சிறப்புக் கட்டுரைகள்

கல்யாண ஆசை உருவாக காரணமான காதல் தேவதை + "||" + Love is the cause of the desire of marriage

கல்யாண ஆசை உருவாக காரணமான காதல் தேவதை

கல்யாண ஆசை உருவாக காரணமான காதல் தேவதை
கண்டங்கள் கடந்து காதல் திருமண பந்தத்தில் இணையும் தம்பதியர்கள் வரிசையில் வித்தியாசமான ஜோடி ஒன்று இடம் பிடித்திருக்கிறது. அந்த புதுமண ஜோடியின் பெயர் தரணி - மரீனா. இவர்களில் தரணி, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் உள்ள சாணார்பாளையத்தை சேர்ந்தவர்.
மரீனா, சுவீடன் நாட்டை சேர்ந்தவர். கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவரான இவர், தனது நாட்டில் அதே மதத்தை சேர்ந்தவரை திருமணம் செய்துகொள்ள நினைத்திருந்தவர். தரணி, திருமணமே செய்து கொள்ளக்கூடாது என்ற நிலைப்பாட்டில் இருந்தவர். காதல், இவர்கள் இருவரது பழைய எண்ணங்களையும் மாற்றி புதுமணத் தம்பதிகளாக்கிவிட்டது. மொழி, மதம் கடந்து இருவரும் மணவாழ்க்கைக்குள் அடியெடுத்துவைத்திருக்கிறார்கள். மூன்று ஆண்டுகளாக தொடர்ந்த நட்பு அவர்களை அறியாமல் காதலில் கசிந்துருகச் செய்து, திருமணத்தில் இணைத்திருக்கிறது.

தரணியின் பெற்றோர் சண்முகவேல்-தமிழரசி. அவருக்கு நிரஞ்சன், கிரிவரதன் என்ற இரு சகோதரர்கள் இருக்கிறார்கள். மூவருமே என்ஜினீயரிங் படித்தவர்கள். தரணி, திருச்செங்கோட்டிலும், சென்னையிலும் பள்ளிப்படிப்பை நிறைவு செய்திருக்கிறார். பின்னர் திருச்செந்தூரில் உள்ள டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்திருக்கிறார். அதைத்தொடர்ந்து நொய்டாவில் உள்ள அமீட்டி பல்கலைக்கழகத்தில் எம்.டெக். படிப்பை முடித்துவிட்டு எம்.எஸ். படிப்பதற்காக சுவீடன் நாட்டிற்கு சென்றிருக்கிறார். அங்கு படிப்பை முடித்தவர் அங்குள்ள பிரபல நிறுவனம் ஒன்றில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார்.

அங்கு யாஸ்சோபீஸ் என்ற பகுதியில் தங்கி இருப்பவர், ஓய்வு கிடைக்கும் நேரங்களில் தனது நண்பர் இம்ரானுடன் கூடைப்பந்து விளையாட சென்றுவருவார். அப்போதுதான் அதே பகுதியில் வசித்து வந்த மரீனாவுடன் நட்பு ஏற்பட்டிருக்கிறது. மூன்று வருடங்களாக ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டனர். பின்பு காதலர்களாகியிருக்கிறார்கள். பல்வேறு விஷயங்களில் இருவருக்கும் ஒத்தகருத்து இருந்ததால் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். அதன்படி இருவீட்டார் சம்மதத்துடன் திருச்செங்கோட்டில் இவர்களது திருமணம் விமரிசையாக நடந்தது. தரணி இந்து மதத்தை சேர்ந்தவர். மரீனா கிறிஸ்தவ சமூகத்தை சேர்ந்தவர். இருவரும் இரு மத வழக்கப்படி மோதிரம் மாற்றியும், மாலை மாற்றியும் திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமண நிகழ்ச்சியில் மணமகள் வீட்டார் சார்பில் வெளிநாட்டை சேர்ந்த 6 பேர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இவர்களின் திருமணம் திருச்செங்கோடு மக்களின் கவனத்தை ஈர்ப்பதாக அமைந்தது.

திருமணம் பற்றிய தனது நிலைப்பாட்டில் இருந்து மாறுபட்டு மரீனாவை கரம் பிடித்திருக்கும் பூரிப்பில் இருக்கும் தரணி சொல்கிறார்:

‘‘திருமணமே செய்துகொள்ள வேண்டாம் என்ற முடிவில் நான் இருந்தேன். ஆனால் மரீனாவுடன் பழகியபோது என்னை அறியாமலேயே மனமாற்றம் ஏற்பட்டது. எங்கள் உள் உணர்வுகளை வெளிக்காட்டாமல் ஒருவரை ஒருவர் காதலிக்க தொடங்கினோம். என்னை பொறுத்தவரை காதலுக்கு ஜாதி, மதம், மொழி எதுவும் தடையாக இல்லை. திருமணமே வேண்டாம் என்று சொல்லி வந்த நான் மரீனாவை காதலிக்கும் விஷயத்தையும், அவரை திருமணம் செய்ய விரும்புவதையும் பெற்றோரிடம் கூறினேன். அவர்கள் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டனர். இருவரும் எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக குடும்ப வாழ்க்கையை தொடங்கியிருக்கிறோம்.

எனது மனைவிக்கு நமது நாட்டு உணவு வகைகளை எப்படி சமைக்க வேண்டும் என்று கற்றுக் கொடுத்து வருகிறேன். அவரும் ஆர்வமாக சமையல் பழகி வருகிறார். இட்லி, தோசை, சட்னி, சிக்கன் போன்றவற்றை விரும்பி சாப்பிடுகிறார். ஆனால் அவரால் நம்மை போன்று காரமாக சாப்பிட முடியவில்லை. எனவே சமையலில் காரத்தை குறைத்துவிட்டோம்’’ என்றார்.

மரீனாவுக்கு குடத்தில் தண்ணீர் பிடிப்பது, தேங்காய் உரிப்பது, வீட்டு தோட்ட வேலைகள் செய்வது என ஒவ்வொன்றாக தரணி குடும்பத்தினர் சொல்லிக்கொடுத்து வருகிறார்கள். அவரும் ஆர்வமாக கற்று வருகிறார். ஆட்டுக்குட்டி என்றால் மரீனாவுக்கு எல்லையில்லா ஆனந்தம் ஏற்படுகிறது. அதனை தூக்கிவைத்து கொஞ்சி மகிழ்கிறார். அதற்கு பாட்டில் பாலூட்டி பராமரிக்கிறார்.

திருமணத்தின் மூலம் இந்திய கலாசாரத்துடன் தன்னை இணைத்துக்கொண்டிருக்கும் மரீனாவின் பேச்சில் உற்சாகம் பொங்குகிறது.

‘‘நான் சுவீடனில் அரசு மருத்துவமனை ஒன்றில் சுகாதார மேம்பாட்டு ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி வருகிறேன். உகாண்டாவில் விடுதி ஒன்றையும் சமூக சேவையாக நடத்தி வருகிறேன். அந்த விடுதியில் 27 சிறுவர், சிறுமிகள் தங்கி உள்ளனர். அவர்களுக்கு கல்வி, உணவு போன்றவற்றை வழங்கி வருகிறேன். நான் ஞாயிறு தோறும் தேவாலயத்திற்கு செல்வேன். அங்கு வரும் இளைஞர்களில் ஒருவரை தான் மணப்பேன் என்று நினைத்து இருந்தேன். ஆனால் தரணியின் அனைத்து செயல்பாடுகளும் என்னை ஈர்த்து விட்டது. ஒருவரை ஒருவர் உயிருக்கு உயிராக காதலிக்க தொடங்கி விட்டோம். எனது காதலை பெற்றோரிடம் தெரிவித்தபோது, ‘நீ எந்த முடிவு எடுத்தாலும் அது சரியாகத்தான் இருக்கும்’ என்று கூறி காதலுக்கும், திருமணத்திற்கும் பச்சைக்கொடி காட்டிவிட்டார்கள்.

எனக்கு எங்கள் நாட்டு மொழியோடு, ஆங்கிலமும், ஜப்பானிய மொழியும் தெரியும். தற்போது தமிழ் மொழியையும் கற்று வருகிறேன். தமிழ்மொழி எனக்கு மிகவும் பிடித்து உள்ளது. எதிர்காலத்தில் எங்களது குழந்தைகளுக்கும் தமிழ் மொழியை கற்றுக்கொடுப்போம். இங்கு வீட்டின் அருகிலேயே தேவாலயம் இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. எனது வழிபாட்டு உரிமையில் தரணி ஒருபோதும் தலையிடுவது இல்லை. தமிழக உணவு வகைகள் எனக்கு மிகவும் பிடிக்கிறது. நாங்கள் சாப்பிடுவதற்கு ஸ்பூன்தான் பயன்படுத்துவோம். இப்போது கையில் எடுத்து சாப்பிடுவது நன்றாக இருக்கிறது. அதிலும் வாழை இலையில் சாப்பிடுவது எனக்கு மிகவும் பிடிக்கிறது. இங்குள்ளவர்களின் கடின உழைப்பு என்னை வியப்பில் ஆழ்த்துகிறது’’ என்கிறார்.

இந்திய ஆடைகளில் புடவை ரொம்ப பிடித்திருப்பதாகவும், தரணி பல்வேறு வண்ணங்களில் புடவைகள் வாங்கிக் கொடுத்திருப்பதாகவும், அவற்றை கட்டிக் கொள்ள பழகி வருவதாகவும் கூறுகிறார். மரீனாவுக்கு மார்கஸ் என்ற தம்பியும், மதலின் என்ற தங்கையும் உள்ளனர். இவரது தந்தை யோனாக் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு இருப்பதால் திருமணத்தில் பங்கேற்கவில்லை. தாயார் அனிதா சுவீடனில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். சுவீடனில் பெரும்பாலும் குளிர்ச்சியான தட்பவெப்பநிலையே நிலவும் என்றாலும் திருச்செங்கோட்டில் தற்போது நிலவும் வானிலை தமக்கு பிடித்து இருப்பதாகவும் மரீனா கூறினார்.