வாரத்தின் முதல் வர்த்தக தினத்தில் சென்செக்ஸ் 162 புள்ளிகள் வீழ்ச்சி நிப்டி 67 புள்ளிகள் இறங்கியது


வாரத்தின் முதல் வர்த்தக தினத்தில் சென்செக்ஸ் 162 புள்ளிகள் வீழ்ச்சி நிப்டி 67 புள்ளிகள் இறங்கியது
x
தினத்தந்தி 11 Feb 2020 11:51 AM GMT (Updated: 11 Feb 2020 11:51 AM GMT)

வாரத்தின் முதல் வர்த்தக தினமான திங்கள்கிழமை அன்று, தொடர்ந்து இரண்டாவது நாளாக பங்கு வர்த்தகம் சரிவைச் சந்தித்தது.

மும்பை

வாரத்தின் முதல் வர்த்தக தினமான திங்கள்கிழமை அன்று, தொடர்ந்து இரண்டாவது நாளாக பங்கு வர்த்தகம் சரிவைச் சந்தித்தது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 162 புள்ளிகள் வீழ்ந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 67 புள்ளிகள் இறங்கியது.

டெல்லி நிலவரம்

டெல்லி சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகின்றன. வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிதான் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என தெரிவித்துள்ளன. முடிவுகள் அப்படியே அமைந்தால் அது மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா அரசுக்கு பின்ன டைவாக இருக்கும். எனவே டெல்லி நிலவரம் பற்றிய ஐயப்பாடுகளால் பங்கு வியாபாரம் படுத்தது. மேலும் லாபம் ஈட்டும் நோக்கத்துடன் பலரும் அதிக அளவில் பங்குகளை விற்பனை செய்தனர். சந்தைகள் சரிய அதுவும் காரணமாக இருந் தது.

அந்த நிலையில், மும்பை பங்குச்சந்தையில் உலோகத் துறை குறியீட்டு எண் அதிகபட்சமாக 3.14 சதவீதம் சரிந்தது. அடுத்து மோட்டார் வாகனத் துறை குறியீட்டு எண் 2.37 சதவீதம் குறைந்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவனப் பங்குகளில் 7 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தது. 23 நிறுவனப் பங்குகளின் விலை சரிந்தது.

இந்தப் பட்டியலில் பஜாஜ் பைனான்ஸ், டாட்டா கன்சல்டன்சி, கோட்டக் மகிந்திரா வங்கி, ஏஷியன் பெயிண்ட், எச்.டீ.எப்.சி., இந்துஸ்தான் யூனிலீவர், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட 7 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தது. அதே சமயம் மகிந்திரா அண்டு மகிந்திரா, டாட்டா ஸ்டீல், ஓ.என்.ஜி.சி., சன் பார்மா, ஹீரோ மோட்டோ கார்ப், பவர் கிரிட், என்.டி.பி.சி. உள்பட 23 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தது.

மும்பை பங்குச்சந்தை

மும்பை பங்குச்சந்தையில், வர்த்தகத்தின் இறுதியில் சென்செக்ஸ் 162.23 புள்ளிகள் சரிவடைந்து 40,979.62 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 41,172.06 புள்ளிகளுக்கும், குறைந்தபட்சமாக 40,798.98 புள்ளிகளுக்கும் சென்றது.

இந்தச் சந்தையில் 988 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், 1547 நிறுவனப் பங்குகளின் விலை சரிந்தும் இருந்தது. 173 நிறுவனப் பங்குகளின் விலையில் மாற்றம் இல்லை. நேற்று மொத்த வர்த்தகம் ரூ.2,292 கோடியாக குறைந்தது. கடந்த வார இறுதியில் அது ரூ.3,885 கோடியாக இருந்தது.

நிப்டி

தேசிய பங்குச்சந்தையில், வர்த்தகத்தின் இறுதியில் நிப்டி 66.85 புள்ளிகள் இறங்கி 12,031.50 புள்ளிகளில் முடிவுற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 12,103.55 புள்ளிகளுக்கும், குறைந்தபட்சமாக 11,990.75 புள்ளிகளுக்கும் சென்றது.

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

Next Story