ஆதிச்சநல்லூர் அதிசயங்கள்


ஆதிச்சநல்லூர் அதிசயங்கள்
x
தினத்தந்தி 23 Feb 2020 9:10 AM GMT (Updated: 23 Feb 2020 9:10 AM GMT)

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே தாமிரபரணி ஆற்றின் வலதுகரையில் அமைந்துள்ளது ஆதிச்சநல்லூர்.

“கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன்தோன்றிய மூத்தகுடி” என்ற பெருமை தமிழினத்துக்கு உண்டு.

ஆதிச்சநல்லூர் அகழாய்வு தமிழினத்தின் தொன்மையை பறைசாற்றும் சான்றாக அமைந்து உள்ளது.

நெல்லையில் இருந்து திருச்செந்தூர் செல்லும் பாதையில் சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே தாமிரபரணி ஆற்றின் வலதுகரையில் அமைந்துள்ளது ஆதிச்சநல்லூர். “ஆதி தச்சநல்லூர்” என்ற பெயர் மருவி காலப்போக்கில் ஆதிச்சநல்லூர் என மாறியதாக கருதப்படுகிறது.

மனித குலத்தின் நாகரிகத்தை கண்டறிய உலக அளவில் அகழ்வாராய்ச்சி நடத்தப்பட்ட இடங்களில் ஆதிச்சநல்லூர் முக்கிய இடத்தை பெறுகிறது. முதன் முதலாக இங்கு 1876-ம் ஆண்டில் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த ஜாகோர் என்ற தொல்லியல் அறிஞர் அகழ்வாராய்ச்சி மேற்கொண்டார். அதன்பிறகு பலமுறை அகழ்வாராய்ச்சிகள் நடத்தப்பட்டு உள்ளன.

இந்த அகழ்வாராய்ச்சிகளின் போது முதுமக்கள் தாழிகள், மனித மண்டை ஓடுகள், எலும்புகள், கத்தி, அரிவாள் போன்ற இரும்பு பொருட்கள் போன்றவை கிடைத்து உள்ளன.

இந்த நிலையில் அங்கு மீண்டும் அகழாய்வு நடத்தப்படுகிறது. இதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன.

ஆதிச்சநல்லூரில் கடந்த காலங்களில் நடைபெற்ற அகழாய்வுகள் பற்றி விளக்குகிறார் முத்தாலங்குறிச்சி காமராசு...

ஆதிச்சநல்லூர் என்ற பெயரை கேட்டாலே இன்று இந்தியா மட்டுமல்ல, உலகமே தனது செவியை தீட்டி, என்ன தகவல் வரப்போகிறது என ஆவலோடு எதிர்நோக்குகிறது. ஆதிச்சநல்லூர் மட்டுமல்லாமல் தூத்துக்குடி மாவட்டம் சிவகளை மற்றும் தாமிரபரணி கரையில் உள்ள 37 கிராமங்கள், கீழடி உள்பட பல இடங்களில் ஆய்வு செய்ய தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது. இதற்காக பணியாளர்கள் தேர்வு செய்து, இடம் தேர்வு செய்து ஆரம்ப கட்ட பணியை முடித்து, அகழாய்வுக்கு தயாராகி விட்டனர். இந்த அகழாய்வு நடந்து முடிவை அறிவித்து விட்டால் உலக நாகரிகத்தின் தொட்டில் என அழைக்கப் படும் ஆதிச்சநல்லூரின் பெருமை உலக அரங்கில் பேசப்படும்.

ஜெர்மனியின் தொல்லியல் அறிஞர் ஜகோர் 1876-ல் இந்தியாவில் தனது முதல் ஆய்வை ஆதிச்சநல்லூரில் நடத்தினார். அந்த ஆய்வின் போது கிடைத்த பொருட்களை தங்கள் நாட்டில் உள்ள பெர்லின் நகர் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைத்தார். ஆனால் இதைப்பற்றி பெரிய அளவில் விளக்கமான நூல் எதுவும் இல்லை. பிற ஆராய்ச்சியாளர்களால் சரியான விளக்கமும் அளிக்கப்படவில்லை.

