வானவில் : துவைக்காமலேயே துணிகளை சுத்தம் செய்யும் சாம்சங் ஏர் டிரஸ்ஸர்


வானவில் : துவைக்காமலேயே துணிகளை சுத்தம் செய்யும் சாம்சங் ஏர் டிரஸ்ஸர்
x
தினத்தந்தி 12 Feb 2020 10:40 AM GMT (Updated: 12 Feb 2020 10:40 AM GMT)

வீட்டு உபயோக மின்னணு சாதனங்கள் உற்பத்தியில் பல மேம்பட்ட தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி வரும் சாம்சங் நிறுவனம் தற்போது துணிகளை துவைக்காமலேயே சுத்தம் செய்யும் புதிய தொழில்நுட்பத்திலான ஏர் டிரஸ்ஸரை அறிமுகம் செய்துள்ளது.

பார்ப்பதற்கு உயரமான பீரோ போன்ற தோற்றம் கொண்டதாக இது உள்ளது. இந்த ஏர் டிரஸ்ஸர் துணிகளில் மீது படிந்துள்ள நெடியை நீக்கிவிடும். அத்துடன் துணிகளின் சுருக்கங்களைப் போக்கிவிடும். இது மிகவும் சிக்கனமானது. 

லாண்டரி பிரச்சினைக்கு தீர்வாக இது நிச்சயம் இருக்கும் என்கிறது சாம்சங். இதனுள் பாயும் அதிக அழுத்த காற்று மற்றும் நீராவி துணிகளின் மீது படிந்துள்ள அழுக்குகள், கிருமிகளை போக்கிவிடும்.

நவீன தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளின் பலன் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைய வேண்டும் என்பதில் சாம்சங் மிகவும் அக்கறையாக உள்ளது. துணிகளை துவைப்பது உள்ளிட்ட பிரச்சினைகள் மிகவும் சிக்கலானதாக இல்லாமல் அதை எளிமைப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டதுதான் இந்த ஏர் டிரஸ்ஸர் என்கிறது சாம்சங். இதில் துணிகளை சுத்தப்படுத்துவதன் மூலம் ஆடைகள் புத்தம் புதிய தோற்றத்துடன் இருக்கும்.

இதனுள் உள்ள ஹேங்கரில் சுத்தம் செய்ய வேண்டிய துணியை மாட்டி மூடினால் போதும். முதலில் இதில் உள்ள ஜெட் ஏர் சாதனம் அதிக அழுத்தத்தில் காற்றை வீசும். அடுத்து ஜெட் ஸ்டீம் பகுதியிலிருந்து அதிக அழுத்தத்தில் நீராவி வெளிப்படும். இது ஆடையை முழுமையாக சுத்தப்படுத்திவிடும்.

துணிகள் மட்டுமின்றி குழந்தைகளின் பொம்மை உள்ளிட்டவற்றையும் இதன் மூலம் தூய்மைப்படுத்திக் கொள்ளலாம். அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி ஆகிய நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த ஏர்டிரஸ்ஸர் விரைவிலேயே இந்தியாவிலும் அறிமுகமாகும் என்று தெரிகிறது.

Next Story