வெளியுறவில் இந்தியாவின் புதிய தாரக மந்திரம்


வெளியுறவில் இந்தியாவின் புதிய தாரக மந்திரம்
x
தினத்தந்தி 23 Feb 2020 8:59 AM GMT (Updated: 23 Feb 2020 8:59 AM GMT)

வளர்ச்சி, மனித நேயம் மிகுந்த தூதரக உறவுகளின் அடிப்படையில் இந்தியாவின் புதிய வெளியுறவு கொள்கை முன்னெடுக்கப்படுகிறது.

பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில், இந்தியாவின் வெளியுறவு கொள்கைகளால் ஒரு ராஜாங்க ரீதியான மாற்றம் ஏற்பட்டு, மிக வேகமாக மாறி வரும், பல் துருவ உலகில், இந்தியாவை யாரும் அலட்சியம் செய்ய முடியாத நிலையை அடைந்துள்ளது.

இந்த ஒருங்கிணைந்த மற்றும் சிக்கலான வெளியுறவு கொள்கைகளில், தெற்காசிய புவிசார் அரசியலை கையாள்வதும், முக்கியமாக இந்தியாவிற்கு வடக்கே உள்ள சீனாவையும், மேற்கே உள்ள பாகிஸ்தானை கையாள்வதும் அடங்கும்.

இந்தியாவுடன் பொதுவான வரலாற்று வேர்களை கொண்ட சிறிய நாடுகளான நேபாளம், வங்காள தேசம், இலங்கை ஆகிய நாடுகளுடன் இணைந்து செயல்படுவதும் இதில் அடங்கும். சீனா மற்றும் இந்தியாவுடன் இந்நாடுகள் கொண்டிருக்கும் உறவுகள் பெரும் ஏற்ற இறக்கங்களை கண்டுள்ள நிலையில், இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கும், பொருளாதார நலன்களுக்கும் இவை முக்கியமானவையாக உள்ளன.

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகளில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றங்களை, 40 ஆண்டு காலம் இந்திய வெளியுறவு துறையில் அதிகாரியாக பணியாற்றியவரும், மோடியின் இரண்டாவது அரசில் வெளியுறவுத் துறை மந்திரியாக பணிபுரியும் சுப்பரமணியம் ஜெய்சங்கர் முன்னெடுத்துச் செல்கிறார்.

பல துருவ உலகத்தை இந்தியா எதிர்கொள்ள வேண்டியுள்ளதாக ஜெய்சங்கர் கருதுகிறார். “நாம் இன்று ஒரு முற்றிலும் புதிய உலகத்தில் உள்ளோம். 1945-க்கு பிறகான இரு துருவ உலகையும், 1992-க்கு பிறகான அமெரிக்க உலகையும் நாம் இயல்பானவைகளாக கருதினோம். ஆனால் உலக வரலாற்றை பாருங்கள். இந்த உலகம் வேறு விதமாக, அதிகாரம் பரவலாக்கப்பட்டு, அதிக நாடுகள் பலம் கொண்டவைகளாக இருக்கும்” என்று லீ மான்டே என்ற பிரெஞ்ச் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை

அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை அளிப்பதை மோடி அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும், அதே வேளையில் வளைகுடா நாடுகள், தென் கிழக்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுடனான உறவுகளையும் நல்ல முறையில் பேணி வருகிறது.

பாகிஸ்தான்

பாகிஸ்தானுடனான உறவில், தற்காப்பு முறையை தவிர்த்து, யதார்த நிலைகளை கணக்கில் கொள்ளும் முறையில், எதிர்காலம் பற்றிய நம்பிக்கையுடன், அதே சமயத்தில் பயங்கரவாத நாடு என்பதில் சமரசம் செய்து கொள்ளாத முறையில் முன்னெடுக்கிறது. பாகிஸ்தான் ஒரு முக்கிய பயங்கரவாத உற்பத்தி கூடமாக மாறி, இந்தியாவில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகளை அனுப்பி வருகிறது. பாகிஸ்தான் இந்த நிலைமையை மறுக்கவில்லை என்று ஜெய்சங்கர், பாகிஸ்தானின் வெளியுறவுத் துறை அமைச்சர் இந்தியாவுடனான தற்போதைய உறவு சுழியத்திற்கு அருகே உள்ளதாக கூறியதற்கு எதிர்வினையாக கூறினார்.

