தினம் ஒரு தகவல் ; இலைவழி நாற்று முறை


தினம் ஒரு தகவல் ; இலைவழி நாற்று முறை
x
தினத்தந்தி 19 Feb 2020 9:29 AM GMT (Updated: 19 Feb 2020 9:29 AM GMT)

இலையை பறித்து நட்டால் அது வேர் விட்டு செடியாக வளரும் முறை வந்துவிட்டது. திசு வளர்ப்பு முறை அடிப்படையில் ‘இலை வழி நாற்று முறை’ எனப்படும் இந்த நுட்பம் நடைபெற்று உள்ளது.

பொதுவாக, விதைகளில் இருந்துதான் வேர் உருவாகி, செடி வளரும். இதனால், மரங்களை வளர்ப்பதற்கு விதைகள் அதிக அளவில் தேவைப்படும். தற்போது சந்தைப்படுத்தப்படும் பெரும்பாலான விதை ரகங்கள் மரபணுக்களில் மாற்றம் செய்யப்பட்டு விற்கப்படுகின்றன. இதை சரிசெய்ய களம் இறங்கி, இலையிலிருந்து செடியை உருவாக்கும் ‘இலை வழி நாற்று முறை’யை அறிமுகம் செய்து வேளாண் விஞ்ஞானிகளை வியப்பு அடையச் செய்து உள்ளார், தமிழ்நாட்டைச் சேர்ந்த ராஜரத்தினம்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில் ‘‘2010-ம் ஆண்டு முதல் ‘இலை வழி நாற்று முறை’ குறித்த ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகிறேன். பொதுவாக, பத்து லட்சம் மரக்கன்றுகளை உருவாக்க, பத்து லட்சம் விதைகள் தேவைப்படும். இதுவே, ஒரு மரத்தில் ஆயிரக்கணக்கான இலைகள் இருப்பதால், அவற்றையே விதையாக பயன்படுத்த முடியுமா என்ற அடிப்படையில்தான் இதை கண்டுபிடித்தேன். இதன் மூலம் உற்பத்திச் செலவு 30 சதவீதம் குறையும். அதே நேரத்தில் அதிக அளவில் மகசூலும் கிடைக்கும்’’ என்கிறார்.

மேலும் அவர் கூறுகையில், ‘‘இலைவழி நாற்று முறை என்பது மிக எளிமையான இயற்கையான நாற்று முறை. கலப்படம் இல்லாத மரபணுக்களை கொண்ட தாய் மரத்தில் இருந்து சுத்தமான ரகத்தின் இலையை எடுத்து, ஊறவைத்து, ஈரமான மண்ணில் நட்டுவைத்துவிட்டு, மிதமான சூரிய ஒளியில் வைத்து குறிப்பிட்ட கால இடைவெளியில் தண்ணீர் ஊற்றினால் போதும். நான்கு வாரத்தில் இலையில் இருந்து வேர் உருவாகிவிடும். இதுவரை இலைவழி நாற்று உற்பத்தி முறையில் கொய்யா, நாவல் மரங்களை உருவாக்கியுள்ளேன். தற்போது வேப்ப மரக்கன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். மேலும் அழிவின் விளிம்பில் இருக்கும் பல்வேறு தாவர வகைகளை மீட்கும் முயற்சியிலும் தீவிரமாக ஈடுபட்டு உள்ளேன். இலைவழி நாற்று முறையில் அனைத்து மரங்களையும், அரிய வகை மூலிகைச் செடிகளையும் மீட்டுருவாக்கம் செய்து, இயற்கையை அழிவிலிருந்து காக்க வேண்டும் என்பதே எனது குறிக்கோள். மேலும், இந்த முறையின் மூலம் மரம் வளர்ப்பை எளிமையாக்கி, தரமான தாவரங்களையும் பசுமையான சூழலையும் உருவாக்குவதே எனது நோக்கம். இலை வழி நாற்றுமுறை என்பது எதிர்காலத்தில் மிகப் பெரிய பசுமை புரட்சியாக அமையும்’’, என நம்பிக்கை தெரிவிக்கிறார், ராஜரத்தினம்.

திசு வளர்ப்பு முறை அடிப்படையில்தான் இலை வழி நாற்று முறையும் சாத்தியமாகி உள்ளது. திசு வளர்ப்பில் ஊக்கிகளை பயன்படுத்தி அணுக்களின் வளர்ச்சி தூண்டப்படும். அதுபோலவே, இலையின் நடுவே இருக்கக்கூடிய நடுக்காம்பின் வளர்ச்சியை தூண்டுவதால் வேர் உருவாகக்கூடிய சாத்தியத்தை இவர் உறுதிபடுத்தி உள்ளார். சில தாவரங்களில் விதையில் இருந்தே நோய்கள் இருக்கும். இந்த முறையில் அவை தடுக்கப்படும் என்பது இந்த கண்டுபிடிப்பில் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.


Next Story