சிறப்புக் கட்டுரைகள்

ஜனவரி மாதத்தில்பரஸ்பர நிதி துறையின் எஸ்.ஐ.பி. திட்டங்களில் ரூ.8,532 கோடி முதலீடு + "||" + In January SIP in the mutual fund sector 8,532 crore investment in projects

ஜனவரி மாதத்தில்பரஸ்பர நிதி துறையின் எஸ்.ஐ.பி. திட்டங்களில் ரூ.8,532 கோடி முதலீடு

ஜனவரி மாதத்தில்பரஸ்பர நிதி துறையின் எஸ்.ஐ.பி. திட்டங்களில் ரூ.8,532 கோடி முதலீடு
பரஸ்பர நிதி துறையில் சிறிய மற்றும் நடுத்தர நகரங்களைச் சேர்ந்தவர்களின் பங்கு 15 சதவீதத்திற்கும் குறைவாகவே இருக்கிறது. 85 சதவீதத்திற்கும் அதிகமான முதலீட்டாளர்கள் 30 பெரிய நகரங்களைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்...
மும்பை

பரஸ்பர நிதி துறையின் சீரான முதலீட்டுத் திட்டங்களில் (எஸ்.ஐ.பி), கடந்த ஜனவரி மாதத்தில் ரூ.8,532 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது.

சொத்து மதிப்பு

பரஸ்பர நிதி துறையைச் சேர்ந்த நிறுவனங்கள் பல்வேறு திட்டங்கள் வாயிலாக முதலீட்டாளர்களிடமிருந்து நிதி திரட்டுகின்றன. இந்த நிதி, நிறுவனப் பங்குகள், நிதிச்சந்தைகள், பொது மற்றும் தனியார் துறை நிறுவனங்களின் கடன்பத்திரங்கள் மற்றும் தங்கத்தில் முதலீடு செய்யப்படுகிறது. இதுவே பரஸ்பர நிதி துறை நிர்வகிக்கும் சொத்து என்று அழைக்கப்படுகிறது.

பரஸ்பர நிதி துறையில் ஒவ்வொரு திட்டமும் தனித்தனி சொத்து மதிப்பினை கொண்டுள்ளது. பங்கு வர்த்தகத்தில் சரிவு ஏற்படும்போதும், முதலீட்டாளர்கள் பெருமளவில் முதலீடுகளை விலக்கிக் கொள்ளும்போதும் இத்துறையின் சொத்து மதிப்பு சரிவடைகிறது.

புதிய சாதனை அளவு

கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் பரஸ்பர நிதித்துறையின் சொத்து மதிப்பு ரூ.26.54 லட்சம் கோடியாக இருந்தது. நடப்பு ஆண்டு ஜனவரி மாதத்தில் அது ரூ.27.85 லட்சம் கோடி என்ற புதிய சாதனை அளவை எட்டி இருக்கிறது. அடுத்த 10 ஆண்டுகளில் பரஸ்பர நிதி துறை நிர்வகிக்கும் இது ரூ.100 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என இந்திய பரஸ்பர நிதி நிறுவனங்கள் சங்கம் (ஏ.எம். எப்.ஐ) மதிப்பீடு செய்துள்ளது.

இந்த நிலையில், கடந்த ஜனவரி மாதத்தில் எஸ்.ஐ.பி. திட்டங்களில் ரூ.8,532 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டு இருக்கிறது. டிசம்பர் மாதத்தில் அது ரூ.8,518 கோடியாக இருந்தது. தொடர்ந்து 14-வது மாதமாக இத்திட்டங்கள் ரூ.8 ஆயிரம் கோடிக்கும் அதிக முதலீட்டை ஈர்த்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து இப்பிரிவில் பரஸ்பர நிதி துறையினர் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு (ரூ.3.17 லட்சம் கோடியில் இருந்து) ரூ.3.35 லட்சம் கோடியாக உயர்ந்து இருக்கிறது.

பங்குசார்ந்த திட்டங்களிலும் பரஸ்பர நிதி துறையினர் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு அதிகரித்து வருவதாக தெரிகிறது. எச்.என்.ஐ. எனப்படும் பெரும் பணக்காரர்கள் மற்றும் சில்லரை முதலீட்டாளர்களே இதற்கு காரணம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

44 நிறுவனங்கள்

இந்தியாவில் தற்போது 44 பரஸ்பர நிதி நிறுவனங்கள் இருக்கின்றன. இந்த நிறுவனங்கள் பல்வேறு புதிய திட்டங்களுக்கு அனுமதி வேண்டி செபி அமைப்பிடம் விண்ணப்பித்து வருகின்றன. எனவே இனி வரும் மாதங்களிலும் எஸ்.ஐ.பி. திட்டங்களில் முதலீடு கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் 30 பெரிய நகரங்கள் நீங்கலாக மற்ற சிறிய மற்றும் நடுத்தர நகரங்களில் பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீடு செய்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி இத்துறையினரைக் கேட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் தற்போது பரஸ்பர நிதி துறையில் சிறிய மற்றும் நடுத்தர நகரங்களைச் சேர்ந்தவர் களின் பங்கு 15 சதவீதத்திற்கும் குறைவாகவே இருக்கிறது. 85 சதவீதத்திற்கும் அதிகமான முதலீட்டாளர்கள் 30 பெரிய நகரங்களைச் சேர்ந்தவர் களாக உள்ளனர்.

தேர்ச்சி, அனுபவம்

பரஸ்பர நிதி நிறுவனங்கள் தேர்ச்சியும், அனுபவமும் வாய்ந்த நிபுணர்களின் துணையுடன் பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்கின்றன. பங்கு வெளியீடுகளிலும் பங்கேற்கின்றன. புதிய முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் நேரடியாக முதலீடு செய்வதைக் காட்டிலும் பரஸ்பர நிதி திட்டங்கள் மூலம் முதலீடு செய்வது ஓரளவு பாதுகாப்பானது என்று கூறப்படுகிறது.

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு