இந்த வார பங்கு வர்த்தகத்தின் போக்கை, டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள், முக்கிய புள்ளிவிவரங்கள் தீர்மானிக்கும்; சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு


இந்த வார பங்கு வர்த்தகத்தின் போக்கை, டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள், முக்கிய புள்ளிவிவரங்கள் தீர்மானிக்கும்; சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு
x
தினத்தந்தி 10 Feb 2020 2:27 PM GMT (Updated: 10 Feb 2020 2:27 PM GMT)

இந்த வார பங்கு வர்த்தகத்தின் போக்கை டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள், முக்கிய புள்ளிவிவரங்கள், நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள் மற்றும் சர்வதேச நிலவரங்கள் தீர்மானிக்கும் என சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு செய்து இருக்கின்றனர்.

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

மும்பை

நிகர ஏற்றம்

சென்ற வார பங்கு வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் நிகர அடிப்படையில் 1,406.32 புள்ளிகள் அதிகரித்து 41,141.85 புள்ளிகளில் முடிவுற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 436.50 புள்ளிகள் முன்னேறி 12,098.35 புள்ளிகளாக இருந்தது.

இந்நிலையில், நடப்பு வார பங்கு வர்த்தகத்தின் போக்கை தீர்மானிக்க உள்ள முக்கிய காரணிகள் குறித்து ஆய்வாளர்கள் தமது கணிப்புகளை வெளியிட்டுள்ளனர். டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள், பொருளாதார புள்ளிவிவரங்கள், நிறுவனங்களின் டிசம்பர் காலாண்டு வளர்ச்சி நிலவரம் மற்றும் உலக நிகழ்வுகள் அதை முடிவு செய்யும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கருத்துக் கணிப்பு

டெல்லி சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகின்றன. வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிதான் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என தெரிவித்துள்ளன. அதன்படி முடிவுகள் அமைந்தால் அது மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா அரசுக்குப் பெரும் பின்னடைவாக இருக்கும். எனவே இந்த வாரத்தில் டெல்லி நிலவரம் பங்குச்சந்தை வட்டாரங்களின் கவனத்தை அதிகம் ஈர்ப்பதாக உள்ளது.

வரும் 12-ந் தேதி (புதன்கிழமை) ஜனவரி மாத சில்லரை விலை பணவீக்கம் குறித்த புள்ளிவிவரம் வெளியாக உள்ளது. 14-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மொத்த விலை பணவீக்க புள்ளிவிவரம் வெளிவர இருக்கிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் சில்லரை விலை பணவீக்கம் 5 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 7.35 சதவீதமாக அதிகரித்தது. மொத்த விலை பணவீக்கம் 2.59 சதவீதமாக உயர்ந்து இருந்தது.

தொழில்துறை உற்பத்தி

புதன்கிழமை அன்று தொழில்துறை உற்பத்தி (2019 டிசம்பர்) குறித்த புள்ளிவிவரமும் வெளிவருகிறது. தொழில்துறை உற்பத்தி வளர்ச்சியைக் கணக்கிடுவதில் 8 உள்கட்டமைப்பு துறைகளின் பங்கு 40 சதவீதமாக உள்ளது. இந்த துறைகளின் உற்பத்தி, கடந்த டிசம்பர் மாதத்தில் 1.3 சதவீதம் மட்டுமே வளர்ச்சி கண்டு இருக்கிறது. எனவே அம்மாதத்தில் தொழில்துறை வளர்ச்சியும் குறைவாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்ற ஆண்டு நவம்பர் மாதத்தில் தொழில்துறை உற்பத்தி 1.8 சதவீதம் வளர்ச்சி கண்டு இருந்தது.

மேற்கண்ட மூன்று முக்கிய பொருளாதாரக் குறியீடுகளும் இந்த வார பங்கு வர்த்தகத்தின் போக்கை நிர்ணயிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடப்பு வாரத்தில் 2,330 நிறுவனங்கள் தமது அக்டோபர்-டிசம்பர் காலாண்டு (2019) நிதி நிலை முடிவுகளை வெளியிட உள்ளன. இதில் கெயில், எம்.ஆர்.எப்., பீ.பி.சி.எல்., பீ.எச்.இ.எல்., பி.எப்.சி., செயில், மதர்சன் சுமதி, நெஸ்லே இந்தியா, பேஜ் இண்டஸ்ட்ரீஸ், கிளென்மார்க் பார்மா ஆகிய நிறுவனங்களின் முடிவுகள் பங்குச்சந்தைகளில் தாக்கம் ஏற்படுத்தக் கூடும்.

கடந்த 2019-ஆம் ஆண்டு தொடர்பாக பல புள்ளிவிவரங்கள் வந்து கொண்டிருக்கின்றன. சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் மற்றும் நடப்பு ஆண்டு ஜனவரி மாதம் தொடர்பாகவும், முதல் 10 மாதங்கள் (2019 ஏப்ரல்-ஜனவரி) தொடர்பாகவும் பல்வேறு புள்ளிவிவரங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதற்கு ஏற்பவும் பங்கு வர்த்தகம் நடைபெறலாம்.

சர்வதேச நிலவரங்கள்

சர்வதேச நிலவரங்களும் இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கம் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக கொரோனா வைரஸ் தாக்குதலால் உலகமே குலுங்கி உள்ள நிலையில் சீன நிலவரம் ஆசிய பங்கு வர்த்தகத்தில் உறுதியாக தாக்கம் ஏற்படுத்தும். அதனை இந்திய சந்தைகளும் வெளிப்படுத்தும்.

இது தவிர கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள், அன்னிய முதலீடு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு போன்ற மற்ற உலக நிலவரங்களும் நடப்பு வார வர்த்தகத்தின் போக்கை முடிவு செய்வதில் முக்கிய அங்கம் வகிக்கும் என பங்குச்சந்தை ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

Next Story