விண்வெளியின் மையப்பகுதியில் இருந்து வரும் மர்மத் தகவல்


விண்வெளியின் மையப்பகுதியில் இருந்து வரும் மர்மத் தகவல்
x
தினத்தந்தி 17 Feb 2020 12:06 PM GMT (Updated: 17 Feb 2020 12:06 PM GMT)

உயிர்களின் பரிணாமத்தில் தகவல் பரிமாற்றமானது பல வழிகளில் நிகழ்கிறது என்றாலும், பரிணாமத்தில் மிகவும் வளர்ந்த நிலையில் இருக்கும் மனிதனால் மட்டுமே பேசுவதன் மூலமாக பிற மனிதர்களுடன் தகவல் பரிமாற்றம் செய்ய முடிகிறது.

ஆங்கிலம் உலகின் பெரும்பாலான நாடுகளில் பேசப்படும் மொழியாக இருப்பது உண்மை என்றாலும் கூட, இன்றும் முழுமையாக ஆங்கிலம் பேசாத பல வளர்ந்த நாடுகள் இருக்கத்தான் செய்கின்றன. பூமியில் வாழும் மனிதர்களுக்கு மத்தியிலேயே தகவல் பரிமாற்றத்தில் இத்தகைய சில சிக்கல்கள் இருக்கும்போது, பூமிக்கு வெளியே விண்வெளியில், பிரபஞ்சத்தின் வேறு உலகங்களில் வாழும் உயிர்கள் அல்லது ஏலியன்கள் என்று அழைக்கப்படும் வேற்றுக்கிரக வாசிகளுடன் மனிதர்களாகிய நாம் தகவல் பரிமாற்றம் செய்ய முடியுமா? என்பது இன்னும் கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது.

ஆனாலும், ஏலியன்கள் விண்வெளியில் எங்காவது இருக்கிறார்களா? அப்படி இருந்தால் அவர்கள் எப்படி இருப்பார்கள்? அவர்கள் தகவல் பரிமாற்றக் கருவி/மொழி என்னவாக இருக்கும்? போன்ற பல கேள்விகள், உலக விஞ்ஞானிகள் பலரின் உறக்கத்தை தினசரி கெடுத்துக்கொண்டுதான் இருக்கின்றன. அதன் காரணமாக, ஏலியன்கள் தொடர்பான பல ஆய்வுகளை அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் உள்ளிட்ட உலகின் பல விண்வெளி ஆய்வு மைய விஞ்ஞானிகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்கள்.

பூமியில் இருந்து சுமார் 50 கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள விண்வெளி பகுதி ஒன்றில் இருந்து ‘16 நாட்களுக்கு ஒரு முறை’ என்ற அளவில் சில மர்மத் தகவல்கள் வந்துகொண்டு இருக்கின்றன என்று புதிய ஆய்வு ஒன்றில் செய்தி வெளியாகி யுள்ளது. முக்கியமாக, fast radio bursts/FRBs (விரைவு ரேடியோ வெடிப்புகள்) எனும் தகவல் வகையைச்சார்ந்த இந்த வேற்றுக்கிரகத் தகவல், 16 நாட்களுக்கு ஒரு முறை என்று தொடர்ச்சியாக வந்துகொண்டே இருப்பது பூமியில் கண்டறியப்படுவது இதுவே முதல்முறை என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

மிகவும் சக்திவாய்ந்த ஆற்றல் மையங்களில் இருந்து வெளியிடப்படுவதாக கருதப்படும், ஆனால் அதேசமயம் புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு சிக்கலான இந்த FRB தகவல்கள் பூமியில் முதன்முதலாக கடந்த 2007-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்டன. ஒரு முறை அல்லது பலமுறை என இருவகையில் நிகழும் இந்த FRB தகவல்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நிகழ்வதே இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் கடந்த வருடம் கனடாவில் உள்ள FRB ஆய்வுகளை மேற்கொள்ளும் Canadian Hydrogen Intensity Mapping Experiment Fast Radio Burst Project (CHIME/FRB) ஆய்வுக்குழுவினர் மீண்டும் மீண்டும் நிகழும் FRB 180916.J0158+65 எனும் புதிய FRB-யை உலகில் முதல் முறையாக பதிவு செய்தனர்.

