தஞ்சை பெரிய கோவில் கருவறை மகத்துவம்


தஞ்சை பெரிய கோவில் கருவறை மகத்துவம்
x
தினத்தந்தி 5 Feb 2020 8:37 AM GMT (Updated: 5 Feb 2020 8:37 AM GMT)

உலகப் பாரம்பரிய சின்னமாக ஐக்கிய நாட்டு பண்பாட்டு கல்வி நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டுள்ள தஞ்சாவூர் பெரிய கோவிலில் இன்று (5-ந்தேதி) குடமுழுக்கு மிகச் சிறப்பாக நடைபெறுகிறது.

ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் இன்றும் புதுப்பொலிவுடன் விளங்கும் இக்கோவிலை இந்தியாவின் மிக உயரமான விமானமாக கோவிலின் கருவறையின் மீது அமைத்த பெருமை சோழப் பேரரசன் முதலாம் ராஜராஜனையே சாரும். இக்கோவிலை பார்த்து உலகமே வியக்க வேண்டும் என்ற மிக உயர்ந்த எண்ணத்துடன் கருவறையை உபபீடம் கொண்டு மிக உயரமாக நிர்மாணித்தார். 

மன்னர் ராஜராஜன் கோவிலைக் கட்டுவதற்கு முன்பாகவே கோவிலின் மூலவரான 13அடி உயர லிங்க வடிவ சிவன் பிரதிஷ்ட்டை செய்யப்பட்டு அதனைச் சுற்றி கருவறைச் சுவரை கட்ட ஆரம்பித்தது கோவில் கலை வரலாற்றில் புதுமைமிக்கது. இக்கோவிலின் ஆவுடையார் கொண்ட லிங்கத் திருமேனி மிகப்பெரியது. எனவே அதனை கருவறையை கட்டிய பின் நுழைவாயில் வழியாக எடுத்துச் செல்வது என்பது இயலாது என்று கருதிய கோவில் கட்டிட வல்லுனர்களான ராஜராஜ பெருந்தச்சன் என்பவரும் குஞ்சரமல்ல பெருந்தச்சன் என்பவரும் லிங்கத் திருமேனியை முதலிலேயே வைத்து விட்டு அதனைச் சுற்றிக் கருவறைச் சுவரை அமைத்தனர்.

கருவறையை சுற்றி மற்றொரு சுவரையும் எழுப்பி கோவிலை பிரமீடு அமைப்பில் 216 அடி உயரமுடையதாக உருவாக்கினர். பிரமீடு அமைப்பு இக்கருவறையின் இரண்டாவது தளத்தில் இருந்து தான் தொடங்குகிறது. 13 தள அமைப்பில் கட்டப்பட்ட இக்கோவிலின் விமானம் சிறப்பான கருங்கற்களைக் கொண்டு அமைக்கப்பட்டது. 

எந்த வித மேல் பூச்சும் அன்றி முற்றிலும் கருங்கல்லைக் கொண்டு அமைக்கப்பட்ட இக்கருவறையின் உட்புறம் 216 அடி முடிய வெற்றிடமாகவே அமைக்கப்பட்டுள்ளமை சோழர் கால கட்டிடக்கலை வல்லுனர்களின் திறமையை எடுத்தியம்புகிறது.

இக்கோவில் கருவறையின் வெளிப்புறச் சுவர்களின் இரு பக்கங்களிலும் திருச்சுற்றுப் பகுதியில் சோழர்கால ஓவியர்களின் துணையுடன் அழகான ஓவியங்கள் பல தீட்டப்பட்டுள்ளன. இவற்றில் தட்சிணாமூர்த்தி அமர்ந்த நிலையும் சுந்தரரைத் தடுத்தாற் கொண்ட நிகழ்வுகளும் ராஜராஜன் தனது குடும்பத்தாருடன் வணங்கும் சிதம்பரம் நடராஜர் ஆலயத்தையும் சிவன் பார்வதி திருமண கோலத்தையும் ராவண அனுக்கிரக நிகழ்ச்சியையும் திரிபுராந்தகர் எனப்படும் சிவன் முப்புறம் எரித்த நிகழ்ச்சியையும் இயற்கையான இலைகளையும் கற்களின் வண்ணங்கள் கொண்டும் சுதை ஓவியமாகத் தீட்டியுள்ளார். 

இவ்ஓவியங்கள் அனைத்தும் இந்திய ஓவியக் கலை வரலாற்றில் சிறப்பிடம் மிக்கவை. இங்குள்ள ஆடல் மகளிரின் ஓவியங்கள் இன்றைய உலகப் புகழ்பெற்ற பிற்கால “மோனாலிசா” ஓவியத்தை விட மிகச் சிறப்பானவை. ராஜராஜன் மற்றும் அவரது குல குரு அல்லது கருவூர் தேவரின் ஓவியமும் மிகச் சிறப்பு மிக்க ஓவியமாகும்.

