எல்.ஐ.சி. பங்குகள் விற்பனை ஏன்?


எல்.ஐ.சி. பங்குகள் விற்பனை ஏன்?
x
தினத்தந்தி 14 Feb 2020 9:00 AM GMT (Updated: 14 Feb 2020 9:00 AM GMT)

2020-21-ம் ஆண்டுக்கான பட்ஜெட் உரையில் நிதிமந்திரி நிர்மலா சீதாராமன், மத்திய அரசின் ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி.யின் பங்குகள் தனியாருக்கு விற்கப்படும் என்று தெரிவித்தார்.

தொழிற்சங்கங்கள் விற்பனையை எதிர்த்து போராட்டங்கள் ஆரம்பித்து இருக்கிறார்கள். எதிர்க்கட்சியான காங்கிரஸ், இது குறித்து கட்சிக்குள் விவாதித்து கருத்து சொல்வதாக தெரிவித்து இருக்கிறார்கள்.

இந்தியாவில் இருக்கும் மிகச்சிறந்த நிறுவனங்களில் ஒன்று எல்.ஐ.சி. 1956-ம் ஆண்டு அப்போது இயங்கிக்கொண்டிருந்த 154 தனியார் காப்பீட்டு நிறுவனங்கள், 6 வெளிநாட்டு காப்பீட்டு நிறுவனங்கள் உள்ளிட்ட 245 நிறுவனங்களை, எல்.ஐ.சி. சட்டம் 1956 என்பதன் மூலம் ஒருங்கிணைத்து உருவாகிய அமைப்புதான், எல்.ஐ.சி.

2000-ம் ஆண்டு காப்பீட்டுத் துறையில் தனியார் நிறுவனங்களை மீண்டும் அனுமதிக்கும் வரையிலும், இந்திய காப்பீட்டுத் துறையில் தனியொரு நிறுவனமாக கோலோச்சி கொண்டிருந்த எல்.ஐ.சி., அதன் பின்பும், தனியார் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் போட்டியை சமாளித்து, இன்றும் இந்திய காப்பீட்டுச் சந்தையில் முக்கால் பங்கை தன் வசம் வைத்திருக்கும் ‘இன்டஸ்டிரி லீடர்’.

எல்.ஐ.சி.ஹவுசிங் பைனான்ஸ், எல்.ஐ.சி. பென்சன், எல்.ஐ.சி இன்டர்னேஷனல், எல்.ஐ.சி. கார்ட்ஸ், எல்.ஐ.சி. மியூச்சுவல் பண்ட் என்று பல உபநிறுவனங்களைக் கொண்டிருக்கும், ஒரு லட்சத்து 12 ஆயிரம் ஊழியர்கள் மற்றும் 15 லட்சம் முகவர்களுடன், 2,048 கிளைகள் மூலம் நாடு முழுக்க, 64 ஆண்டுகளாக, 30 கோடி பாலிசிகள் வழங்கி சேவை செய்துகொண்டிருக்கும் ஒரு மாபெரும் அமைப்பு.

புதிய பாலிசிகள் சேர்ப்பு போன்றவற்றிலும் மற்ற தனியார் நிறுவனங்களை விட சிறப்பான ஆண்டு வளர்ச்சி காணும், லாபமீட்டும், அரசுக்கு நல்ல வருமானம் டிவிடெண்ட் தரும் ஆரோக்கியமான அரசு அமைப்பு. இந்திய ‘பிராண்ட்’களில் அதிக மதிப்புள்ளதாக பல ஆண்டுகள் முன்னணியில் இருந்த/ இருக்கும் நிறுவனம்.