1889-ம் ஆண்டு முதல் 1905-ம் ஆண்டு வரையிலும் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த அலெக்சாண்டர் ரியா என்பவர் ஆதிச்சநல்லூரில் அகழ்வாராய்ச்சி செய்தார். அப்போது அவர் இங்கு முதுமக்கள் தாழிகளுடன் தங்கம், வெண்கலம், இரும்பு போன்றவற்றால் செய்யப்பட்ட ஆபரணங்கள், ஆயுதங்கள் போன்ற 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரியவகை பொருட்களை சேகரித்தார். அவை கி.மு. 1800-ம் ஆண்டு முதல் கி.மு. 1600-ம் ஆண்டு வரையிலும் தமிழர்கள் பயன்படுத்திய பொருட்கள் என்பது தெரியவந்தது.

அந்த சான்றுகள், தமிழர்கள் சுமார் 3800 ஆண்டுகளுக்கு முன்னரே நாகரிகத்தில் சிறந்து விளங்கினர் என்பதை உலகுக்கு பறைசாற்றியது. இது சம்பந்தப்பட்ட பொருள்கள் எல்லாம் சென்னையில் உள்ள அருங்காட்சியகத்தில் உள்ளது.

இங்கு கிடைத்த பொருட்களை அலெக்சாண்டர் ரியா பட்டியலிட்டுள்ளார். அதை மூல நூலாக வைத்துத்தான் பல நூல்கள் வெளிவந்தன. அதில் “சாத்தான்குளம் ராகவன் எழுதிய ஆதிச்சநல்லூரும், பொருநை வெளி நாகரிகமும்” என்ற நூல் முதன்மையானது. ஆனாலும் ஆதிச்சநல்லூரை பற்றி முழுமையான ஆராய்ச்சியும் அறிக்கையும் வெளிவரவில்லை.

1920-ல் சிந்து சமவெளியை ஆய்வு செய்த வங்க தேசத்து அறிஞர் பானர்ஜி, சிந்து சமவெளி நாகரிகத்துக்கு முந்தைய நாகரிகம் தாமிரபரணி கரை நாகரிகம் என ஆதிச்சநல்லூர் நாகரிகத்தின் பெருமை பற்றி ஆங்கில நூல் ஒன்றில் கட்டுரை எழுதினார். அது ஆதிச்சநல்லூருக்கு பெருமை சேர்க்கும் வகையில் அமைந்தது.

கடந்த 2004-ம் ஆண்டில் தொல்லியல் துறை ஆராய்ச்சியாளர் தியாக சத்தியமூர்த்தி தலைமையிலான குழுவினர் ஆதிச்சநல்லூரில் 114 ஏக்கர் பரப்பளவில் அகழ்வாராய்ச்சி செய்தனர். அப்போது அங்கு கண்டறியப்பட்ட அரியவகை பொருட்களை சேகரித்து சென்னை அருங்காட்சியகத்தில் வைத்துள்ளனர். அதன் ஆய்வறிக்கை இதுவரை வெளியிடப்படவில்லை.

2004-ல் நடந்த அகழாய்வு பற்றிய அறிக்கை முழுமையாக வராதது தமிழ் ஆர்வலர்களை யோசிக்க வைத்தது.

தமிழ்நாடு தொல்லியல் முதன்மைச் செயலாளர் மற்றும் ஆணையர் த.உதயச்சந்திரன் கடந்த 18.9.2019 அன்று கீழடி அகழாய்வு அறிக்கையை சென்னையில் வெளியிட்டார். அகழாய்வு அறிக்கை மிக விரைவாக வந்திருக்கிறது என்றால் அது கீழடிக்குதான்.

