தினம் ஒரு தகவல் : இந்தோனேசிய பாமாயில்


தினம் ஒரு தகவல் : இந்தோனேசிய பாமாயில்
x
தினத்தந்தி 20 Feb 2020 8:43 AM GMT (Updated: 20 Feb 2020 8:43 AM GMT)

ஊடகவியலாளரான பஹர் தத்தைப் பற்றி சிலருக்கே தெரியும். தன் பணிகளுக்காக ‘கிரீன் ஆஸ்கர்‘ உட்பட பத்துக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ள அவர், தன் அனுபவங்களை ‘கிரீன் வார்ஸ்’ என்ற புத்தகமாகவும் வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சுரங்கம் உள்ளிட்ட பல வி‌‌ஷயங்களிலும் சுற்றுச்சூழல் சட்டங்கள் தலைகீழாக மாற்றப்பட்டு வருகின்றன. வளர்ச்சி என்ற அரசின் மாயவலையில் அதிகம் சிக்கியிருப்பது பழங்குடியின மக்கள்தான். ஜார்க்கண்ட், ஒடிசா போன்ற மாநிலங்கள் அதிக அளவு கனிம வளத்தை கொண்டிருப்பது உண்மைதான். அங்கு சுரங்கம் மூலம் மக்களுக்கு வளர்ச்சி கிடைக்கும் என்று சொன்னால், இந்நேரம் அந்த மாநிலங்கள் எல்லாம் வசதி படைத்த மாநிலங்களாக மாறியிருக்க வேண்டுமே? ஆனால் அதற்கு மாறாக, மனித மேம்பாட்டுத் தர வரிசையில், அந்த மாநிலங்கள் தொடர்ந்து சரிவை சந்தித்து வருவதை எப்படி புரிந்துகொள்வது?

அதேபோல, இந்தோனேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பாமாயில் பயன்பாட்டை நாம் தவிர்க்க வேண்டும். இந்தோனேசிய காடுகளை பற்றி சிந்தித்துப் பார்க்க வேண்டும். உலகிலேயே மூன்றாவது மிகப் பெரிய காடுகளான இந்தோனேசிய காடுகள் 12 கோடி எக்டேர் பரப்பளவு கொண்டவை. சுமார் 90 சதவீதம் ஓரங் ஊட்டான் குரங்குகள் இந்த காடுகளில் வசிக்கின்றன. பாமாயில் தேவைக்காக ஓரங் ஊட்டானின் வாழ்விடங்கள் அழிக்கப்படுகின்றன. ஒரு காலத்தில் இந்தோனேசிய காடுகள் முழுவதும் பரவியிருந்த ஓரங் ஊட்டான்கள், தற்போது 60 ஆயிரமே இருக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 5 ஆயிரம் ஓரங் ஊட்டான் குரங்குகள் அழிந்து வருகின்றன.

இதைத்தடுக்க வழி இருக்கிறது. மழைக்காடுகளில் இருந்தோ அல்லது ஓரங் ஊட்டான் வசிக்கும் காடுகளில் இருந்தோ உற்பத்தி செய்யப்படும் பாமாயிலைப் பயன்படுத்தாமல் விலக்க வேண்டும். இந்தோனேசியக் காடுகளில் இருந்து தயாரிக்கப்படவில்லை என்று சான்று பெற்ற பாமாயில் உற்பத்தி இங்கிலாந்தில் வெற்றி பெற்றிருக்கிறது. அது சரியாக நடைபெறும்போது, ஏன் இந்தியாவிலும் அதை நடைமுறைப் படுத்தக் கூடாது. நாம் பெறும் விழிப்புணர்வு, தொடர் செயல்பாடுகள் மூலம் தான் ஒட்டுமொத்த சுற்றுச்சூழலையும் பாதுகாக்க முடியும். அதுதான் நம் எதிர்காலத்தை உத்தரவாதப்படுத்தும்.

இவ்வாறு அவர் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Next Story