சிறப்புக் கட்டுரைகள்

பறக்கும் மீன்கள் + "||" + Flying fish

பறக்கும் மீன்கள்

பறக்கும் மீன்கள்
மீன் இனத்தில் ஒருசில பறக்கும் திறன் கொண்டவையாக கருதப்படுகிறது. இவற்றை எக்ஸோகோயெடிடாயி என்று விலங்கியல் பிரிவாக ஆய்வாளர்கள் வகைப்படுத்துகிறார்கள்.
பறக்கும் திறன் கொண்ட மீன் இனங்களின் முன் துடுப்புகள் மிக நீண்டதாக உள்ளது. இது பறவைகளின் இறக்கைகள்போல இருப்பதால் இவை எளிதாக காற்றில் படபடத்து தாவுகின்றன. இது பறப்பது போன்ற தோற்றத்தைத் தருகிறது.

இந்த வகை மீன்கள் கடலின் மேல் மட்டத்துக்கு வரும்போது மற்ற மீன்கள் போலவே துள்ளிக்குதித்து மகிழ்கின்றன. அப்படி துள்ளிக்குதிக்கும்போது இதன் நீண்ட துடுப்புகள் சிறகடிப்பது போன்ற தோற்றத்தை தருகிறது.

அதிகபட்சமாக இந்த மீன்கள் 6 மீட்டர் உயரம் வரை துள்ளிக் குதிக்கின்றன. துடுப்புகள் நீளமாக இருப்பதே இவற்றால் இவ்வளவு உயரத்திற்கு தாவுவதற்கு காரணமாக இருக்கிறது. இவை துடுப்பை அசைத்துக் கொள்ளும் வேகம் சுமார் 60 கி.மீ. வேகமாக இருக்கிறது. இதனால் அவை அதிகபட்சம் 160 அடி தூரம் வரை தள்ளிச் சென்று தண்ணீரில் விழுகிறது.

இவற்றின் துடுப்பின் வேகமும், அவை இடம் பெயர்ந்து விழுவதும் பறப்பது போன்று இருப்பதால் இவற்றை பறக்கும் மீன்கள் என்று பொருத்தமான பெயர்சூட்டி அழைக்கிறார்கள்.

பறக்கும் மீன்களுக்கு கடலில் மிதக்கும் தாவர மிதவை நுண்ணுயிரிகள்தான் விருப்பமான உணவாகும். பறக்கும் மீன்களைக் கடல் பறவைகளும், டால்பின்கள் மற்றும் சில வகை மீன் வகைகளும் விரும்பிச் சாப்பிடுகின்றன.

மீன்பிடிப்போர் ‘டார்ச்’ விளக்குகளை இருட்டில் கடலின் மேற்பரப்பில் அடித்து இதைக் கவர்ந்து பிடிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்த மீன்கள் சுவை நிறைந்த உணவாக இருப்பதால் இவற்றை பிடிப்பதில் போட்டியும், இவற்றுக்கு கிராக்கியும் உள்ளது. உலக அளவில் இதற்கு வரவேற்பு உள்ளது. இதனால் இந்த இனம் வேகமாக குறைந்து வருகிறது.

பார்படாஸ் நாட்டின் தேசியச் சின்னத்தில் பறக்கும் மீன் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

-சஜிபிரபு மாறச்சன், சரவணந்தேரி.