‘கண்டத்தில்’ இருந்து தப்பிய டிரம்ப்


‘கண்டத்தில்’ இருந்து தப்பிய டிரம்ப்
x
தினத்தந்தி 15 Feb 2020 9:16 AM GMT (Updated: 15 Feb 2020 9:16 AM GMT)

டிரம்ப் உள்ளிட்ட மூன்று அமெரிக்க ஜனாதிபதிகள் மட்டுமே இதுவரை பதவி நீக்க நடவடிக்கைகளை எதிர்கொண்டுள்ளனர். வாட்டர்கேட் விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட ரிச்சர்ட் நிக்சன் மீது பதவி நீக்க நடவடிக்கைகள் தொடங்கும் முன்பே, அவர் ராஜினாமா செய்தார்.

அமெரிக்காவின் 45-வது ஜனாதி பதியான டொனால்ட் டிரம்ப் மீதான பதவி நீக்க தீர்மானத்தின் மீது, பிப்ரவரி 5, 2020 அன்று செனட்டில் நடந்த வாக்கெடுப்பில், அதிகார துஷ்பிரயோக குற்றச்சாட்டில், ‘குற்றமற்றவர்’ என்று 52-48 வாக்குகள் பெற்று, விடுவிக்கப்பட்டார். இதன் மூலம் பெரிய ‘கண்டத்தில்’ இருந்து அவர் தப்பினார். நாடாளுமன்றத்தின் நடவடிக்கைகளை முடக்கிய குற்றச்சாட்டில் ‘குற்றமற்றவர்’ என்று 53-47 வாக்குகள் பெற்று விடுவிக்கப்பட்டார். 100 உறுப்பினர்களை கொண்ட அமெரிக்க செனட்டில், ‘குற்றம் செய்தவர்’ என்று 67 வாக்குகள் பதிவானால் தான் அவரை பதவி நீக்கம் செய்ய முடியும்.

பின்னர், வெற்றி களிப்பில் இருந்த டிரம்ப், மக்கள் முன்பு ‘டிரம்பு விடுவிப்பு’ என்ற தலைப்புச் செய்திகளை கொண்ட அமெரிக்க நாளிதழ் ஒன்றை விரித்து காட்டியதை பார்க்க முடிந்தது. அதை சட்டகத்தில் வைத்து பாதுகாக்க போவதாகவும் கிண்டல் செய்தார். தனது வெற்றியை டிரம்ப் பெருமையாக வெளிபடுத்தி இருக்கலாம். ஆனால் அவர் மீதான இறுதி தீர்ப்பு, நவம்பர் 2020-ல் நடக்கும் தேர்தலில், வாக்காளர்கள் மூலம் கிடைக்கும் என்று கருதுகின்றனர்.

இந்தியாவை பொருத்த வரை, அமெரிக்க இந்திய உறவுகளை பலப்படுத்த, பிரதமர் மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு இது சாதகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு ஆதரவு, பாகிஸ்தானுக்கு எதிர்ப்பு, எதிர் வரும் வர்த்தக ஒப்பந்தம், அமெரிக்காவில் இருந்து பெரிய அளவில் முதலீடுகளை ஈர்க்கும் திட்டம் மற்றும் பிராந்திய புவிசார் அரசியலில், சீனாவுக்கு எதிராக இந்தியா தலைமை ஏற்க வகை செய்தல் போன்ற விஷயங்களில் அமெரிக்க ஆதரவை பெற மோடி முயற்சி செய்து வருகிறார்.

பதவி நீக்க நடவடிக்கைகளை எதிர் கொண்ட மூன்றாவது அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் இருக்கிறார். இது தான் முற்றிலும் ஒரு தலைபட்சமான, எதிர்க்கட்சியினால் மட்டுமே முன்னெடுக்கப்பட்ட, முதல் பதவி நீக்க நடவடிக்கை ஆகும். (கிளிண்டன் மற்றும் ஜான்சன் ஆகிய இருவர் மீதான பதவி நீக்க நடவடிக்கைகளுக்கு அவர்களின் சொந்த கட்சியினரின் ஆதரவும், வாக்குகளும் கிடைத்தன). ரிச்சர்ட் நிக்சன் மீதான பதவி நீக்க நடவடிக்கைகள் தொடங்கிய பின், அவை முடிவடையும் முன்பே அவர் பதவி விலகினார். பதவி நீக்க நடவடிக்கை, முதன் முறையாக 1868-ல், ஆன்ட்ரூ ஜான்சன் மீது முன்னெடுக்கப்பட்டது. இரண்டாவதாக 1998-ல் பில் கிளிண்டன் மீது முன்னெடுக்கப்பட்டது.

இப்போது டொனால்ட் டிரம்ப் மீது 2019-ன் இறுதியில் தொடங்கப்பட்டது. ஜான்சன் மற்றும் கிளிண்டன் ஆகியோர் விடுவிக்கப்பட்டு, தம் பதவியில் தொடர்ந்தனர். டிரம்ப் மீதான செனட் விசாரணை ஜனவரி 16, 2020-ல் தொடங்கியது. இறுதியில் அவர் பிப்ரவரி 5, 2020 அன்று விடுவிக்கப்பட்டார்.

