காலமெல்லாம் காதல் வாழ்க!


காலமெல்லாம் காதல் வாழ்க!
x
தினத்தந்தி 14 Feb 2020 8:41 AM GMT (Updated: 14 Feb 2020 8:41 AM GMT)

உலகமெங்கும் வியாபித்திருக்கின்ற ஓர் மந்திர சக்தி காதல். ஆதி முதற்கொண்டு இன்றுவரை காதல் கதைகள் பல கோடி; கவிதைகள் பத்துகோடி; கலைகளும், காவியங்களும் எண்ணிலடங்காதவை.

ஒவ்வொருவரும் காதலை ஒவ்வொரு விதமாகப் பாடியிருக்கிறார்கள்; வர்ணித்திருக்கிறார்கள். ஒவ்வொன்றும் அற்புத சுவையாக மனதைக் கிள்ளுகிறது. காதல் கனவுகளிலும், நினைவுகளிலும் மனது மயங்குகிறது.

காதல் சுவையானது. சுமையாகத் தோன்றினாலும் அது சுகமானது. அபார சக்தி கொண்டது. அது கோழையை வீரனாக்கும். வீராதி வீரனை பசுவைப் போல் சாதுவாக்கும். ஆண்டியை அரசனாக்கும், அரசனை அடிமையாக்கும். காதலால் வாழ்வில் ஏற்றங்களும் ஏற்படலாம். ஏமாற்றங்களும் ஏற்படலாம். எனினும் காதல் அற்புதமானது. அது எல்லோருக்கும் வாய்ப்பதில்லை.

அதனால்தான் காதலின் புகழ் பாட விரும்பிய பாரதி, ‘காதலினால் மானுடருக்குக் கவிதையுண்டாம், கானமுண்டாம், சிற்பமுதற் கலைகளுண்டாம். ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே’ என்று பாடினார்.காவியங்கள் அனைத்தும் காதலைப் பற்றி சுவைபடப்பேசுகின்றன. காதலனை தன் நெஞ்சுக்குள் வைத்திருக்கும் காதலி ஒருத்தி, அவள் சூடாக எதையுமே உண்ணுவதில்லையாம். ‘ஏனடி’ என்று தோழி கேட்க, ‘நெஞ்சத்தார் காதலராக வெய்துண்டல் அஞ்சுதும் வேபாக்கு அறிந்து’ என்று அவள் பதில் சொல்வதாக ‘காதற் சிறப்புரைத்தல்’ அதிகாரத்தில் வள்ளுவன் நயம்படக் கூறுகிறார் மனிதர்களுக்கு மட்டுமல்ல. அனைத்து ஜீவராசிகளுக்கும் காதல் உணர்வுகள் இருக்கின்றன. சிலவகைப் பறவைகளையும். விலங்குகளையும் உற்று கவனித்தால் தெரியும்.

அவை காதலுற்றுக் கூடிக் கலந்து இனவிருத்தி செய்கின்றன. அவ்வளவுதான். ஆனால் மனித சமூகத்தில் காதல் என்பது எத்தனையோ விஷயங்களை நிகழ்த்துகிறது. ஒருவன் ஒரு பெண்ணைக் காதலிக்கத் தொடங்கிவிட்டால், அவனுடைய பேச்சில் நடை, உடை, பாவனையில் மெருகேறிவிடுகின்றது. தனித்திறமைகளை வெளிப்படுத்துவதற்கு வேகம் பிறக்கிறது. புதிய உற்சாகமும் உத்வேகமும் வாழ்க்கையை விறுவிறுப்பாக்கிவிடுகின்றன.

தனிமனித வளர்ச்சி, சாதனைகள், ஒட்டுமொத்த உலக முன்னேற்றம் அனைத்திற்கும் காதல்தானே மையப்புள்ளியாக இருக்கிறது. அந்தப்புள்ளிதான் புதுப்புது ஜனனங்களின் ஊற்றுக்கண். அதுவே உலக வரலாற்று நீட்சியின் ஆதாரம்.

காதல் அற்புதமானது. ஒரு சிலருக்குத்தான் அது வாய்க்கிறது. அவர்களில் மிகச்சிலர்தான் அதில் முழுமையான வெற்றியினைப் பெறுகின்றனர். பெரும்பாலானோரின் காதல் பாதியிலேயே கரைந்து விடுகிறது.

காதல் தெய்வீகமானது, புனிதமானது என்றெல்லாம் சொல்கிறோமே. இருந்தும் ஏன் சிலரின் காதல் வாழ்வில் பிரச்சினைகள், போராட்டங்கள், பிரிவினைகள்!

அவர்களிடம் சரியான புரிதல் இல்லை. நாளடைவில் ஒருவர் மீது ஒருவருக்கு சந்தேகம் கிளம்புகிறது. எடுத்ததற்கெல்லாம் வாக்குவாதங்கள் கோபம், கொந்தளிப்பு, ஏமாற்றம், சலிப்பு போன்ற பொல்லாத உணர்வுகள் அவர்களின் இதயத்தை அழுத்துகின்றன.அதனால்தான் தற்கொலைகள், விவாகரத்து வழக்குகள். அவர்களுக்குக் காதலும் புரியவில்லை; கருத்தொருமித்தக் காதல் வாழ்வின் மேன்மைகளும் தெரியவில்லை.

