முன்பேர வணிக கணக்கு முடிப்பு தினத்தில் சென்செக்ஸ் 285 புள்ளிகள் இழப்பு நிப்டி 94 புள்ளிகள் இறங்கியது


முன்பேர வணிக கணக்கு முடிப்பு தினத்தில் சென்செக்ஸ் 285 புள்ளிகள் இழப்பு நிப்டி 94 புள்ளிகள் இறங்கியது
x
தினத்தந்தி 31 Jan 2020 10:40 AM GMT (Updated: 31 Jan 2020 10:40 AM GMT)

முன்பேர வணிக கணக்கு முடிப்பு தினமான வியாழக் கிழமை அன்று பங்கு வர்த்தகம் பின்னடைவை சந்தித்தது.

மும்பை

முன்பேர வணிக கணக்கு முடிப்பு தினமான வியாழக் கிழமை அன்று பங்கு வர்த்தகம் பின்னடைவை சந்தித்தது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 285 புள்ளிகளை இழந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 94 புள்ளிகள் இறங்கியது.

இறுதி வியாழக்கிழமை

மாதத்தின் இறுதி வியாழக்கிழமை என்பதால் பங்கு முன்பேர வணிகப் பிரிவில் நேற்று ஜனவரி மாதத்திற் கான கணக்கு முடிக்கப்பட்டது. பொதுவாக இந்த நாளில் பங்குகள் அதிக அளவில் விற்பனை செய்யப்படும் என்பதால் சந்தைகள் சரிவைச் சந் திப்பது வழக்கம். அதற்கேற்ப நேற்று பங்கு வியாபாரம் படுத்தது. மேலும் மற்ற ஆசிய நாடுகளில் பங்கு வர்த்தகம் சரிவு கண்டதும், ஐரோப்பாவில் சந்தைகள் சரிவுடன் தொடங்கியதும் இங்கு பாதிப்பு ஏற்படுத்தியது.

அந்த நிலையில், மும்பை பங்குச் சந்தையில் எரிசக்தி துறை குறியீட்டு எண் அதிகபட்சமாக 2.29 சதவீதம் குறைந்தது. அடுத்து எண்ணெய் மற்றும் எரிவாயு துறை குறியீட்டு எண் 1.83 சதவீதம் சரிந்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவனப் பங்குகளில் 8 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தது. 22 நிறுவனப் பங்குகளின் விலை சரிந்தது.

இந்தப் பட்டியலில் பஜாஜ் ஆட்டோ, ஐசிஐசிஐ வங்கி, பவர் கிரிட், எச்.டீ.எப்.சி., ஏஷியன் பெயிண்ட், எல் அண்டு டி உள்ளிட்ட 8 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தது. அதே சமயம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், நெஸ்லே இந்தியா, இண்டஸ் இந்த் வங்கி, அல்ட்ராடெக் சிமெண்ட், மகிந்திரா அண்டு மகிந்திரா உள்பட 22 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தது.

மும்பை பங்குச்சந்தை

மும்பை பங்குச்சந்தையில், வர்த்தகத்தின் இறுதியில் சென்செக்ஸ் 284.84 புள்ளிகள் குறைந்து 40,913.82 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 41,380.14 புள்ளிகளுக்கும், குறைந்தபட்சமாக 40,829.91 புள்ளிகளுக்கும் சென்றது.

இந்தச் சந்தையில் 772 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், 1,662 நிறுவனப் பங்குகளின் விலை சரிந்தும் இருந்தது. 163 நிறுவனப் பங்குகளின் விலையில் மாற்றம் இல்லை. நேற்று மொத்த வர்த்தகம் ரூ.1,852 கோடியாக குறைந்தது. கடந்த புதன் கிழமை அன்று அது ரூ.2,230 கோடியாக இருந்தது.

நிப்டி

தேசிய பங்குச்சந்தையில், வர்த்தகத்தின் இறுதியில் நிப்டி 93.70 புள்ளிகள் சரிவடைந்து 12,035.80 புள்ளிகளில் முடிவுற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 12,150.30 புள்ளிகளுக்கும், குறைந்தபட்சமாக 12,010.60 புள்ளிகளுக்கும் சென்றது.

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

Next Story