கடந்த 2018 செப்டம்பர் முதல் 2019 அக்டோபர் வரை வெளியான FRB-களை கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள CHIME radio telescope பதிவு செய்தது. அதில் தொடக்கத்தில் நான்கு நாட்களுக்கு ஒரு முறையும், அதனைத் தொடர்ந்து 12 நாட்களுக்கு ஒரு முறையும் வெளியான FRB-கள், இறுதியாக 16 நாட்களுக்கு ஒருமுறை வெளியாவது நிலையாக தொடர்ந்து நிகழ்ந்தது கண்டறியப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இந்த FRB மீதான மேலதிக ஆய்வுகளில், இந்த FRB-கள் SDSS J015800.28+654253.0 எனும் தொலைதூர விண்மீன் மண்டலத்தில் இருந்து வருவதாக விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர். FRB-கள் எங்கிருந்து வருகின்றன என்பது தெரிந்துவிட்டாலும் துரதிர்ஷ்டவசமாக, இந்த FRB-களுக்கு என்ன அர்த்தம் என்று விஞ்ஞானிகளால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை.

மேலும் இந்த FRB-கள் கருந்துளை போன்ற ஒரு உறுதிதான விண்வெளி அமைப்பைச் சுற்றி வருகிறது என்று வைத்துக்கொண்டால், அவற்றை பூமியில் ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில் மட்டுமே கண்டறிய முடியும் என்கிறார்கள் விஞ்ஞானிகள். முக்கியமாக, இந்த FRB-களின் 16 நாள் நிகழ்வு, இவை கருந்துளை போன்ற ஒரு அமைப்பை சுற்றிவரும் எனும் கருதுகோளுடன் ஒத்துப்போவதாக இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

ஆனால், சமீபத்தில் வெளியான மற்றொரு ஆய்வில், ஒரு மிகப்பெரிய நட்சத்திரம் மற்றும் மிகவும் அடர்த்தியான நட்சத்திர மையம் அல்லது நியூட்ரான் நட்சத்திரம் ஆகிய இரண்டும் ஒன்றாக இருக்கும் ஒரு பைனரி அமைப்பில் இருந்துகூட இந்த FRB-கள் பூமியை நோக்கி வந்திருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இது தவிர, காந்த சக்தி அதிகம் கொண்ட நியூட்ரான் நட்சத்திரங்களான மேக்னடார்களில் (Magnetar) இருந்துகூட இந்த FRB-கள் பூமிக்கு வந்திருக்கக்கூடும் என்றும் விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

ஆனால், மேக்னடார்கள் சில நொடிகளுக்கு ஒருமுறை சுற்றும் தன்மைகொண்டவை என்பதால் இந்த FRB-களின் 16 நாள் சுழற்சியானது மேக்னடார் சார்ந்த FRB-களுடன் ஒத்துப்போகவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

அடுத்தக்கட்ட ஆய்வாக, CHIME/FRB ஆய்வுக்குழுவானது இதுவரை கண்டறியப்பட்டுள்ள FRB-களில் எதனுடனாவது இந்த 16 நாள் சுழற்சி கொண்ட FRB-கள் பொருந்துகின்றனவா என்று ஆய்வு செய்யத் திட்டமிட்டுள்ளது. மேலதிக ஆய்வுகளில், FRB-கள் குறித்த உண்மைகள் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக, இந்த FRB-கள், மனிதகுலத்தால் கடந்த பல பத்தாண்டுகளாக தேடப்பட்டு வரும் ஏலியன்களால் வெளியிடப்பட்டு இருக்கலாம் என்பதே விஞ்ஞானிகளின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Next Story