‘இண்டர்வியூ’ இல்லாமலேயே வேலை!


‘இண்டர்வியூ’ இல்லாமலேயே வேலை!
x
தினத்தந்தி 21 Feb 2020 8:53 AM GMT (Updated: 21 Feb 2020 8:53 AM GMT)

நீங்கள் எந்த வேலைக்கும் விண்ணப்பிக்கவில்லை. எந்த இண்டர்வியூவிலும் கலந்து கொள்ளவில்லை. ஆனால் ஒரு நாள் திடீரென உங்கள் செல்போன் சிணுங்குகிறது. எடுத்தால், “சார், நாளைக்கு வேலையில வந்து ஜாயின் பண்றீங்களா? உங்களை எங்க கம்பெனியில வேலைக்கு தேர்வு செய்திருக்கோம்” என்றால் என்ன நினைப்பீர்கள்?

“இண்டர்வியூவே அட்டன் பண்ணல, காமெடி பண்றீங்களா?” என்று தானே நினைப்பீர்கள்? அல்லது இது ஏதோ நண்பர்கள் செய்யும் காமெடி கலாட்டா என்று தானே சந்தேகப்படுவீர்கள். ஆனால், அப்படி ஒரு காலம் மிக விரைவிலேயே வரலாம் என்பது தான் தொழில்நுட்பம் சொல்லும் சேதி.

ஒரு நபர் திறமைசாலியா? அவரை வேலையில் சேர்த்துக்கொள்ளலாமா என்பதை கண்டுபிடிக்க அவரோடு நேர்முகத் தேர்வோ, எழுத்துத் தேர்வோ நடத்த தேவையில்லை எனும் சூழலை நோக்கி தொழில்நுட்ப உலகம் நகர்ந்து கொண்டிருக்கிறது. அதற்கு முக்கியமான காரணம் டிஜிட்டல் தளம்.

நம்மைப் பற்றி சமூக வலைத்தளங்களில் நாமே பகிர்ந்துகொள்கின்ற விஷயங்களும், பிற நண்பர்கள் பகிர்ந்து கொள்கின்ற விஷயங்களும் நமக்கு கிடைக்க இருக்கின்ற வேலை வாய்ப்புகளில் மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கும் என்பது தான் இங்கே கவனிக்க வேண்டிய விஷயம்.

குறிப்பாக பேஸ்புக், லிங்க்ட் இன், இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களில் நாம் பகிர்கின்ற விஷயங்கள் நம்மைப் பற்றிய ஒரு பிம்பத்தை கட்டமைக்கின்றன. நமது குணாதிசயம் என்ன? ஒவ்வொரு விஷயத்திலும் நாம் காட்டும் ஈடுபாடு என்ன? நமது தொழில்நுட்ப அறிவு என்ன? நமது கம்யூனிகேஷன் நிலை என்ன? நமது இன்டர்பர்சனல் ரிலேஷன்ஷிப் எனப்படும் அடுத்தவரோடான பழகும் திறமை என்ன? நமது பொறுமை என்ன? போன்றவற்றையெல்லாம் புட்டுப் புட்டுவைக்கின்றன.

அந்த கட்டமைப்பை பொறுத்து நமக்கு வேலை தரலாமா? வேண்டாமா? எனும் முடிவை கிட்டத்தட்ட எடுத்து விடுகின்றன நிறுவனங்கள். இன்றைக்கு 62 சதவீதம் நிறுவனங்கள் ஒரு நபரை வேலைக்கு எடுப்பதற்கு முன் அவருடைய சமூக வலைத்தள ஈடுபாட்டை ஆராய்கின்றன. 50 சதவீத நிறுவனங்கள் ஒரு நபரை வேலைக்கு எடுக்கலாமா? வேண்டாமா? எனும் கடைசி முடிவை சமூக வலைத் தளங்களை வைத்தே எடுக்கின்றன.