பதவி நீக்க நடவடிக்கையின் முதல் பகுதி, அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் நடைபெறும். அங்கு ஒரு எளிமையான பெரும்பான்மை வாக்கெடுப்பின் மூலம், பதவி நீக்க தீர்மானத்தை அங்கீகரித்து, ஜனாதிபதியை பதவி நீக்கம் செய்ய வகை செய்யும். இரண்டாவது பகுதி சென்ட் சபையில் நடைபெறும். அங்கு பதவி நீக்க தீர்மானத்தை நிறைவேற்ற, மூன்றில் இரண்டு பங்கு வாக்குகள் கொண்ட பெரும்பான்மை தேவைப்படுகிறது.

பிரதிநிதிகள் சபையில் நடைபெற்ற ஒரு அதிகாரபூர்வ விசாரணையில், 2020 நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் வெற்றி பெற, வெளிநாட்டு உதவியை கோரினார் என்றும், பிறகு அதன் மீதான விசாரணைகளை முடக்கும் நோக்கத்தில், ஆவணங்களை அழிக்கவும், விசாரணைக்கு ஆஜராகவும் கோரி தனது சகாக்களுக்கு அனுப்பப்பட்ட சம்மன்களை உதாசீனப்படுத்த அறிவுறுத்தினார் என்ற குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டு, அவற்றின் அடிப்படையில் டிரம்ப் மீதான பதவி நீக்க நடவடிக்கைகள் தொடங்கின.

2019 ஆகஸ்டில், உக்ரைன் நாட்டிற்கான ராணுவ உதவிகளை டிரம்ப் நிறுத்தி வைத்து, உக்ரைனிய ஜனாதிபதி வோலோடிமைர் ஜெலென்ஸ்கியை வெள்ளை மாளிகைக்கு அழைத்து, டிரம்பின் அரசியல் எதிரிகளில் ஒருவரான ஜோ பிெடன் மீது ஒரு விசாரணையை அறிவிக்க தூண்டினார் என்றும், 2016 ஜனாதிபதி தேர்தலில் உக்ரைன் நாடு தான் தலையிட்டது, ரஷியா அல்ல என்ற சதிக் கோட்பாட்டை முன்மொழியவும் தூண்டினார் என்று ஒரு உண்மைகளை அம்பலப்படுத்தும் செயல்பாட்டாளார் கூறினார்.

பதவி நீக்க நடவடிக்கை மட்டும் தான் ஜனாதிபதியை தம் தவறுகளுக்கு பொறுப்பேற்க செய்ய உதவும் ஒரே ஆயுதமல்ல. அமெரிக்க நாடாளுமன்றம், கண்டனத் தீர்மானம் ஒன்றை தேர்ந்தெடுத்திருக்கலாம். இதன் மூலம் டிரம்பின் நடவடிக்கைகள் மீது ஒரு கடுமையான கண்டனத்தை முன் வைத்து, அதற்கு அனைத்து கட்சி ஆதரவை ஓரளவு பெற்றிருக்க முடியும். ஆனால் ஜனநாயக கட்சியினர் பதவி நீக்க நடவடிக்கைகளை முன்னெடுத்தனர் என்று டக்குளஸ் ஹேய் என்ற வெள்ளை மாளிகை ஆய்வாளர் ஒரு தொலைக்காட்சியில் கூறினார்.

இந்த நடவடிக்கைகள் முழுவதிலும், பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலொசி மற்றும் ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் அனைவரும், தார்மீக ரீதியான நடைமுறையை முன்னெடுத்ததால், இரண்டு அடிப்படை யதார்த்தங்களை அவர்கள் கணக்கில் கொள்ளத் தவறினர். முதலாவதாக பதவி நீக்க நடவடிக்கை என்பது அரசியல் நடவடிக்கை தான். சட்ட நடவடிக்கை அல்ல. பதவி நீக்க விசாரணை என்பது குற்றவியல் வழக்கல்ல. குடியரசு கட்சியினரின் அரசியல் நிலைபாடு, சாட்சிகளும், புதிய ஆதாரங்களும் முன் வைக்கப்படுவதை விரும்பவில்லை என்றால், பிறகு புதிய சாட்சிகள் மற்றும் ஆதாரங்கள் எதுவும் முன் வைக்கச் செய்ய முடியாது.

இரண்டாவதாக, இந்த விசாரணையின் முடிவை, டிரம்ப் தனக்கு சாதகமாக பயன் படுத்தி, தன் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளும் ஆதாரமற்ற, பொய் குற்றச்சாட்டுகள் என்று நிறுவ முடியும். செனட் அவரை விடுவித்த பின், பதவி விலகல் நடவடிக்கைகள் தம்மை நிரபராதி என்று நிரூபித்துள்ளதாக டிரம்ப் கருத வாய்ப்புள்ளது.






- விமர்சனங்களை மின்னஞ்சலில் அனுப்ப: NRD.thanthi@dt.co.in

Next Story