நடப்பு வேளாண் பருவத்தில் உணவு தானியங்கள் உற்பத்தி 29.19 கோடி டன்னாக உயரும் வேளாண் அமைச்சகம் மதிப்பீடு


நடப்பு வேளாண் பருவத்தில் உணவு தானியங்கள் உற்பத்தி 29.19 கோடி டன்னாக உயரும் வேளாண் அமைச்சகம் மதிப்பீடு
x
தினத்தந்தி 20 Feb 2020 8:41 AM GMT (Updated: 20 Feb 2020 8:41 AM GMT)

நடப்பு வேளாண் பருவத்தில் (2019 ஜூலை-2020 ஜூன்) உணவு தானியங்கள் உற்பத்தி 29.19 கோடி டன்னாக உயரும்.

புதுடெல்லி

நடப்பு வேளாண் பருவத்தில் (2019 ஜூலை-2020 ஜூன்) உணவு தானியங்கள் உற்பத்தி 29.19 கோடி டன்னாக உயரும் என மத்திய வேளாண் அமைச்சகம் தனது இரண்டாவது முன்கூட்டிய மதிப்பீட்டில் தெரிவித்துள்ளது.

15 சதவீத பங்கு

நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 60 சதவீதத்திற்கு மேற்பட்டவர்கள் விவசாயம் மற்றும் அது சார்ந்த தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதே சமயம் நாட்டின் மொத்த உற்பத்தியில் வேளாண் துறையின் பங்களிப்பு 15 சதவீத அளவிற்கே உள்ளது.

இந்தியாவில் வேளாண் பருவம் என்பது ஜூலையில் தொடங்கி ஜூன் மாதத்தில் நிறைவடைகிறது. இதில் கரீப், ரபி ஆகிய பருவங்களில் பயிர் சாகுபடி நடைபெறுகிறது. கரீப் பருவம் ஜூன் மாதம் தொடங்கி அக்டோபர் மாதத்தில் நிறைவடைகிறது. அக்டோபர்-மார்ச் மாத காலம் ரபி பருவமாகும். கரீப் பருவ சாகுபடி பணிகள் தென்மேற்கு பருவமழையை நம்பியும், ரபி பருவ விவசாய பணிகள் வடகிழக்கு பருவமழையையும் சார்ந்து நடைபெறுகின்றன.

28.50 கோடி டன்

2017-18 வேளாண் பருவத்தில் (ஜூலை-ஜூன்) நெல் உள்ளிட்ட உணவு தானியங்கள் உற்பத்தி 28.50 கோடி டன்னாக இரு ந்தது. 2018-19 பருவத்தில் தானியங்கள் உற்பத்தி 28.52 கோடி டன்னை எட்டி இருப்பதாக மத்திய வேளாண் அமைச்சகத்தின் இறுதி மதிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது இதுவரை இல்லாத சாதனை அளவாகும்.

இந்நிலையில், 2019-20 வேளாண் பருவத்தில் (ஜூலை-ஜூன்) உணவு தானியங்கள் உற்பத்தி 29.19 கோடி டன்னாக அதிகரிக்கும் என மத்திய வேளாண் அமைச்சகத்தின் இரண்டாவது முன்கூட்டிய மதிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக, உற்பத்தியில் மேலும் ஒரு புதிய சாதனை அளவை எட்ட உள்ளது குறிப்பிடத்தக்கது.

வேளாண் அமைச்சகத்தின் மற்ற மதிப்பீடுகள் வருமாறு:-

2019-20 பருவத்தில் அரிசி உற்பத்தி 11.75 கோடி டன்னை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2018-19 பருவத்தில் அது 11.64 கோடி டன்னாக இருந்தது. கோதுமை விளைச்சல் (10.36 கோடி டன்னில் இருந்து) 10.62 கோடி டன்னாக உயரும் என தெரிகிறது. சிறுதானியங்கள் மகசூல் (4.30 கோடி டன்னில் இருந்து) 4.52 கோடி டன்னாக அதிகரிக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டு இருக் கிறது.

எண்ணெய் வித்துக்கள்

பருப்பு வகைகள் உற்பத்தி (2.21 கோடி டன்னில் இருந்து) 2.30 கோடி டன்னாக உயரும் எனவும் எண்ணெய் வித்துக்கள் விளைச்சல் (3.15 கோடி டன்னில் இருந்து) 3.42 கோடி டன்னாக அதிகரிக்கும் எனவும் வேளாண் அமைச்சகம் கூறி இருக்கிறது. பருத்தி உற்பத்தி 3.49 கோடி பொதிகளாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த பருவத்தில் அது 2.80 கோடி பொதிகளாக இருந்தது (ஒரு பொதி = 170 கிலோ). அதே சமயம் கரும்பு மகசூல் (40.54 கோடி டன்னில் இருந்து) 35.38 கோடி டன்னாக குறையும் என தெரிகிறது.

இவ்வாறு வேளாண் அமைச்சகத்தின் இரண்டாவது முன்கூட்டிய மதிப் பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெல், கோதுமை

விவசாய துறையின் மொத்த உற்பத்தியில் நெல், கோதுமை போன்ற பயிர்களின் பங்கு சுமார் 60 சதவீதமாக உள்ளது. க ால்நடைகள் மற்றும் வன விளைபொருள்களின் பங்கு முறையே 20 சதவீதம் மற்றும் 8.5 சதவீதமாக இருக்கிறது. கடல் உணவுப் பொருள்களின் பங்கு 5.5 சதவீதமாக உள்ளது.

சென்ற நிதி ஆண்டில் (2018-19) வேளாண் துறையின் வளர்ச்சி 2.9 சதவீதமாக குறைந்தது. 2017-18-ஆம் நிதி ஆண்டில் அது 3.4 சதவீதமாக இருந்தது. அதற்கு முந்தைய ஆண்டில் (2016-17) 6.3 சதவீதமாக இருந்தது.

முதல் காலாண்டில்...

நடப்பு 2019-20-ஆம் ஆண்டில் விவசாயத் துறை 3.1 சதவீதம் வளர்ச்சி காணும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிதி ஆண்டின் முதல் காலாண்டில் (2019 ஏப்ரல்-ஜூன்) இத்துறையின் வளர்ச்சி 2 சதவீதமாக இருந்தது. செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த இரண்டாவது காலாண்டில் அது 2.1 சதவீதமாக உயர்ந்தது.

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

Next Story