இண்டர்வியூக்களும் வருங் காலங்களில் இப்போது இருப்பதைப் போல இருக்கப்போவதில்லை. நேருக்கு நேர் அழைத்து நமது கதைகளை கேட்க இப்போது யாருக்கும் நேரம் இல்லை. தொழில்நுட்பத்தின் கைகள் தான் இண்டர்வியூவை நடத்தப்போகின்றன.

ஸ்மார்ட் வாட்சுகள் மூலமாக வீடியோ இண்டர்வியூக்களை நடத்தும் முறை இப்போது தொடங்கியிருக்கிறது. இதன் மூலம் நாம் எங்கே இருந்தாலும் நமது வாட்ச் மூலமாக வேலைக்கான இண்டர்வியூவை சந்திக்கலாம்.

டெலிபோனிக் இண்டர்வியூ நமக்கெல்லாம் தெரியும். இப்போது புதுமையாக டெலிபோனிக் இண்டர்வியூவில் வாய்ஸ் அனாலிசிஸ் டெக்னாலஜி புகுத்தப்படுகிறது. இதன் மூலம் ஒருவர் பேசும் விஷயத்தில் உண்மையாகவே அவர் திறமைசாலியாய் இருக்கிறாரா? பெயரளவுக்கு ஒப்பிக்கிறாரா? அவரது குரலில் இருக்கின்ற பதற்றம் என்ன போன்ற அனைத்தையும் கண்டுபிடித்து அந்த நபரைப் பற்றி புட்டுப் புட்டு வைக்கும். இதன் மூலம், அந்த நபரை தேர்வு செய்யலாமா? வேண்டாமா? என்பதை தொழில்நுட்பமே முடிவு செய்யும்.

வெளிநாடுகளில் இருந்து நடக்கின்ற இண்டர்வியூக்களை 3டி ஹோலோ கிராம் தொழில்நுட்பம் மூலமாக பக்கத்தில் இருந்தே பேசுவது போல அமைக்கும் முறையும் இப்போது பரவலாகி வருகிறது. எதிரே இருக்கின்ற இருக்கையில் அமெரிக்க நபருடைய 3டி மாயத் தோற்றம் உட்கார்ந்து உங்களிடம் இண்டர்வியூ நடத்தும். வீடியோ கால் போலவோ, தொலைபேசி அழைப்பு போலவோ இல்லாமல் மிகவும் இயல்பாகவும், யதார்த்தமாகவும் இண்டர்வியூ நடக்கும். விர்சுவல் ரியாலிட்டி (மெய்நிகர் உண்மை), ஆகுமென்டர் ரியாலிடி போன்றவை இண்டர்வியூக்களின் முகத்தையே மாற்றியிருக்கின்றன.

ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் எனப்படும் செயற்கை நுண்ணறிவு மூலம் இண்டர்வியூ செய்யும் முறை இப்போது மிகப் பிரபலம். சாதாரண வீடியோ கால் போல தோற்றமளிக்கும் இந்த வீடியோ இண்டர்வியூவை நடத்துவது ரோபோக்கள். அவை மென்பொருள் ரோபோக்களாகவும் இருக்கலாம், மனிதரை போன்ற ரோபோவாகவும் இருக்கலாம். அவை உங்களுடைய பதில்களை மட்டுமல்லாமல், உங்களுடைய உடல் மொழி, உங்களுடைய பார்வை, உங்களுடைய பதற்றம் எல்லாவற்றையும் டேட்டா சயின்ஸ் மூலம் அலசி ஆராய்ந்து உங்களுக்கு மதிப்பெண் போடும். மனித இண்டர்வியூவில் நடக்கின்ற ‘ஆள் பார்த்து செயல்படுகின்ற’ பாரபட்சம் இதில் இருக்கவே இருக்காது.