காதல் என்பதை உடல் சார்ந்ததாக மட்டுமே பார்க்கிற கண்ணுக்கும், நெஞ்சுக்கும் அதன் உள்ளார்ந்த அழகும் அர்த்தமும் புலப்படுவதில்லை. உடல்கடந்து உள்ளத்திற்குள் புகுந்து காதலைக் கொண்டாடுவோரின் வாழ்வில் இறுதி மூச்சுவரை இன்பத்திற்குப் பஞ்சமில்லை.காதல் என்பது கண்களின் தேடல் அல்ல; உள்ளத்தின் தேடல், உயிரின் தேடல்.

இன்று பலர், காதலை ஏதோ விளையாட்டாக எடுத்துக் கொள்கிறார்கள். நிறையபேர் அதை ஒரு வியாபாரமாகப் பார்க்கிறார்கள்.பொருத்தமற்ற வயதில் நெறிகெட்ட வழியில் அலைகின்ற இளவட்டங்கள் அழகைப் பார்த்து, வீட்டின் வசதிகளைப் பார்த்து, காதல் என்ற பெயரில் ஏமாற்று வித்தைகளை காட்டித் தொற்றிக் கொள்ளத் திட்டமிட்டுத் திரிகின்ற மோசடிப் பேர் வழிகள்; வெறும் மயக்கத்தில் தெருத்தெருவாக அலைபவர்கள். இப்படிப்பட்டவர்களால் காதலுக்கு அவமானம்; நம்பியவர்களுக்கு ஏமாற்றம்.

கெட்ட சிந்தனைகள் இருக்கின்ற உள்ளத்தில் நல்ல காதல் இருக்காது. அற்ப சுகங்களுக்காக மட்டுமே வருகின்ற காதல் யாருடைய வாழ்விலும் நிலைக்காது.

இன்றைய காலகட்டத்தில் தொடர்பு கொள்ளுதல் என்பது மிகமிக எளிதாகிவிட்டது. அதிநவீன வசதிகள் பெருகிவிட்டன. ஆனால் கருத்தொற்றுமையும், அன்பின் பிடிப்பும் இல்லாத காரணத்தால், பெரும்பாலானோரின் காதலில் இடைவெளி ஏற்பட்டுவிடுகிறது. அதுவே நிரந்தரப் பிரிவை ஏற்படுத்திவிடுவதுமுண்டு. கருத்தொருமித்து, உள்ளம் கலந்து, உயிர்கலந்து தொடர்கின்ற காதலில் பிரிவு என்ற பேச்சுக்கே இடமில்லை. கண்கள்தான் காதலின் தலைவாயில்; அங்கிருந்துதான் காதல் ஆரம்பமாகிறது. ஆனால் கண்களில் தொடங்கிய காதல், உள்ளத்திற்குள் இறங்கி உயிரில் கலக்க வேண்டும்.

ராமனும் சீதையும் ஒருவரை ஒருவர் கண்களால் பருகினார்களாம். ‘கண்ணொடு கண்ணினைக் கவ்வி’ என்று கம்பன் பாடும் பாடலில், உணர்வும் ஒன்றிட என்று அவன் சுட்டுகின்ற உன்னத காதலின் அடையாளத்தை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

சபலத்தின் உணர்ச்சிக் கொந்தளிப்பில் ஏற்படுகின்ற மயக்கம் காதலல்ல. அதற்கு வேறு பெயர் உண்டு. கண்வழி பிறந்து உயிரில் இரண்டறக் கலந்து உள்ளத்தில் நிறைவதுதான் காதல். காதலன் காதலி உறவென்றாலும், கடவுள் பக்தி என்றாலும் உள்ளமுருகி ஒன்றிச் சேர்வதுதான் உறவின் உச்சநிலை.

இறை நாட்டத்தால் காதலாகிக் கசிந்து, பாடிப் பரவசமடைந்த பக்தர்கள் ஏராளம். ‘அம்மையே அப்பா ஒப்பிலா மணியே அன்பினில் விளைந்த ஆரமுதே’ என்றார் மாணிக்கவாசகர். ‘அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே, அன்பெனும் குடில் புகும் அரசே’ என்றார் வள்ளலார்.

இவையெல்லாம் இறையுணர்வால் தோன்றும் காதலின் மேன்மையைக் குறிக்கின்றன.

கருத்தொருமித்த காதல் வெற்றி பெறுகிறது. ஈருடல் ஓருயிரான உறவுதான் கடைசிவரை தொடர்கிறது. தூய்மையான காதல், ஒருவர் நலனில் ஒருவர் அக்கறை கொள்ளச் செய்கிறது. ஒருவரை ஒருவர் சார்ந்திருக்கக் செய்கிறது. எனவே காதல் என்னும் கோவிலில் அன்பென்னும் தீபம் ஏற்றுங்கள். வாழ்க்கையைக் காதலியுங்கள். குடும்பத்தைக் காதலியுங்கள். நட்பைக் காதலியுங்கள். காலமெல்லாம் காதலை கொண்டாடுங்கள்.

- கவிஞர் தியாரூ, தமிழக அரசின் பாவேந்தர் பாரதிதாசன் விருது பெற்றவர்.


Next Story