தடுமாறும் சூரியசக்தி திட்டம்


தடுமாறும் சூரியசக்தி திட்டம்
x
தினத்தந்தி 20 Feb 2020 9:08 AM GMT (Updated: 20 Feb 2020 9:08 AM GMT)

புதுப்பிக்கக் கூடிய ஆற்றல் துறையில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. ஆனால் இதை தக்க வைக்க தேவையான, ஒரு வலுவான உற்பத்தி கட்டமைப்பை உருவாக்க மேலும் அதிக முதலீடுகளை செய்ய வேண்டும்.

பசுமை திட்டங்கள்தான் இன்றைய போக்காக உள்ளது. எரி சக்தித் துறையில் அது பசுமை மின்சார உற்பத்தி திட்டங்களாக உள்ளது. 2022-க்குள் 175 ஜிகா வாட் (ஜி.வா) அளவுக்கு புதுப்பிக்கக் கூடிய ஆற்றல் கொண்ட உற்பத்தித் திறனை உருவாக்க வேண்டும் என்ற பெரும் இலக்கை எட்ட, படிப்படியாக சுற்றுச்சூழல்களுக்கு சாதகமான பசுமை மின் உற்பத்திக்கு படிப்படியாக மாற, இந்தியா பெரும் திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.

நிர்ணயிக்கப்பட்ட இலக்கான 175 ஜிகாவாட்டில், பெரும் பகுதியான 100 ஜிகாவாட் சூரிய மின் சக்தி திட்டங்களில் இருந்தும், அதை தொடர்ந்து காற்றாலை திட்டங்களும் (60 ஜிகாவாட்), உயிராற்றல் திட்டங்கள் மூலம் 10 ஜிகாவாட் மின்சாரமும் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

பொருளாதார வளர்ச்சி வேகத்திற்கு ஈடுகொடுக்கும் அளவில், வேகமாக அதிகரித்து வரும் மின்சார தேவைகளை பூர்த்தி செய்ய, பெரிய அளவிலான பாரம்பரிய மின் உற்பத்தி திட்டங்களை, பத்தாண்டுகளுக்கு முன்பு இந்தியா முன்னெடுத்தது. 2010-ல் மன்மோகன்சிங் அரசு, குறைந்த அளவில், 20 ஜிகா வாட் அளவிலான புதுப்பிக்கக் கூடிய ஆற்றல் திட்டங்களை அறிவித்தது. நரேந்திர மோடி அரசு துணிச்சலுடன் இந்த இலக்கை எட்டு மடங்கு அதிகரித்து, உலகின் மிகப் பெரும் புதுப்பிக்கக் கூடிய மின் உற்பத்தி திட்ட விரிவாக்கத்தை, 2014-ல் அறிவித்தது.

பொருளாதார வளர்ச்சி விகிதத்தில் ஏற்பட்டுள்ள சுணக்கத்தினால், இந்த இலக்கை எட்ட, இந்தியா மிக மெதுவாக முன்னேறி வருகிறது. 2030-க்குள் புதைபடிவமல்லாத எரிபொருள்களுக்கு மாற திட்டமிட்டுள்ளது.



சமீபத்தில் வெளியான புளூம்பெர்க் என்.இ.எப்.பின் கிளைமேடோஸ்கோப் என்ற ஆண்டு ஆய்வறிக்கையின் தரவரிசை பட்டியலில், இந்தியா முதல் இடத்தை பெற்றுள்ளதன் மூலம் சூரிய சக்தி மின் உற்பத்தியில் இந்தியாவின் பாராட்டத்தக்க வளர்ச்சி உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வறிக்கை, 104 உலக நாடுகளில், சுத்தமான ஆற்றல் திட்டங்களில் செய்யப்படும் முதலீடுகளின் அடிப்படையில் உருவாக்கப்படுகிறது. இந்த பட்டியலில், இந்தியாவுக்கு அடுத்த இடத்தில் சீலே, பிரேசில், சீனா மற்றும் கென்யா ஆகிய நாடுகள் உள்ளன.

சூரிய சக்தி உற்பத்தியில் திட்டமிடப்பட்டுள்ள 100 ஜிகாவாட் திட்டங்களில் 40 சதவீதம், வீடுகளின் மேற்கூரைகளில் அமைக்கப்படும் சூரிய சக்தி அமைப்புகள் மூலம் நிறைவேற்றப்படும் என்று நிதி ஆயோக்கின் அறிக்கை கூறுகிறது. சூரிய சக்தி திட்டங்களை விரிவுபடுத்த, நஷ்டத்தை தவிர்க்கும் நிதியளிப்பு போன்ற நேரடி நிதி உதவி திட்டங்களையும் இது பரிந்துரைக்கிறது.