இப்படிப்பட்ட நிறுவனத்தின் இப்போதைய ‘சந்தை பண மதிப்பு’ என்னவென்று இன்னும் சரியாக கணக்கிடப்படவில்லை. ஆனால், மற்ற நிறுவனங்களின் சந்தை மதிப்போடு ஒப்பிட்டால், எல்.ஐ.சி. நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு, சுமார் ரூ.10 லட்சம் கோடியாக இருக்கலாம் என்கிறார்கள். அதில் பத்து சதவீத பங்குகளை வெளிச்சந்தையில் விற்க அரசு முடிவு செய்திருக்கிறது. இந்த கணிப்புகளின்படி, அரசுக்கு எல்.ஐ.சி. பங்குகள் விற்பதன் மூலம் ஒரு லட்சம் கோடி ரூபாய் கிடைக்கலாம். அரசு அதன் நிறுவனங்களை இரண்டு விதங்களில் விற்கிறது. முதலாவது ‘ஸ்டிராடிஜிக் சேல்’. இந்த முறையில் அரசு வசம் இருக்கும் பங்குகளில் 50 சதவீதம் வரை விற்கப்பட்டுவிடும். அதனால், அந்த நிறுவனத்தின் நிர்வாக அதிகாரம் அரசிடம் இருந்து போய்விடும். மற்றொரு வழி, ‘டிஸ்இன்வெஸ்ட்மென்ட்’. இந்த முறையில் ஓரளவு பங்குகள் மட்டுமே விற்கப்படும். அப்படி விற்ற பின்பும் அரசே பாதிக்கும் கூடுதலான பங்குகளையும், நிறுவனத்தை நிர்வகிக்கும் அதிகாரத்தையும் வைத்திருக்கும். எல்.ஐ.சி., இரண்டாவது முறையான ‘டிஸ்இன்வெஸ்ட்மென்ட்’படி 10 சதவீத பங்குகளை மட்டும் தனியாருக்கு விற்க இருக்கிறது. இதற்கு நாடாளுமன்றத்தில் எல்.ஐ.சி. சட்டம் 1956-ஐத் திருத்த வேண்டும். அதன்பின்பு, செபியின் ஒப்புதலுடன் 2020 செப்டம்பருக்குப் பின்னால், ஐ.பி.ஓ மூலம் பங்குகள் விற்பனைக்கு வரும்.

மிக நல்ல நிறுவனம் என்பதால் விலை அதிகமிருக்கும், இருந்தாலும் வாங்குவதற்கு பலத்த போட்டியும் இருக்கும். சமீபத்தில் சவுதி அரேபியா அரசு அதன் ஆராம்கோ நிறுவனத்தின் பங்குகள் வெளியிட்டதற்கு ஒப்பான ஒரு வெளியீடாக இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது. எல்.ஐ.சி.யின் ஊழியர்களுக்கு, விலையிலோ, ஒதுக்கீட்டிலோ சலுகைகள், முன்னுரிமை இருக்கலாம்.

இது போல அரசு அதன் 33 நிறுவனங்களின் ஓரளவு பங்குகளை ‘டிஸ்இன்வெஸ்ட்மென்ட்’ செய்திருக்கிறது. ஏர் இந்தியா, ஷிப்பிங் கார்ப்பரேஷன் போன்ற சிலவற்றை இந்த ஆண்டு செய்யவிருக்கிறது. எந்த நிறுவனங்களை இப்படிச் செய்யலாம் என்பதை நிதிஆயோக் முடிவுசெய்கிறது.

நஷ்டம் ஏற்படுத்தும் பொதுத்துறை நிறுவனங்களைத் தானே விற்கவேண்டும்? நல்ல லாபம் ஈட்டும் நிறுவனங்களை ஏன் விற்கவேண்டும் என்ற கேள்வி வரலாம். ஏர் இந்தியா போன்ற நிறுவனங்களை விற்க இயலவில்லை. நல்ல நிறுவனங்களுக்குத்தான் சந்தையில் தேவை இருக்கிறது; விலை கிடைக்கிறது.

‘யோகக்க்ஷேமம் வஹாம்யஹம்’ என்பது எல்.ஐ.சி.யின் தாரகமந்திரம். அதன் பொருள், ‘உலக நலம் எங்கள் பொறுப்பு’. அரசு நிறுவனம் என்ற நம்பிக்கையில்தானே இதில் பாலிசிகள் எடுத்தோம்! இனி எங்கள் பாலிசிகளுக்கு அரசின் உத்தரவாதம் இல்லையா? என்ற அச்சமும் வர ஆரம்பித்திருப்பதாக முகவர்கள் சொல்கிறார்கள். அதற்கு நிதி மந்திரி, நிச்சயம் அரசின் உத்தரவாதம் உண்டு என்று உறுதியளித்திருக்கிறார். பத்து சதவீதப் பங்குகளை விற்றபின்பும், அது அரசு நிறுவனம் போலதான்.