“கீழடி வைகை நதிக்கரையில் சங்க கால நகர நாகரிகம்” என தலைப்பிட்டு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நூலை உருவாக்கி அதை அனைவருக்கும் கிடைக்கும் வண்ணம் செய்து உள்ளனர். மேலும் 24 மொழிகளில் மொழி பெயர்த்து, உலக அரங்கில் தமிழனின் தொன்மையை அரங்கேற செய்து உள்ளனர்.

இதுபோலத்தான் ஆதிச்சநல்லூர், சிவகளை மற்றும் தாமிரபரணி கரை அகழாய்வு முடிந்தவுடன் விரைவாக அறிக்கையும் வெளிவரும் என ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். கீழடி ஆய்வு, விரைவாக அறிக்கையை தந்த ஆய்வு மட்டுமல்ல, ஆய்வு நடக்கும்போது மக்களும் மாணவர்களும் உள்ளே சென்று படிக்கலாம் என்ற உண்மையையும் உணர்த்திய அருமையான ஆய்வாக அமைந்தது.



118 ஆண்டுகளுக்கு முன் ஆதிச்சநல்லூரில் விரிவான முறையில் ஆய்வை மேற்கொண்ட ஆங்கிலேயரான அலெக்சாண்டர் ரியா, ஆதிச்சநல்லூர் போலவே தாமிரபரணி ஆற்றங்கரை நெடுகிலும் பழங்கால தமிழர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் 37 இடங்களில் புதையுண்டு கிடப்பதாக கண்டுபிடித்தார்.

அந்த இடங்கள் ராஜவல்லி பரம்பு, பாலாமடை, மணப்படை வீடு, கீழநத்தம், பாளையங்கோட்டை, கிருஷ்ணாபுரம் பரம்பு, வடக்கு வல்லநாடு, வல்லநாடு, அகரம், முறப்பநாடு, வசவப்பபுரம், அனவரதநல்லூர், விட்டிலாபுரம், கொங்கராயகுறிச்சி, கருங்குளம், ஆதிச்சநல்லூர், ஸ்ரீவைகுண்டம், திருப்புளியங்குடி, புதுக்குடி, வெள்ளூர், கால்வாய், மளவராயநத்தம், ஆழ்வார்திருநகரி, அழகிய மணவாளபுரம்-செம்பூர், திருக்கோளூர், அப்பன் கோவில், தென்திருப்பேரை, புறையூர், அங்கமங்கலம், குரும்பூர், நாலுமாவடி, நல்லூர், சுகந்தலை, கொற்கை, மாறமங்கலம், காயல்பட்டினம், வீரபாண்டியபட்டணம் ஆகியவையாகும்.

இந்த இடங்களில் எல்லாம், ஆதிகால தமிழர்கள் சிறிய கிராமங்கள் அமைத்து, வாழ்ந்து இருக்கலாம் என்றும், ஆதிச்சநல்லூர் மற்றும் கொற்கை ஆகிய இடங்களில் மட்டுமே மிகப் பெரிய வணிகப் பயன்பாட்டுடன் மக்கள் அதிக அளவில் பெரிய நகர் போல அமைத்து வாழ்ந்து இருக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிடுகிறார்.

கடந்த 118 ஆண்டுகளுக்கு முன்பு இவர் குறிப்பிட்ட இந்த 37 இடங்களில் பெரிய அளவில் ஆய்வுகள் ஏதும் மேற்கொள்ளப்படவில்லை. தற்போது இங்கேயும் சில இடங்களை தேர்வு செய்து ஆய்வு நடந்த உள்ளது தமிழக அரசு.