ஸ்னாப்சேட் போன்ற சமூக வலைத்தளங்களில் மூலமாக புது இண்டர்வியூ முறை வந்திருக்கிறது. வேலை தேடுவோர் தங்களுடைய திறமைகளை குட்டி வீடியோக்கள் மூலமாக பதிவேற்ற வேண்டும். அதைப் பார்த்து நிறுவனங்கள் தங்களுக்கு பிடித்த நபரை தேர்வு செய்யும். இதில் ஒரு சுவாரஸ்யமான கண்டிஷன் என்னவெனில் உங்களுடைய வீடியோ பத்து வினாடி அல்லது அதை விட குறைவானதாய் இருக்க வேண்டும் என்பது தான். இதனால் மக்கள் தங்களுடைய திறமைகளை மிகத் தெளிவாக, சுருக்கமாக, வேகமாக பதிவு செய்கிறார்கள். இதுவும் ஒரு வகையான திறமையே.

முக்கியமாக, இனிமேல் உங்களுக்கென இரண்டு வாழ்க்கை இருக்கப்போவதில்லை என்பதே இந்த மாற்றங்கள் சொல்கின்ற முக்கியமான செய்தி. உதாரணமாக, நீங்கள் பேஸ்புக், கூகுள், டுவிட்டர் போன்றவற்றில் போடுகின்ற “லைக்ஸ்” உங்களுடைய ஆளுமைப் பண்பை வெளிக்காட்டும். அதை டேட்டா அனலிட்டிக்ஸ் தொழில்நுட்பம் கண்டுபிடித்து நிறுவனங்களுக்கு சொல்லும். அதற்கென உருவாக்கப்பட்டுள்ள மென்பொருட்கள் உங்களுடைய சமூக வலைத்தள பயன்பாட்டை அலசி ஆராய்ந்து உங்களுக்கு ஒரு மதிப்பெண் கொடுக்கும். இண்டர்வியூவே செல்லாமல் நீங்கள் நிராகரிக்கப்படலாம் அல்லது கவனிக்கப்படலாம் !

நிறுவனங்கள் ஒவ்வொரு வேலைக்கும் ஒவ்வொரு மதிப்பெண் என நிர்ணயம் செய்திருக்கும். உங்களுடைய சமூக வலைத்தள மதிப்பு அதை விட குறைவானதாக இருந்தால் உங்களுக்கு வேலை கிடைக்கும் வாய்ப்பும் குறையும். எனவே தான் உங்களுடைய ஒரு லைக், ஒரு கமென்ட், ஒரு கட்டுரை, ஒரு படம் எல்லாமே இனிமேல் முக்கியமானதாகிறது!

சமூக வலைத்தளங்களை மிகச் சரியாக பயன்படுத்தி உங்களுடைய வேலை வாய்ப்பை அதிகரிக்க முடியும் என்பது தான் ஒரு ஆறுதல் செய்தி. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம். எந்த ஒரு நெகடிவ் விஷயத்தையும் பாசிடிவ்வாக மாற்றுபவன் தான் வெற்றிபெறுவான். எனவே, உங்களுடைய சமூக வலைத்தள பயன்பாட்டை சிறப்பாக? அமைத்துக் கொள்ளுங்கள். அதிலும் குறிப்பாக லிங்க்ட் இன் போன்ற வலைத்தளங்களில் நாம் பதிவு செய்கின்ற விஷயங்கள், நேரடியாகவே நமக்கு பயன்கொடுக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ஒவ்வொரு முறை சமூக வலைத்தளத்தில் நுழையும் போதும் கவனமாய் இருங்கள். தேவையற்ற வெறுப்பு பேச்சுகள், விவாதங்கள், நெகடிவ் சிந்தனைகள் அனைத்தையும் விலக்குங்கள். இது நமக்கான இண்டர்வியூ எனும் மனநிலையில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துங்கள். பயனடைவீர்கள்.

- சேவியர், எழுத்தாளர்

Next Story