பொதுத்துறை நிறுவனங்கள் பலவும் இப்படித்தான் இயங்கிக்கொண்டிருக்கின்றன. உதாரணத்திற்கு பாரத ஸ்டேட் வங்கியின் மொத்தப்பங்குகளில், 42 சதவீதம் அரசு வசம் இல்லை. தனியார்களிடம் தான் இருக்கிறது. அரசு 58 சதவீத பங்குகள் மட்டுமே வைத்துக்கொண்டு நிர்வாகம் செய்கிறது. இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனத்தின் 51 சதவீத பங்குகள் மட்டுமே அரசு வசம். மீதமெல்லாம் தனியார் வசம். பாரதமின்மிகு நிறுவனம் 37 சதவீதப்பங்குகள் தனியார் வசம். இப்படியாக பல்வேறு பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் பங்குகள் தனியார்களுக்கு விற்கப்பட்டிருக்கின்றன.

தாக்கல் செய்யப்பட்டிருக்கும் பட்ஜெட்படி, 2020-21-ம் நிதி ஆண்டில் மத்திய அரசு செலவு செய்ய திட்டமிருக்கும் மொத்தத் தொகை, சுமார் 30 லட்சம் கோடி ரூபாய்கள். வரி வருமானம் உட்பட எதிர்பார்க்கும் மொத்த வருமானம், 20 லட்சம் கோடி ரூபாய்கள் மட்டுமே. நிகரமாக, 10 லட்சம் கோடி பற்றாக்குறை. இந்த பத்து லட்சம் கோடி ரூபாயையும் அரசால் கடன் வாங்கி சமாளிக்க இயலாது. காரணம், அடுத்த நிதி ஆண்டில், ஏற்கனவே வாங்கிய கடன்களுக்கு கொடுக்க வேண்டிய வட்டி மட்டும் ஏழு லட்சம் கோடி ரூபாய்கள். வேறு வழிகளில் நிதி திரட்டாவிட்டால், இந்த ஆண்டு புதிய கடன்கள் மட்டும் ரூ.10 லட்சம் கோடி ஆகிவிடும்.

அரசால் செலவுகளை குறைக்கவோ, கட்டுப்படுத்தவோ இயலவில்லை. தேவைகள் அதிகரிக்கின்றன. அதன் வருவாய்க்காக வரி போடுகிறது. ஆனால், அந்த வரி வருவாய் போதவில்லை. அதனால் அது ஏனைய வழிகளில் நிதி திரட்ட முயல்கிறது. ஸ்பெக்ட்ரம் ஏலம் போன்றவை மற்ற வழிகள். அவற்றில் ஒரு வழி அதன் நிறுவனப்பங்குகளை/ பங்குகளின் ஒரு பகுதியை விற்பது. அதனால், இந்த 2020-21-ம் ஆண்டு பற்றாக்குறையின் ஒரு பகுதியை ஈடுகட்ட, அரசு அதன் நிறுவனங்களான எல்.ஐ.சி., போன்ற நிறுவனங்களின் ஓரளவு பங்குகளை விற்று, அதன் மூலம் 2.1 லட்சம் கோடி திரட்டி, மீதிப் பற்றாக்குறையான, 7.96 லட்சம் கோடி ரூபாயை கடன் வாங்கத் திட்டமிட்டிருக்கிறது.

ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவு சந்தையில் இருந்து திரட்டப்பட்டால் சந்தையில் பணப்புழக்கம் குறையும், புதிய பங்குதாரர்கள் வருவதால் நிறுவனத்தின் செயல்பாடுகள் மற்றும் தகவல் தெரிவிப்பில் வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும் என்றெல்லாம் எதிர்பார்ப்பவர்கள் இருக் கிறார்கள். அதே சமயம் புதிய பங்குதாரர்கள் நிர்வாகத்தில் மாற்றங்கள் கொண்டுவருவார்கள் என்கிற அச்சமும், இந்த 10 சதவீதம் என்பது ஆரம்பம்தான். போகப் போக மேலும் அதிக சதவீதப்பங்குகளை அரசு விற்கும் என்ற சந்தேகங்களும் ஊழியர்கள் மத்தியில் இருக்கிறது.

- டாக்டர் சோம வள்ளியப்பன்

Next Story