தியாக சத்தியமூர்த்தி தலைமையில் 2004-ல் ஆதிச்சநல்லூரில் 6 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. இங்கு கிடைத்த முதுமக்கள் தாழிகள் வட்டமான வடிவத்தில் கழுத்து சற்று நீளமாகவே காணப்படுகின்றன. வயதானவர்களை முதுமக்கள் தாழியில் நேராக உட்கார வைத்தபடி புதைத்து இருக்கிறார்கள். சிறு குழந்தைகளை படுக்க வைத்த நிலையில் புதைத்து உள்ளனர். சில தாழிகளில் 3 முதல் 5 மாதங்கள் கொண்ட சிசுக்களும் கிடைத்து உள்ளன. சில தாழிகளில் கத்தியும் அரிவாளும் மற்றும் வெண்கலம், செம்பு போன்ற உலோகங்களும் இருந்தன.

இங்கு கிடைத்த முதுமக்கள் தாழிகளில் 2 சதவீதம் சிசுக்களும், 3 சதவீதம் குழந்தைகளும், 6 சதவீதம் இளம் சிறார்களும், 7 சதவீதம் இளைஞர்களும், 20 சதவீதம் 40 வயதுக்கு உட்பட்டவர்களும், 25 சதவீதம் 40 வயதுக்கு மேற்பட்டவர்களும், 37 சதவீதம் சுமார் 60 வயதை கடந்தவர்களும் அடக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

தொற்று நோய், பால்வினை நோய் போன்ற நோய்களால் நடுத்தர வயதினரும், 30 சதவீதம் பேர் பசி பட்டினியாலும் இறந்தது தெரியவந்து உள்ளது. சில முதுமக்கள் தாழிகளில் எலும்பு உடைந்த நிலையில் காணப்பட்டதால், அந்த நபர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு இருக்கலாம் என்றும், அங்கு பயங்கரமான போர் நிகழ்ந்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. முதுமக்கள் தாழிக்குள் உணவு தானியங்களை வைத்து இருப்பதும், சில தாழிகளில் சமைத்த உணவை வைத்திருப்பதும் தெரியவந்து உள்ளது.

சில முதுமக்கள் தாழிகளில் பட்டுத் துணிகள் இருந்துள்ளன. ஆண், பெண் என இருவரும் ஒரே தாழியில் அடக்கம் செய்யப்பட்ட நிலையில் இரண்டு தாழிகள் கிடைத்து இருக்கின்றன.

மொத்தத்தில் ஆதிச்சநல்லூர் ஒரு காலத்தில் ஆசியாவிலேயே பெரிய இடுகாடாக விளங்கி இருப்பது அகழாய்வின் மூலம் தெரியவந்து உள்ளது. ஆதிச்சநல்லூர் அதிசயங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன.

ஆதிச்சநல்லூரின் காலம் கி.மு.6000 முதல் கி.மு.3600 ஆண்டு வரை பழமையானதாக இருக்கக்கூடும் என ஆய்வாளர்கள் கருதி வருகிறார்கள்.

ஆதிச்சநல்லூர் அகழாய்வு பற்றிய விரிவான ஆய்வறிக்கை வெளியானால்தான், அங்கு வாழ்ந்த மக்கள், அவர்களுடைய வாழ்க்கை முறை, நாகரிகம் பற்றிய முழுமையான விவரம் தெரியவரும்.

சிவகளையில் பாறைக்கிண்ணங்கள்

தமிழக அரசின் தொல்லியல் துறையால் இந்த ஆண்டில் (2019-2020) தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளை, ஈரோடு மாவட்டம் கொடுமணல், சிவகங்கை மாவட்டம் கீழடி ஆகிய தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் அகழாய்வு மேற்கொள்ள மத்திய அரசின் தொல்லியல் ஆலோசனை குழுவிடம் அனுமதி கோரப்பட்டது. அதை ஏற்று அந்த இடங்களில் அகழாய்வு மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கி இருக்கிறது.

