சிறப்புக் கட்டுரைகள்

அச்சுறுத்தும் அதிசய தீவுகள் + "||" + Frightening miracle islands

அச்சுறுத்தும் அதிசய தீவுகள்

அச்சுறுத்தும் அதிசய தீவுகள்
உலகில் உள்ள பல தீவுகளில் மனிதர்கள் அதிகம் வாழ்வதுபோல சில தீவுகளில் விலங்குகளின் எண்ணிக்கையும் அபரிமிதமாக இருக்கின்றன. கிட்டத்தட்ட அந்தத் தீவை அவை ஆக்கிரமித்திருக்கின்றன என்றே சொல்லலாம். அவ்வாறு விலங்குகள் அதிகமாக வாழும் ஆச்சரியமான தீவுகளில் சிலவற்றைக் காணலாம்.
கொமோடோ தீவு!

இந்தோனேசியாவில் 350 கி.மீ. பரப்பளவு கொண்ட தீவுதான் கொமோடோ தீவு. இத்தீவில் உலகின் மிகப்பெரிய பல்லி இனமான கொமோடோ டிராகன் என்ற ராட்சத உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. இந்த டிராகன் விலங்குகள் கொமோடோ தீவில்தான் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. அதனால்தான் இந்த டிராகனுக்கு கொமோடோ டிராகன் எனப் பெயரிடப்பட்டது. சமீபகாலமாக கொமோடோ தீவிற்கு அருகிலுள்ள ரின்கா தீவிலும் இந்த உயிரினம் அதிகமான எண்ணிக்கையில் வளர ஆரம்பித்துள்ளன. இந்த உயிரினங்கள் 10 அடி நீளம் வரை வளரக்கூடியது. சிறுவர்களை அதிவேகமாக வேட்டையாடி உண்ணும் திறன் படைத்தது. அதனால் இந்த இரு தீவுகளிலும் மக்கள் வசிப்பதை முற்றிலுமாகத் தவிர்த்து விட்டனர்.

பாம்புத் தீவு!

இவ்வுலகில் மனிதர்கள் செல்லத் தடைவிதிக்கப்பட்ட பகுதிகளில் முக்கியமான பகுதிகள் சில இருக்கின்றன. அவற்றில் குறிப்பிடத்தக்கது பாம்புத் தீவு. இத்தீவு பிரேசிலில் உள்ள அட்லாண்டிக் பெருங்கடலில் அமைந்துள்ளது. சுமார் 4 லட்சத்து 30 ஆயிரம் சதுரமீட்டர் பரப்பளவு கொண்டது. இந்தத் தீவில் கொடிய விஷம் கொண்ட அதிகமான பாம்புகள் காணப்படுகின்றன. இத் தீவில் பாம்புகள் மட்டுமே உயிர் வாழ்கின்றன. இத்தீவில் நீங்கள் கால்வைக்கும் ஒவ்வொரு மூன்று அடிக்கு ஒரு பாம்பு ஊர்ந்து சென்றுகொண்டிருக்கும். இதனால்தான் இத்தீவிற்குள் முற்றிலுமாக மனிதர்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஓக்குநோஷிமா தீவு!

ஜப்பானில் உள்ள ஓக்குநோஷிமா தீவிற்கு ‘ரேபிட் தீவு’ என்று பெயர். இதற்குக் காரணம் இந்தத் தீவில் வாழும் எண்ணிலடங்கா முயல்கள்தாம். இப்பகுதியில் இவ்வளவு முயல்கள் இருப்பதற்குப் பின்னால் நீண்ட காரணமும் இருக்கிறது. இத்தீவில் உள்ள ஆயுதங்கள் செய்யும் ரசாயன ஆலை ஒன்று வெடித்தது. இந்த விபத்தினால் வெளியேறிய நச்சு வாயுக்களால் இத்தீவு முழுமையாகக் கைவிடப்பட்டது. அந்த நேரத்தில் ஆய்வுக்கூடத்தில் இருந்த முயல்கள் சில இத்தீவிற்குள் தப்பிச் சென்றுள்ளன. பின்னர் பல வருடங்கள் கழித்து கதிர்வீச்சு குறைந்த பின்னர் ஆய்வாளர்கள் மீண்டும் அத்தீவிற்குச் சென்றனர். அங்கே முயல்கள் லட்சக்கணக்கில் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். ஆனால், அந்த முயல்கள் அனைத்துமே மனிதர்களுடன் அதிகமாக நெருங்கிப் பழக ஆரம்பித்ததால் ஆராய்ச்சியாளர்கள் நெகிழ்ச்சியடைந்துள்ளனர். இதனால் இப்போது இந்தத் தீவிற்கு சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வருகை தர ஆரம்பித்துள்ளனர்.

சீல் தீவு!

தெற்கு அட்லாண்டிக் பெருங்கடலில் ஐந்து ஏக்கர் பரப்பளவு கொண்ட சிறு தீவுதான் சீல் தீவு. இந்தத் தீவில் பல ஆண்டுகளாக 64 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழுப்பு நிற சீல் உயிரினங்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்றன. மேலும், இந்த சீல்களை சுறாக்கள் விரும்பி உண்பதால் இத்தீவைச் சுற்றிலும் சுறாக்கள் நடமாட்டம் அதிகமாகக் காணப்படுகின்றன. இதுதவிர, சிறு சிறு திமிங்கலங்களும் உணவுக்காக அடிக்கடி இத்தீவின் பக்கம் வருகிறது. இதனால் மனிதர்கள் மட்டுமல்லாமல் வேறு சில கடல் வாழ் உயிரினங்களும் இத்தீவிற்குச் செல்வதில்லை.

ராம்ரீ தீவு!

இந்தியப் பெருங்கடலில் பர்மாவையொட்டிய மிகப்பெரிய தீவு, ராம்ரீ. சுமார் 1,350 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. இந்தத் தீவின் ஒரு பகுதியில் மட்டுமே மக்கள் வசிக்கின்றனர். இத்தீவின் மேற்குப் பகுதி முழுவதும் ராட்சத உப்புநீர் முதலைகள் மட்டுமே ஆக்கிரமித்துள்ளன. 1945-ம் ஆண்டு கடற்படை வீரர்களின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் 1000 ஜப்பானியர்கள் இத்தீவிற்குள் செல்லும் நிலை ஏற்பட்டது. இறுதியில் வெறும் 20 பேர் மட்டுமே உயிர் பிழைத்துள்ளனர். மீதம் இருக்கும் 980 பேரும் முதலைகளின் தாக்குதலால் உயிரிழந்துள்ளனர். உலகில் மற்ற எந்த விலங்குகளாலும் இவ்வளவு வீரர்கள் ஒரே நேரத்தில் உயிர் இழந்ததில்லை.

இதுபோல சிவப்பு நண்டுகள், கடல் குதிரைகள் என வகைவகையான உயிரினங்கள் ஒவ்வொரு தீவிலும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன.