நல்லதை சொல்லும் நாட்டுப்புற கலைகள்: இது கழைக்கூத்து


நல்லதை சொல்லும் நாட்டுப்புற கலைகள்: இது கழைக்கூத்து
x
தினத்தந்தி 16 Feb 2020 9:11 AM GMT (Updated: 16 Feb 2020 9:17 AM GMT)

தெருக்கூத்து போன்று தெருவில் நிகழ்த்தப்படும் கலைகளில் ஒன்றுதான் கழைக்கூத்து. தெருக்கூத்து தரையிலும், மேடைகளிலும் நிகழ்த்தப்படும்.

ஆனால் கழைக்கூத்து மூங்கில் மீது ஏறி நின்று நிகழ்த்தப்படும் அம்சங்கள் நிறைந்தது. தெருக்கூத்துகள் திட்டமிட்டு நடத்தப்படும் கலை வகையை சார்ந்தது. பெரும்பாலும் இந்த கலையை நிகழ்த்துவதற்கு முன்னால், முன்அறிவிப்பும் செய்வார்கள். ஆனால் கழைக்கூத்து திடீரென தெருவில் நடைபெறும் அன்றாட பிழைப்பிற்கான கூத்துக் கலையாகும்.

எந்த கலையாக இருந்தாலும் அதை வழிநடத்துவதற்கும், விளக்குவதற்கும் ஒருவர் தேவைப்படுவார். தெருக்கூத்தில் அதை செய்பவரை கட்டியங்காரர் என்பார்கள். இவர்தான் ஆடிப்பாடி நிகழ்ச்சியை தொடங்கிவைப்பார். அதுபோன்று கழைக்கூத்தில் கூத்தாடி தலைவன் என்பவர் பலவாறு இசையூட்டி மக்களை கவர்ந்து கூட்டத்தை சேர்ப்பார். அவர் வீரதீரமாக பேசி மக்களை நிகழ்ச்சியை காண அழைப்பார். இந்திரஜாலம், மந்திரஜாலம் போன்றவைகள் தோற்கும்படியாக ஏராளமான அற்புதங்களை செய்துகாட்டப்போகிறோம் என்று முழக்கமிடுவார்கள். கிராம மக்கள் இதை கூடிநின்று வேடிக்கைபார்ப்பார்கள். கழைக்கூத்தாடிகள் செய்துகாட்டும் சில சாகசங்கள் பார்வையாளர்களை புல்லரிக்கச்செய்யும். சில காட்சிகள் நெகிழவும்வைக்கும். காமெடி காட்சிகளும் இடம்பெறுவதுண்டு. அதனால் கிராமப்புறங்களில் அதனை நாட்டுப்புற சர்க்கஸ் என்று மக்கள் அழைப்பார்கள்.

கழைக்கூத்தில் ஆண்களுக்கு இணையாகப் பெண்களும் பல வித்தைகளைக் காட்டி வியப்பில் ஆழ்த்துவார்கள். கம்பியை கட்டி அதன் மீது ஏறி, அந்தரத்தில் நின்றும் சாகசம்புரிவார்கள்.

இன்றும் இக்கழைக்கூத்து நிகழ்வுகளை நகர்ப்புறங்களிலும் காணலாம். மக்கள் கூடும் இடங்களில் திடீரென கம்புகளை நட்டு அதில் கயிற்றினைக்கட்டி அதன் மீது சிறுமி ஏறி ஆடுவதையும், வித்தைகள் செய்வதையும் காணலாம்.

நகர்ப்புறங்களில் கழைக்கூத்தாடிகளுக்கு பணம் மட்டுமே வழங்கப்படுகிறது. கிராமப்புறங்களில் அவர்களுக்கு தங்கள் பகுதிகளில் விளைந்த விளைபொருட்களையும் மக்கள் மகிழ்ந்து வழங்குவார்கள். பார்வையாளர்கள் தாங்கள் விரும்புபவற்றை வழங்கலாம் என்பதை குறிப்பிடும் விதமாக கழைக்கூத்தாடிகள், நிகழ்வு நடைபெறும் இடத்தில் துணியை விரித்துவைப்பார்கள். அதில் பார்வையாளர்கள் விரும்புபவற்றை இடுவார்கள்.

