தினம் ஒரு தகவல் : நீர்நிலைகள் பாதுகாப்பு


தினம் ஒரு தகவல் : நீர்நிலைகள் பாதுகாப்பு
x
தினத்தந்தி 12 Feb 2020 9:03 AM GMT (Updated: 12 Feb 2020 9:03 AM GMT)

சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒரு நாள் மட்டும் பாடுபட்டால் போதாது, தினமும் செயல்பட்டால் தான் அதிவேகமாக சீரழிந்து வரும் நமது இயற்கையை சிறிதளவாவது காப்பாற்ற முடியும்.

பல்லுயிர்கள் வாழ ஆதாரமாக இருப்பவை நீர்நிலைகள். நீர் நிலைகள் செழிப்பாக இருந்தால் நமக்கு நேரடியாக நல்ல தண்ணீர் கிடைப்பது மட்டுமல்லாமல், பல உயிர்களுக்கு அது வாழிடமாகவும் அமையும். ஆனால் நகர்மயமாக்கம் காரணமாக சென்னை போன்ற பெருநகரங்களில் நீர்நிலைகள் அழிக்கப்பட்டு கான்கிரீட் கட்டிடங்களாக மாறி பல ஆண்டுகள் ஆகிவிட்டன.

இருக்கும் நீர்நிலைகளையாவது பாதுகாத்து ஆக வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சொல்கிறார்கள். அதன்படி, நீர்நிலைகளை மறுசீரமைப்பதில் முதல் கட்டமாக தூர்வாருகிறார்கள். அடுத்ததாக, தூர்வாரிய படிவுகளை வைத்து கரையை வலுப்படுத்துகிறார்கள். மூன்றாவதாக கரையை உறுதிப்படுத்த ஏரியைச் சுற்றி மரக் கன்றுகளை நடுகிறார்கள். கடைசியாக, ஏரி ஆக்கிரமிக்கப்படுவதையும் மாசுபடுவதையும் தவிர்க்க வேலி அமைக்கிறார்கள்.

நகரங்களில் உள்ள நீர்நிலைகள் காணாமல் போனதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. ஏரி நிலங்களில் ஆக்கிரமிப்பு, மாநகராட்சி குப்பை கொட்டுதல் போன்றவை அவற்றில் முக்கியமானவை. 

பல ஏரிகளை சீரமைக்கும்போது இந்த பிரச்சினைகளை சந்தித்திருப்பதாக சொல்கிறார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள். அந்தப் பகுதிகளில் உள்ள வீடுகளின் கழிவு நீர் ஏரியில் கலக்கிறது. எண்ணெய் கசிவு, சிறு தொழில்நிறுவனங்களின் கழிவுகளும் அதில் தான் கலக்கின்றன. 

சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான வேலைகளைச் செய்யும்போது முக்கியமாக எதிர்கொள்ளும் சவால் சுற்றுச்சூழல் பாதுகாப்பை பற்றிய அக்கறையே இல்லாத மக்களின் மனநிலைதான். அது மாறினால் தான் மாற்றங்களை உருவாக்க முடியும் என்பதை உறுதியாக தெரிவிக்கிறார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.

Next Story