நல்லதை சொல்லும் நாட்டுப்புற கலைகள்


நல்லதை சொல்லும் நாட்டுப்புற கலைகள்
x
தினத்தந்தி 9 Feb 2020 7:23 AM GMT (Updated: 9 Feb 2020 7:23 AM GMT)

மக்களை வெகுவாக கவரும் நாட்டுப்புற நடனங்களில் ஒன்று, வைந்தானை ஆட்டம்.

க்களை வெகுவாக கவரும் நாட்டுப்புற நடனங்களில் ஒன்று, வைந்தானை ஆட்டம். புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்த ஆட்டம் பரவலாக நிகழ்த்தப் படுகிறது. இது பாட்டுக்குரிய ஆட்டமாக நிகழ்கிறது.

குழுவாக சேர்ந்து இதனை ஆடுவார்கள். உத்தேசமாக 30 கலைஞர்கள் இடம்பெறுவதுண்டு. 18 செ.மீ. நீளமுள்ள மரக்குச்சியை கையில்வைத்து அடித்துக்கொண்டு பாடியபடியே ஆடுவார்கள். வட்ட வடிவமாக இந்த ஆட்டம் நடைபெறும். வட்டமாக ஆடும் குழுவின் நடுவில் ஒரு கல் வைக்கப்பட்டிருக்கும். அந்த கல்லை பெண் தெய்வமாக கருதி அதனை சுற்றி இசைக்கு தகுந்தாற்போல் வைந்தானை ஆட்டத்தை நிகழ்த்துவார்கள். இதுவும் ஒரு வகை கோலாட்டமாக கருதப்படுகிறது.

இந்த நாட்டுப்புற ஆட்டத்திற்கு புராண தொடர்பும் இருக்கிறது. அது குறித்த தகவல்: தேவர்கள் உலகம் அப்போது போர்க்களம்போல் இருந்தது. அவர்களை அழித்தொழிப்பதை தன் பிறப்பின் லட்சியமாக கொண்டு பந்தாசுரன் என்ற அசுரன் போரிட்டான். அவனை அழிக்கும் நோக்கில் தேவர்கள் களமிறங்கினார்கள்.

அந்த போரில் தேவர்கள் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக பார்வதி தேவி 9 நாட்கள் கடும் தவம் புரிந்தார். இதனால் அவரது முகம் பொலிவிழந்து கருமை நிறத்துக்கு மாறுகிறது. அந்த கருமை நிறத்தை மாற்ற சிவபெருமான் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றியடையவில்லை. பார்வதி தேவியின் தோழியர்கள் வருத்தமுற்று நந்திதேவரை வணங்கி அவர் முன் கழிகளை ஆட்டியும், அடித்தும் நடனமாடினர். அவர்கள் ஆடிக்கொண்டிருந்தபோதே பார்வதி தேவியின் முகத்தில் படர்ந்திருந்த கருமை நிறம் மறைந்து, பொலிவு ஏற்பட்டது. இந்த புராண கதை வைந்தானை ஆட்டத்தின் சிறப்பை பறை சாற்றுகிறது.

கோல்களை பயன்படுத்தி ஆடும் இந்த ஆட்டம் மிகுந்த அழகுணர்ச்சி பொருந்தியதாக விளங்குகிறது. ஆட்ட கலைஞர்கள் இந்த ஆட்டத்தை தங்களது உடல் நலத்தை பேணிக்காக்கும் ஒரு உடற்பயிற்சியாகவும் கருதுகிறார்கள். அவர்களுக்கு ஆரோக்கியமும், புத்துணர்ச்சியும் இந்த கலை மூலம் கிடைக்கிறது.

வைந்தானை ஆட்டத்தின் முக்கிய அம்சமாக அதன் பாடல்கள் விளங்குகின்றன. அவை உணர்ச்சி வாய்ந்தவையாகவும், கருத்தாழம் மிக்கதாகவும் இருக்கின்றன. பாடல் வரிகள் அனைத்தும் பார்வையாளர்களின் மனதை கவரும் வகையில் இருக்கிறது. அவை நாட்டுப்புற மக்களின் வாழ்வோடு கலந்ததாகவும் அமைந்திருக்கிறது.

உழவன் பாட்டு, வறுமைப்பாட்டு, ஊரின் வரலாறு, அழகுணர்ச்சிப் பாடல்கள், தெய்வப் பாடல்கள், தாலாட்டு பாடல்கள், சமுதாய விழிப்புணர்வு பாட்டு, மாமன் மகள் பாட்டு, மாமன் மகன் பாட்டு, விடுகதை பாட்டு போன்றவை அதில் குறிப்பிடத்தக்கவை.