இந்தியாவின் அண்டை நாடுகளுடனான வர்த்தக உறவுகள் மேம்படுவதன் மூலம் அந்நாடுகள் வளர்ந்து, அது இந்தியா-பாகிஸ்தானிடையே உள்ள பிரச்சினைகளை தீர்க்க உதவும் என்ற நம்பிக்கையில், ஜெய்சங்கர் ஒரு வெளிப்படையான முன்னெடுப்பு நிலைபாட்டை எடுத்துள்ளார்.

சீனா

சீனாவுடனான உறவுகள், பரஸ்பர சந்தேகம் மற்றும் மோதல் போக்குகளில் இருந்து, ‘போட்டி மற்றும் ஒத்துழைப்பு’ என்ற போக்கிற்கு மாறி வருகிறது. சீன அதிபர் ஜின்பிங் உடனான உறவுகளை மோடி திறமையாக கையாண்டதினால், சீனாவுடன் போர் உருவாக வாய்ப்பில்லை’ என்று முன்னாள் தூதரக அதிகாரிகள் கருதுகின்றனர்.

உலகின் மிகப் பெரும் பொருளாதாரங்களான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையேயான வர்த்தகப் போர் அதிகரித்து வருவதால், இந்தியாவுக்கு புதிய சந்தர்ப்பங்கள் கிடைக்கலாம் என்று பார்வையாளர்கள் கருதுகின்றனர். இந்திய பொருளாதாரத்தை 5 லட்சம் கோடியாக உயர்த்த மோடி அரசு நிர்ணயித்துள்ள இலக்கை அடைய இது உதவும்.

நேபாளம்

இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே அமைந்துள்ள நேபாளம் ஒரு அமைதிப் பகுதியாக கருதப்படுகிறது. இந்தியாவின் உள்நோக்கங்கள் பற்றிய சந்தேகம் நேபாளத்திற்கு உள்ள நிலையில், காஷ்மீர் பிரச்சினையில் நேபாளத்தின் ஆதரவை பெறவும், நேபாளத்தில் உள்ள இந்திய வம்சாவளியினருக்கு சாதகமாக நேபாள அரசியல் சாசனத்தை திருத்தி அமைக்கும் முயற்சிகளினாலும் அது முக்கியத்துவம் வாய்ந்த நாடாக உள்ளது.

2015-ல் நேபாளம் மீது இந்தியா விதித்த பொருளாதார தடையினால், இந்தியா மீது பெரும் அதிருப்தி உருவானது. இந்த தடையுடன் தொடர்புடையவர் என்று கருதப்படும் ஜெய் சங்கர் மீது நேபாள ஊடகங்கள் அவநம்பிக்கை கொண்டுள்ளன. ஒரு ‘மனிதாபிமானமற்ற பொருளாதார நெருக்கடி நிலை’ என்று அழைக்கப்படும் அந்த பொருளாதார தடையினால் கடுமையான உணவு பற்றாக்குறை மற்றும் விலைவாசி உயர்வுகள் ஏற்பட்டதாக ஓ.ஆர்.எப். அமைப்பின் தெற்காசிய வாராந்திர அறிக்கை குழுவின் உறுப்பினரான சோகினி கூறுகிறார்.

நேபாளத்தின் அரசியல் நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சி என்பது இந்தியாவின் பாதுகாப்புடன் தொடர்புடைய விஷயம் என்று 2016-ல் மோடி அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

வங்காளதேசம்

இந்தியாவுக்கும், வங்காளதேசத்திற்கும் இடையே பல பிரச்சினைகள் உள்ளன; ஓட்டைகள் மிகுந்த எல்லை களின் வழியாக அசாம் மற்றும் இதர வடகிழக்கு மாநிலங்களுக்குள் மக்கள் நுழைவதும், டீஸ்டா நதி நீரை பகிர்ந்து கொள்வதிலும், மியான்மரை சேர்ந்த ரோஹிங்கியா அகதிகள் பிரச்சினையும் இவற்றில் முக்கியமானது.