கழைக்கூத்து கலைஞர்கள் ஆஜானுபாகுவான தோற்றம்கொண்டவர்களாக இருக்கமாட்டார்கள். சாதாரண உடல்வாகுகொண்டவர்களாகவே இருப்பார்கள். ஆனால் உடல் வலிமையும், மனோபலமும் அவர்களிடம் அதிகமாக இருக்கும். அவர்களது ஒல்லியான உடல்வாகு அவர்கள் கழைக்கூத்தை நிகழ்த்துவதற்கும் ஏற்றதாக இருக்கும். கம்பின்மீதும், கம்பியின் மீதும் ஏறிநின்று ஒரு காலால் நடப்பது, உடலை வளைப்பது, குட்டிக்கரணம் அடிப்பது என பல சாகசங்களை நிகழ்த்துவார்கள். இது தமிழ் மரபு வழிவந்த வீரம்மிகுந்த கலையாகும்.

கழைக்கூத்து தமிழ்நாடு மட்டுமின்றி வட இந்திய மாநிலங்களிலும் பெருமளவு நடைபெறுகிறது. பாகிஸ்தானிலும் இது தனிசெல்வாக்கு பெற்றுத் திகழ்கிறது. ஆப்பிரிக்கா, ஐரோப்பா கண்டங் களிலும் இப்படி தெரு வித்தை செய்வோர் உண்டென்றபோதிலும் உத்திகள் மாறுபடும். ஆப்பிரிக்க கண்டத்தை சேர்ந்த கறுப்பர் இன மக்களும் பெருமளவில் இந்த வீரக் கலையில் இடம்பெறுகிறார்கள்.

சங்க காலம் தொட்டே தமிழ்நாட்டில் கழைக்கூத்துக்கலை நடைபெற்றுவருகிறது. குறுந்தொகை பாடல் களிலும் விளக்கப்பட்டிருக்கிறது. இதை மக்கள் பாரம்பரியமாகவே கற்று வருகிறார்கள். அதனால் குடும்பத்துடன் இதில் ஈடுபடுகிறார்கள்.

குடும்பக் கலை
கழைக்கூத்து கலையை நிகழ்த்த தீவிர பயிற்சி மற்றும் மனதை ஒருநிலைப்படுத்தும் செயல்திறன் போன்றவைதேவை.

குழந்தைகளுக்கு பிறந்த 2-வது மாதத்திலேயே இதற்கான பயிற்சியை தொடங்கிவிடுகிறார்கள். தலை நிமிராத 2 மாத குழந்தையை ஒரு கையால் தூக்கி நிறுத்துவது கழைக்கூத்து நடத்துவோர் தங்கள் குழந்தைகளுக்கு அளிக்கும் முதல்கட்ட பயிற்சியாகும்.

குழந்தையை கீழே கிடத்தி வயிற்றில் ஏறி மிதிப்பது, குழந்தையின் வயிற்றில் கயிற்றை கட்டி, ஊஞ்சல்போல் ஆட்டுவது போன்றவைகள் திகிலூட்டும் சாகசங்களாகும். தங்கள் குழந்தைகள் பிறந்த சில மாதங்களிலே இதற்கான பயிற்சிகளை அளிப்பார்கள்.

இந்த கூத்துக்கு 9 முதல் 18 மீட்டர் நீளம்கொண்ட 4 வலிமையான மூங்கில்கள் பயன்படுத்தப்படுகிறது. இரு மூங்கில் கம்புகளை பெருக்கல்குறிபோல் இருபுறமும் நட்டுவைத்து கயிற்றால் இணைப்பார்கள். கம்புகள் அசையாமல் இருக்க மாட்டுத்தோலால் உருவாக்கப்பட்ட கயிற்றை பயன்படுத்துகிறார்கள். அதற்கு மேல் இரும்புக் கம்பியால் கட்டுவார்கள். இருபுறமும் நடப்பதற்கு வசதியாக மேலே உள்ள கயிறு இழுத்து கட்டப்பட்டிருக்கும். அதில்தான் நடந்து சாகசம்புரிவார்கள்.

குஜராத்தை பூர்வீகமாக கொண்டவர்கள்தான் இந்த கழைக்கூத்துகலைக்கு முன்னோடியாக இருந்திருக்கிறார்கள். அங்கு முற்காலத்தில் அடிக்கடி இயற்கை சீற்றங்களால் பாதிப்புகள் ஏற்பட்டதால், கழைக்கூத்து நடத்துவோர் பிழைப்பு தேடி ஆந்திரா வழியாக தமிழகத்துக்கு வந்து அடைக்கலமானவர்கள் என்று ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த கலைஞர்களின் குடும்பத்தில் உள்ள ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் ஒருங்கிணைந்து இந்த கலையை நிகழ்த்துவதால் இது குடும்பக் கலை என்று அழைக்கப்படுகிறது.

- கலை வ(ள)ரும்.

கட்டுரை: இளவழகன், பகுதி நேர விரிவுரையாளர், நாட்டுப்புற கலைத்துறை, அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி.

Next Story