“பசுமை ஆற்றல் திட்டங்களை விரிவுபடுத்த பெரும் முயற்சிகளை முன்னெடுத்த ஜெர்மனி யிடம் இருந்து இந்தியா கற்றுக் கொள்ள வேண்டும். 2008-ம் ஆண்டிலேயே, ஜெர்மனியில், ஆட்டோமொபைல் மற்றும் பொறியியல் துறைகளில் பணிபுரிபவர்களின் மொத்த எண்ணிக்கையை விட, சூரிய சக்தி உற்பத்தி துறையில் பணிபுரிபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது” என்று சூரிய சக்தி துறை நிபுணரான ஆர்.என்.பாஸ்கர் கூறுகிறார்.

கோடை காலங்கள் மற்றும் சூரிய ஒளியை ஏராளமாக கொண்டுள்ள இந்தியாவில், வீட்டுக்கூரை சூரிய சக்தி திட்டங்களை பெரிய அளவில் விரிவுபடுத்த சாத்தியமுள்ளது. இந்தியாவில், சூரிய சக்தி தாக்கத்தின் அளவு, தினமும், ஒரு சதுர மீட்டர் பரப்பளவில் 4 முதல் 7 வாட் மணிகளாக உள்ளது. பல பகுதிகளுக்கு, ஆண்டுக்கு 250 முதல் 300 வெயில் மிகுந்த தினங்கள் கிடைக்கின்றன. ஜெர்மனியின் மக்கள் தொகை 8.28 கோடியாக உள்ளது. இந்தியாவின் மக்கள் தொகை அதை விட 18 மடங்கு அதிகமாக, 137 கோடியாக உள்ளது.

“நாடு முழுவதும் வீட்டுக்கூரை சூரிய சக்தி திட்டங்களை விரிவுபடுத்துவதன் மூலம் இந்தியாவில் 8.3 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும்” என்கிறார் பாஸ்கர்.

வீட்டுக் கூரைகள் பலவீனமாக இருந்தாலும், கம்பங்களை நட்டு, அதன் மீது சூரிய சக்தி கலன்களை பொருத்த முடியும் என்பது வீட்டுக் கூரை சூரிய சக்தித் திட்டத்தில் உள்ள சாதகமான அம்சமாகும். இதற்கு நிலமே தேவையில்லை. ஆனால் பெரும் சூரிய சக்தி திட்டங்களுக்கு ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் தேவைப்டுகின்றன.

சமீபத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள, 20 லட்சம் விவசாயிகளுக்கு சூரிய சக்தியில் தனியாக இயங்கும் மோட்டார் பம்புகளை அளிக்கும் திட்டமும், மின்சார வாரியத்துடன் இணைக்கப்பட்டுள்ள 15 லட்சம் இதர விவசாயிகளின் பம்பு செட்டுகளை, சூரிய சக்திக்கு மாற்றும் திட்டமும், சூரிய சக்தி உற்பத்தியை விரிவுபடுத்த உதவும் சரியான திட்டங்களாகும்.

ஆனால் 2020 பட்ஜெட்டில் புதிதாக விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி வரியானது இந்த துறையின் வளர்ச்சியை மட்டுப்படுத்தும். “உள்நாட்டில் ஒரு வலிமையான உற்பத்திக் கட்டமைப்பை ஏற்படுத்தும் வரை, தற்போது உள்ள இறக்குமதி வரிகள், இதே அளவில் தொடர வேண்டும்” என்று தமிழக சூரிய சக்தி உற்பத்தியாளர்கள் சங்க தலைவரும், கே.சி.பி. சோலார் நிறுவனத்தின் தலைமை செயல் தலைவருமான அசோக் குமார் கூறுகிறார்.

கடந்த பத்தாண்டுகளில், சூரிய சக்தி தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மிக வேகமாக அதிகரித்து, மின் உற்பத்தி செலவுகள் யூனிட் ஒன்றுக்கு ரூ.16-ல் இருந்து ரூ.2.50-ஆக குறைந்துள்ளது. அனல்மின் உற்பத்தி செலவு யூனிட்டிற்கு ரூ.3-ஐ விட சற்று அதிகமாக தற்போது உள்ள நிலையில், இதில் சுற்றுச்சூழல் பாதிப்புகளை சேர்க்காமலேயே, இதை விட சூரிய மின் சக்தியின் உற்பத்தி செலவு குறைவாக உள்ளது.