நீண்ட காலமாக தொடரும் பிரச்சினைகளை தீர்க்க முன்னுரிமை அளிக்கப்படும் என்று மோடி அரசு உறுதியளித்துள்ளது. டீஸ்டா நதி நீர் ஒப்பந்தம், 2011 செப்டம்பரில், அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் வங்காளதேசம் சென்ற போது கையெழுத்தாக இருந்தது. ஆனால் மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி எழுப்பிய ஆட்சேபனைகளினால், இது கடைசி நிமிடத்தில் தள்ளிவைக்கப்பட்டது.

நீர் வளங்கள் என்பது வங்காள தேசத்துக்கு ‘மிக முக்கியமான விஷயம்’ என்பதை ஜெய்சங்கர் ஏற்றுக்கொண்டு, இரு நாடுகளுக்கும் பொதுவான 54 நதிகளின் விஷயத்தில், பரஸ்பரம் இரு தரப்பினரும் ஏற்கத் தக்க ஒரு தீர்வை கண்டடைவதில் முன்னேற்றம் காண்போம் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

இலங்கை

சமீப வருடங்களில் சீனாவுடன் இலங்கை கொண்டுள்ள நெருக்கத்தின் காரணமாக, இலங்கையை முக்கியத்துவம் வாய்ந்த நாடாக இந்தியா கருதுகிறது. ‘அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை’ என்ற கொள்கைக்கு விசுவாசமான முறையில், இலங்கை அதிபராக கோத்தபய ராஜபக்சே தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் அவருடன் தொலைபேசியில் பேசியது மட்டுமல்லாமல், அவர் வெளிநாட்டுப் பயணம் செல்லும் போது இந்தியாவுக்கு முதலில் வருமாறு அழைப்பு விடுத்தார்.

அடுத்த சில மணி நேரங்களில், இந்தியாவின் வெளியுறவுத் துறை மந்திரி, முன்னறிவிப்பின்றி இலங்கைக்கு விரைந்து சென்று, இலங்கையின் புதிய அதிபரை சந்தித்தார். இந்திய வெளியுறவு மந்திரி தான் ராஜபக்சேவை சந்தித்த முதல் வெளிநாட்டுப் பிரமுகர் என்பதால், அவர் மோடியிடம் இருந்து ஒரு தனிப்பட்ட செய்தியை ராஜபக்சேவிடம் எடுத்துச் சென்றார் என்பது தெளிவாகிறது.

பதவி ஏற்ற பின் ராஜபக்சே ஆற்றிய முதல் உரையில், வெளியுறவு கொள்கைகளில் ‘சம தூர’ கொள்கையை பின்பற்றி, அதன் மூலம், வல்லரசு நாடுகளிடையே நடக்கும் அதிகார விளையாட்டுகளில், இலங்கை நடுநிலைமை வகிக்கும் என்று கூறினார். “அனைத்து நாடுகளுடனும் நட்பு பாராட்ட விரும்புகிறோம். வல்லரசுகளின் புவிசார் அதிகார மோதல்களில் சிக்க விரும்பவில்லை” என்று அவர் அறிவித்தார். இது இந்தியாவின் நலன்களுக்கு உகந்ததாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

உள்கட்டுமான திட்டங்களுக்கான ஒப்பந்தங்களை பெற்றதில் இருந்தும், ஹம்பன்டோட்டா துறைமுகத்தை 99 வருட குத்தகைக்கு எடுத்த விதமும், இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டியது. இறுதியாக, இலங்கைக்கு சீன நீர்மூழ்கிக் கப்பல்களின் வருகை, மோடி அரசை செயலில் இறங்க உந்தியது.

ஈஸ்டர் ஞாயிறு குண்டு வெடிப்புகளுக்கு முன்னரே, இலங்கையில் ஒரு இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதல் நடக்கும் சாத்தியங்கள் பற்றி இந்தியா இலங்கையை எச்சரித்தது. இது இந்தியா இலங்கை உறவை பலப்படுத்த ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி, பாகிஸ்தானின் ஆதிக்கத்தை எதிர் கொள்ள உதவியது.

விமர்சனங்களை மின்னஞ்சலில் அனுப்ப:

NRD.thanthi@dt.co.in



Next Story