ராஜராஜன் காலத்தில் இக்கோவிலைக் கட்டி முடித்தபின் குடமுழுக்கு நிகழ்ச்சியை அனைவரும் காணும் வண்ணம் மிகச் சிறப்பாக இம்மன்னன் செய்துள்ளதை சில ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட ஓவியத்தின் மூலம் அறிய முடிகிறது. ராஜராஜன் குடமுழுக்கை செய்துள்ளான் என்பதற்கு இவ்வோவியம் சிறந்த எடுத்துக்காட்டாகும். இக்கோவிலின் கருவறையின் மேல் உள்ள முதல் தளத்தில் ஆடல் கலைக்கு சிறப்பிடம் அளிக்கும் வகையில் பரத நாட்டியத்தின் 108 ஆடல் வகைகளில் 81 ஆடல் மகளிரின் புடைப்புச் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இத்தளத்திலும் சோழர்கால ஓவியங்கள் அழிந்த நிலையில் அதன் சுவடுகள் உள்ளன. 

கருவறையின் முன்பக்கம் இரு தள அமைப்பில் அர்த்த மண்டபம் மகா மண்டபம் ஆகியவற்றை ராஜராஜன் அமைத்தார். பிற்காலத்தில் முதல் தளம் முற்றிலுமாக விழுந்துள்ளது. முதல் தளத்தின் சில சுவர் பகுதிகள் மட்டும் இப்பொழுது எஞ்சியுள்ளன. இரு தள அமைப்புடைய மண்டபங்களை ராஜராஜன் இக்கோவிலில் அமைத்துள்ளமை தமிழகத்தில் வேறு எங்கும் காண முடியாது.

இக்கோவிலின் முன் கோபுரம் கேரளாந்தகன் திருவாயில் என வழங்கப்படுகிறது. இரண்டாவது கோபுரம் ராஜராஜன் திருவாயில் என அழைக்கப்பட்டது. இதனை இணைத்து திருச்சுற்று மாளிகையை இரண்டு அடுக்குகளாக இம்மன்னனின் படைத்தளபதி கிருஷ்ணன் ராமன் என்பவர் கட்டியுள்ளார்.

இக்கோவிலில் 150-க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் உள்ளன. பராந்தக சோழனின் கல்வெட்டுகளின் சிதைவுகளும் ராஜராஜனுக்கு முன்பு ஆட்சி புரிந்த அவரது தந்தை சுந்தர சோழரின் கல்வெட்டுக் கற்களும் மண்டபப் பகுதியில் உள்ளன. ராஜராஜன் இக்கோவிலுக்கு பல கொடைகள் அளித்துள்ளான். பொன் வைடூரியம் வைரம் நவரத்தினக் கற்கள் வெள்ளிப் பாத்திரங்கள், பொன் அணிகலன்கள் ஆகியவற்றை ஆடவல்லான் என்னும் எடைக்கருவியால் அளவிட்டு அளந்து கொடையாக அளித்துள்ளதை கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. 

இங்கு அண்மைக் காலங்களில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கல்வெட்டில் இக்கோவிலின் 216 அடி உடைய விமானத்தின் நான்கு பக்கங்களுக்கும் அடி முதல் முடி வரை பொன் தகடு கொண்டு வேய்ந்துள்ளான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது சோழர்களின் பொருளாதார நிலையில் உயர்ந்து இருந்தனர் என்பதைத் தெரிவிக்கின்றது.

சமூகத்தின் பல்வேறு நிலையில் இருந்த மக்களும் இக்கோவிலில் பணியாற்றியுள்ளனர். ராஜராஜனின் ஆட்சிக் காலம் பொற்காலம் எனச் சொல்வதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. உலகமே வியக்கும் வண்ணம் அற்புதமான கோவிலைக் கட்டிய ராஜராஜனுடன் இக்கோவிலுக்கு ஒவ்வொரு வகையிலும் பணியாற்றிய அனைவரது பெயர்களும் இக்கோவிலின் சுவர்களில் கல்வெட்டுகளாக வெட்டப்பட்டுள்ளன. 

சோழர் ஆட்சியில் மன்னனுக்கு இணையாக பாமர மக்களும் கருதப்பட்டனர் என்பது இதன் மூலம் விளங்கும். ராஜராஜன் அனைத்து சமயங்களுக்கும் முதலிடம் அளித்தார். புத்தரின் சிற்பம் மற்றும் புத்தரின் ஓவியம் இக்கோவிலில் இடம் பெற்றிருப்பது இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. பார் போற்றும் மன்னனாக விளங்கிய மாமன்னன் ராஜராஜனின் பெயர் தஞ்சைப் பெரிய கோவில் போன்று என்றும் வானுயர விளங்கும் என்பதில் ஐயமில்லை.

- சு.ராஜவேலு, வருகைப் பேராசிரியர் அழகப்பா பல்கலைக்கழகம்

Next Story