வைந்தானை ஆட்டத்தின் பாடல்கள் அனைத்தும் பேச்சு வழக்கில் அமைந்த வரிகளால் உருவாக்கப்பட்டவை. அதனால் அவை நம்மை ஈர்த்து கேட்கவைக்கும். ஆடலோடு சேரும்போது கண்களுக்கும், காதுகளுக்கும் விருந்தாகும்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தச்சங்குறிச்சி மலை முருகனுக்கு பங்குனி மாதம் பால்குடம் எடுக்கும் திருவிழா நடைபெறும். அப்போது அந்த மலைமுருகனின் வரலாறு குறித்த பாடல்களை பாடி ஆடுவார்கள். அதேபோன்று திருச்சி அருகே உள்ள ஓமாந்தூர் மாசி பெரியண்ணசாமி, காமாட்சியம்மன், சப்பாணி கருப்பு ஆகிய தெய்வங்களுக்கு மாசி மாதம் சிவராத்திரியன்று திருவிழா நடத்துவார்கள். அப்போதும் வைந்தானை ஆட்டம் நிகழ்த்தப்படுகிறது.

கோவில் திருவிழா நடைபெறும் இடங்களே இதன் முதன்மையான ஆட்டக்களங்கள்.

வைந்தானை ஆட்டத்தின் முதன்மையான ஆட்டக்களம் கோவில் திருவிழாக்கள் தான். பெரும்பாலான நாட்டுப்புற கலைகள் பொது நிகழ்ச்சிகளிலும் நடத்தப் படுகின்றன. ஆனால் வைந்தானை ஆட்டம் கோவில் விழாக்களில் மட்டுமே நிகழ்த்தப்படுகிறது.

இந்த கலைஞர்கள் ஆட்டத்தை நிகழ்த்த வேண்டிய கோவில் முன்பு இரு வரிசையாக எதிர்எதிரே நிற்பார்கள். தங்கள் கையில் இருக்கும் குச்சிகளை எதிரே நிற்பவரின் குச்சியில் தட்டியபடி ஆட்டத்தை தொடங்குவார்கள். முதலில் அந்த கோவிலில் இருக்கும் தெய்வத்தை புகழ்ந்து பாடியபடி ஆடுவார்கள். பாடலைப் பாடி தொடங்கிவைப்பவருக்கு ஆசிரியர் என்று பெயர்.

ஆட்டத்தை தொடங்குவதற்கு முன்பு கடவுளுக்கு படையல் செய்வார்கள். வெற்றிலை, பாக்கு, தேங்காய், பழம் வைத்து கற்பூரம் ஏற்றி சாம்பிராணி தூபம்காட்டி, பூமித்தாயையும் சூரியனையும், அந்த ஊர் தெய்வத்தையும், இசைக்கருவியையும் வணங்கி ஆட்டத்தை தொடங்குவது மரபாக இருக்கிறது.

சாமி பாட்டு பாடப்பட்டு ஆட்டமானது மெதுவாக ஆரம்பிக்கும். இறுதியில் நிறைவுசெய்யும்போது சாமிபாடல் பாடி அதிவேகத்தில் அடவுமுறைகளை போட்டு முடிக்கின்றனர். எத்தனைபேர் வேண்டுமானாலும் இதில் ஆடலாம். ஆனால் எதிர்முனையில் ஆட இன்னொருவர் தேவைப் படுவார்.

வைந்தானை ஆட்ட கலைஞர்களுக்கு ஒப்பனை ஏதும் இல்லை. ஆண்கள் வெள்ளை அல்லது வண்ண பனியனையும், கால்சட்டையையும் அணிந்து கொள்கின்றனர். பெண்கள் அவர்களிடம் இருக்கும் சாதாரண சுடிதாரையே அணிந்துகொண்டு ஆடுகிறார்கள். மிக எளிமையாக மேக்கப் போட்டுக்கொள்கிறார்கள்.

பல்வேறுவிதமான ஆட்டக்கலைகள் பொது நிகழ்ச்சிகளிலும் இடம்பெற்று மக்களிடம் மிகுந்த வரவேற்பினை பெறுகிறது. அதுபோல் இதுவும் மக்களை நோக்கி வந்தால், புதுப்பொலிவு பெறும் என்ற நம்பிக்கை துளிர்க்கிறது.

- கலை வ(ள)ரும்.

தகவல்: இளவழகன், பகுதி நேர விரிவுரையாளர், நாட்டுப்புற கலைகள் துறை, அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி.

Next Story