சூரிய சக்தித் துறை புதிதாக வளர்ந்து வரும் துறை. இதில் ஏராளமான ஆராய்ச்சிகள் மற்றும் மேம்படுத்துதல் முயற்சிகள் செய்யப்பட்டு வரும் நிலையில், சூரிய சக்தி தகடுகள் மற்றும் பேட்டரிகளின் விலை பெரிய அளவில் குறைய வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர். சூரிய சக்தி தகடுகளின் விலை அடுத்த மூன்றாண்டுகளில் 30 சதவீதம் வீழ்ச்சியடையும் என்றும், அடுத்த ஐந்தாண்டுகளில் பேட்டரிகளின் விலை 80 சதவீதம் வீழ்ச்சியடையும் என்றும் புளூம்பெர்க் நிறுவனத்தின் ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது.

மேலும், உற்பத்தி அளவில் ஏற்பட உள்ள பெரும் அதிகரிப்பினால், பெரும் அளவுகள் சார்ந்த பொருளியல் சாதகங்கள் உருவாகி, தொழில்நுட்பங்களில் ஏற்படும் முன்னேற்றங்களினால் விலை வீழ்ச்சி மேலும் அதிகரிக்கும்.

இந்தியாவில் சூரிய சக்தி மின் உற்பத்தி அளவு பெருமளவில் அதிகரித்து வந்தாலும், அதற்கு தேவையான உபகரணங்கள் உற்பத்தியில் பெரிய முன்னேற்றம் எதுவுமில்லை.

“தொழில்நுட்பங்கள் அதிவேகமாக மாறி வருவதால், உற்பத்தித் துறையில் பெரும் முதலீடுகளை செய்ய, ஒரு தொழிலதிபர் என்ற முறையில் நான் பயப்படுகிறேன். உற்பத்தி கட்டமைப்பை மொத்தமாக நான் தொடர்ந்து மேம்படுத்த வேண்டியுள்ளது” என்கிறார் கே.சி.பி சோலார் நிறுவனத்தை சேர்ந்த குமார்.

தற்போது உள்ள தொழில் கொள்கைகளை நம்பி, உற்பத்தியாளார்கள் இது போன்ற முதலீடுகளை பெரிய அளவில் செய்வது கடினம். ஏனென்றால், தங்களின் முதலீடுகளுக்கு பாதுகாப்பு அளிக்க அரசு எந்த உத்திரவாதமும் அளிப்பதில்லை. ஒரு வலுவான உற்பத்தித் தளத்தை ஏற்படுத்த சலுகைகள், வரி சலுகைகள் மற்றும் நிலையான கொள்கை, நிலைப்பாடுகள் ஆகியவற்றை தொழில்துறையினர் எதிர்பார்க்கின்றனர்.

தேவைகள் மிக அதிகமாக இருந்தும், உபகரணங்கள் உற்பத்தி ஏன் அதிகரிக்கவில்லை என்பதை அரசு ஆராய்ந்து, ஒரு சரியான தீர்வை முன் வைக்க வேண்டும் என்கிறார்.

உலக அளவில் பி.வி. செல்கள் மற்றும் சூரிய சக்தி உபகரண உற்பத்தி துறைகள், சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளன என்று மற்றொரு நிபுணர் சுட்டிக் காட்டுகிறார். மிகப் பெரும் உற்பத்தி தளத்தையும், அரசாங்க ஆதரவையும் கொண்டுள்ளதால், சீனாவிற்கு மாற்று உருவாவது கடினம்.

இந்தியாவில் உபகரண உற்பத்தி வளராமல் இருக்க கொள்கைகளில் நிலையற்ற தன்மை தான் காரணம் என்கிறார் பாஸ்கர். “நிலையான பொருளாதாரப் பாதை மற்றும் கொள்கைகளில் முரண்பாடற்ற தொடர்ச்சியை பின்பற்றாத அரசை யாரும் நம்ப மாட்டார்கள். ஒரு பெரிய தொழிற்சாலையை நிறுவ இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் தேவைப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் அரசின் கொள்கைகள் அவ்வப்போது மாற்றப்பட்டு, அதில் நிலைத்தன்மையே இல்லாமல் போய் விட்டது. அதன் காரணமாக இந்தியாவில் பெரும் முதலீடுகளை செய்ய யாரும் விரும்பவில்லை” என்கிறார்.

விமர்சனங்களை மின்னஞ்சலில் அனுப்ப: NRD.thanthi@dt.co.in

Next Story