தமிழக அரசு, ஆண்டுதோறும் பல்வேறு இடங்களில் தொல்லியல் கள ஆய்வு மற்றும் அகழாய்வுகள் மேற்கொள்ள ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உள்ளது. இந்த ஆண்டு ஆதிச்சநல்லூர், சிவகளை, கொடுமணல் மற்றும் கீழடி ஆகிய இடங்களில் முறையான தொல்லியல் கள ஆய்வுகள் மற்றும் அகழாய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

ஆதிச்சநல்லூர் போன்று சிவகளை பரம்பு பகுதியிலும் இரும்பு காலத்தைச் சேர்ந்த பண்பாட்டை வெளிக் கொணர அகழாய்வு செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. இதுவரை தொல்லியல் களம் என்று பேசப்படாத இந்த களத்தினை ஸ்ரீவைகுண்டம் கே.ஜி.எஸ் மேல்நிலைப்பள்ளியின் அறிவியல் துறை ஆசிரியர் சிவகளை மாணிக்கம், தனது மாணவர்களோடு கண்டுபிடித்து தொல்லியல் துறைக்கு அடையாளம் காட்டி இருக்கிறார்.

சிவகளை பரம்பில் இருந்து வடக்கே 5 கிலோ மீட்டர் தொலைவில் மீனாட்சிப்பட்டி கிராமத்தின் அருகே காட்டுப்பகுதியில் உள்ள பாறையில் பழையகற்கால மனிதர்கள் உருவாக்கிய பாறை கிண்ணங்கள் என்று அழைக்கப்படும் கற்குழிகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன.

இந்த பாறைக்கிண்ணங்கள் கி.மு.10000 ஆண்டுகள் முற்பட்டவையாக இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். சிவகளையில் உள்ள தரிசுகுளம், தம்ளர் முக்கு ஆகிய பகுதிகளை சிவகளை மாணிக்கம் ஆராய்ச்சி செய்து இடைகற்காலத்தில் மனிதர்கள் பயன்படுத்திய 102 கற்கருவிகளை கண்டுபிடித்தார். தம்ளர் முக்கு, தரிசு குளம், கல்மேட்டு பரம்பு, வெள்ளத்திரடு போன்ற பகுதியில் குடியேற்றங்கள் இருந்ததும் ஆய்வின் மூலம் தெரியவந்து இருக்கிறது.

சிவகளையில் பல்வேறு வகையான கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. சிவகளை தொல்லியல் களத்தில் இரும்பு தாதுக்கள் அதிகம் காணப்படுகின்றன. அங்கு கிடைத்த பழங்கால கருப்பு-சிவப்பு நிற மண்பாண்டங்கள் ஆதிச்சநல்லூர் முதுமக்கள் தாழிகளை நினைவுபடுத்துகின்றன. எனவே அங்கு மேலும் அகழாய்வு செய்யும் போது பழங்கால தமிழர்களை பற்றி பல அதிசய தகவல்கள் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாதுகாப்பு வேலி

ஆதிச்சநல்லூருக்கு நேரில் சென்று ஆய்வு செய்த தமிழக தொல்லியல் துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் ஆதிச்சநல்லூர், கீழடி பெருமைகளை பேச தவறுவது இல்லை. அவரது முயற்சியால் சென்னையில் உள்ள அருங்காட்சியகத்தில் ஆதிச்சநல்லூர் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன. நெல்லை அருங்காட்சியகத்தில் ஆதிச்சநல்லூர் பொருட்களை வைக்க புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. ஆதிச்சநல்லூரை சுற்றி பாதுகாப்பு வேலி கட்டப்பட்டு வருகிறது.

“கீழடி ஆய்வறிக்கையை கண்டு உலகம் வியந்து போற்றுகிறது. ஆதிச்சநல்லூர் ஆய்வறிக்கை வெளிவந்தால் மேலும் பல அபூர்வ தகவல் கிடைக்கும்” என தமிழ்நாடு தொல்லியல் முதன்மைச் செயலாளர் மற்றும் ஆணையர் த.உதயசந்திரன் கூறி உள்ளார்.

Next Story