரிவுக்கு பின் புதன்கிழமை அன்று பங்கு வர்த்தகம் ஒரளவு விறுவிறுப்பாக இருந்தது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 232 புள்ளிகள் ஏற்றம் கண்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 74 புள்ளிகள் முன்னேறியது.

நிதி நிலை முடிவுகள்

பல முன்னணி நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள் சிறப்பாக இருந்ததால் முதலீட்டாளர்கள் உற்சாகத்துடன் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டனர். அன்னிய முதலீடு போன்ற வெளி நிலவரங்களும் சாதகமாக இருந்தது. பிற நாடுகளிலும் பங்கு வியாபாரம் திருப்திகரமாக இருந்தால் இங்கும் சந்தைகள் ஏற்றம் கண்டன.

அந்த நிலையில், மும்பை பங்குச் சந்தையில் நுகர்பொருள் துறை குறியீட்டு எண் அதிகபட்சமாக 1.44 சதவீதம் உயர்ந்தது. அடுத்து தொழில் துறை குறியீட்டு எண் 1.23 சதவீதம் அதிகரித்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவனப் பங்குகளில் 22 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தது. 8 நிறுவனப் பங்குகளின் விலை சரிந்தது.

இந்தப் பட்டியலில் பஜாஜ் பைனான்ஸ், நெஸ்லே இந்தியா, ஐ.டி.சி., இன்போசிஸ், எல் அண்டு டி, டாட்டா ஸ்டீல், டெக் மகிந்திரா, எச்.சி.எல். டெக்னாலஜிஸ், என்.டி.பி.சி., எச்.டீ.எப்.சி. வங்கி உள்ளிட்ட 22 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தது. அதே சமயம் டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ், எச்.டீ.எப்.சி., அல்ட்ராடெக் சிமெண்ட், டைட்டான் கம்பெனி, சன் பார்மா, ஐசிஐசிஐ வங்கி உள்பட 8 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தது.

சென்செக்ஸ்

மும்பை பங்குச்சந்தையில், வர்த்தகத்தின் இறுதியில் சென்செக்ஸ் 231.80 புள்ளிகள் அதிகரித்து 41,198.66 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 41,334.86 புள்ளிகளுக்கும், குறைந்தபட்சமாக 41,108.19 புள்ளிகளுக்கும் சென்றது.

இந்தச் சந்தையில் 1,268 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், 1,246 நிறுவனப் பங்குகளின் விலை சரிந்தும் இருந்தது. 165 நிறுவனப் பங்குகளின் விலையில் மாற்றம் இல்லை. நேற்று மொத்த வர்த் தகம் ரூ.2,230 கோடியாக குறைந்தது. கடந்த செவ்வாய்க் கிழமை அன்று அது ரூ.2,383 கோடியாக இருந்தது.

தேசிய பங்குச்சந்தை

தேசிய பங்குச்சந்தையில், வர்த்தகத்தின் இறுதியில் நிப்டி 73.70 புள்ளிகள் ஏற்றம் கண்டு 12,129.50 புள்ளிகளில் முடிவுற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 12,169.60 புள்ளிகளுக்கும், குறைந்தபட்சமாக 12,103.80 புள்ளிகளுக்கும் சென்றது.

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

Next Story