தினம் ஒரு தகவல் : நில உச்சவரம்பு சட்டம் வந்தது எப்படி?


தினம் ஒரு தகவல் : நில உச்சவரம்பு சட்டம் வந்தது எப்படி?
x
தினத்தந்தி 21 Feb 2020 8:39 AM GMT (Updated: 21 Feb 2020 8:39 AM GMT)

மனிதர்கள் வருவார்கள் போவார்கள், ஆனால் நிலம் நிலையானது, நீடித்து இருப்பது, அதனால் தான் தொல்காப்பியர், நிலத்தை முதற்பொருளாக வைத்தார். வரலாறு என்பது நிலத்தை கைப்பற்றும் கதையை கூறுவதாகத்தான் பல நூற்றாண்டுகளாக இருந்து வருகிறது.

இந்தியா என்ற நாடு உருவாகாத போதே, பல முடியாட்சி தேசங்களாக இருந்த போது, நிலத்தைப் பிடிப்பதற்கான படையெடுப்புகள் நடந்தேறின. இந்தப் போர்களும் பூசல்களும் இன்னும் முடிந்தபாடில்லை. ஆங்கிலேயர் இந்தியாவின் மீது பாய்ந்ததற்கான அடிப்படை காரணங்களில் ஒன்று, செல்வம் கொழிக்கும் விளைச்சல் நிலங்களும், இயற்கை வளமும்.

வெறும் வணிகம் செய்ய வந்தவர்கள் இந்தியா முழுமையையும் தங்களது கைகளுக்குள் கொண்டு வந்துவிடுவார்கள் என்று அன்றைக்கு இருந்த அரச குடும்பங்கள் கனவுகூட கண்டிருக்க மாட்டார்கள். இங்கிலாந்தின் கிழக்கிந்திய கம்பெனி, இந்தியாவை ஆள அச்சாரம் போட்டது.

ஒரு சாதாரண வணிக நிறுவனம் ஒரு நாட்டையே எப்படி அபகரிக்க முடியும் என்று அப்பாவித்தனமாகக் கேட்டால், அதற்கு வரலாற்றுப் பக்கங்களைத்தான் பதிலாக கொடுக்க முடியும். நவீன இந்தியாவின் வரலாறுகூட நில உரிமைப் போராட்டத்தில் இருந்து தான் தொடங்குகிறது. நிலம் கையகப்படுத்துதல் சட்டம் அல்லது நிலத்தை பறித்து கம்பெனிகளுக்கு கொடுக்கும் சட்டம் ஏதோ நமது ஆட்சியாளர்களின் மூளையில் திடீரென உதித்தது என்று நினைக்க வேண்டாம். வரலாற்றை அதன்பின்னரும் சற்று பின்னோக்கிப் பாருங்கள்...!

பிகார் மாநிலம் அதோ சம்ரான் பகுதியானது, விளைச்சல் கொழிக்கும் மண். வழக்கமான இன்னல்களுக்கு இடையே உழவர்கள் உணவுப் பயிர்களை விளைவித்து, ஓரளவாவது வாழ்ந்து வந்தனர். ஏனெனில், இவர்களது நிலங்கள் ஜமீன்தார் முறை மூலமாக கைவிட்டு போய்விட்டன. உழவர்கள் ஜமீன்தார்களுக்கு வரி கொடுத்த காலம். மேலும் ஓர் இடி இறங்கியது உழவர்கள் மீது.

உழவர்கள் பயிர் செய்த நிலங்களை பிடுங்கிய ஜமீன்தார்கள், சாய அவுரி சாகுபடி செய்ய கம்பெனிகளுக்கு கொடுத்தனர். வெடித்தது போராட்டம். காந்தியடிகள் இந்தியாவில் நடத்திய பெரும் போராட்டத்தில் அதுவும் ஒன்று. இன்றைய இந்தியாவின் உருவாக்கத்தில் முக்கிய இடம் பெற்றதும் அந்த போராட்டமே.

இந்திய விடுதலை கனிந்து கொண்டிருந்த காலம். நிலத்தை பிரித்துக் கொடுத்தால் தான் மக்கள் அமைதியுடனும் வளத்தோடும் வாழ முடியும் என்ற உண்மை தலைவர்களுக்குப் புரிந்தது. அதன் விளைவாகப் பொருளியல் அறிஞரான குமரப்பா தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழு 1939-ம் ஆண்டிலேயே தனது அறிக்கையைக் கொடுத்தது. அது இன்றளவிலும் மிகவும் முற்போக்கான நிலச் சீர்திருத்த அறிக்கை என வர்ணிக்கப்படுகிறது.

அவர் நாடு முழுவதும் சுற்றியலைந்து பல தகவல்களைத் திரட்டி அறிவியல் முறைப்படி ஆராய்ந்து, ‘‘சிறிய நிலவுடைமையே அதிக விளைச்சலைத் தரும். நிலக் குவியல் விளைச்சலை அதிகரிக்காததோடு, மக்களிடையே அமைதியின்மையை ஏற்படுத்தி சமூக கலகங்களுக்கு இட்டுச் செல்லும்’’ என்று விளக்கினார். அதை அப்படியே நேருவும் ஏற்றுக்கொண்டார். பின்னர் ஐந்தாண்டுத் திட்டத்தில் அது எதிரொலித்தது. நில உச்ச வரம்புச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இதனால் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும், குறிப்பாக நிலத்தை உழுபவர்களுக்கும் ஓரளவு நிலம் கிடைத்தது.

Next Story