பூ பூக்கும் ஓசை.. அதை கேட்கத்தான் ஆசை...


பூ பூக்கும் ஓசை.. அதை கேட்கத்தான் ஆசை...
x
தினத்தந்தி 23 Feb 2020 10:13 AM GMT (Updated: 23 Feb 2020 10:13 AM GMT)

கற்பது மதிப்புமிகுந்த கல்வியானாலும் அதன் மூலம் பெறுவது உயர்ந்த செல்வமானாலும், உணவின்றி உலகமில்லை. உணவின்றி மனித வாழ்க்கை இல்லை.

ற்பது மதிப்புமிகுந்த கல்வியானாலும் அதன் மூலம் பெறுவது உயர்ந்த செல்வமானாலும், உணவின்றி உலகமில்லை. உணவின்றி மனித வாழ்க்கை இல்லை. உணவுக்கு தேவை விவசாயம். பள்ளிக் காலத்திலேயே அந்த விவசாயத்தை கற்றுக்கொண்டால் எதிர்காலத்திலும் உணவுக்காக யாரையும் எதிர்பார்த்திருக்கவேண்டியதில்லை. அதிலும் வெளியே இருந்து நாம் வாங்கும் உணவுப்பொருட்கள் பெரும்பாலும் ரசாயன உரங்களும், பூச்சிக்கொல்லி மருந்துகளும் பயன்படுத்தி விளைவிக்கப்பட்டதாக இருக்கிறது. அது ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தலாகிவிடுகிறது. ஆரோக்கியத்தில் அத்தகைய ஆபத்து உருவாகாமல் தடுக்கவேண்டுமானால் பாரம்பரிய இயற்கை விவசாயம் செய்யவேண்டும்.

அதை பள்ளியிலே நடைமுறைப்படுத்தி, மாணவ - மாணவிகளை இப்போதே இயற்கை விவசாயிகளாக உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது, செயின்ட் ஜான்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி. அங்கு இயற்கை விவசாயத்தில் மாணவ - மாணவிகள் சாதனை படைக் கிறார்கள். எப்படி என்றால், ஆண்டுக்கு 2 டன் வரை காய்கறிகளை சாகுபடி செய்கிறார்கள். அவர்கள் சுரைக்காயில் மட்டும் 60 வகையினை பயிரிடுகிறார்கள்.

கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் பிரஸ் காலனியில் அமைந்திருக்கும் இந்த பள்ளியில் முதலில் ‘பேக்கிங்’ முறையில் செடிகளை வளர்க்கத் தொடங்கியிருக்கிறார்கள். 210 பேக்குகளில் மாடித்தோட்டத்தை உருவாக்கியிருக் கிறார்கள். அதை பராமரிப்பதில் மாணவ-மாணவிகள் அதிக ஆர்வம் செலுத்தியதால் பள்ளி வளாகத்தில் உள்ள நிலத்திலும் விவசாயத்தை ஆரம்பித்திருக்கிறார்கள். அதனை பராமரிக்கும் முழு பொறுப்பையும் மாணவ-மாணவிகளிடமே ஒப்படைத்திருக்கிறார்கள். அவர்கள் போட்டிபோட்டு விவசாயம்செய்து, அதிக அளவில் காய்கறிகளை அறுவடை செய்திருக்கிறார்கள்.

பின்பு அவர்களுக்கு மாடித்தோட்டம் அமைப்பது பற்றியும், வீட்டிலே தோட்டத்தை உருவாக்குவது பற்றியும் கற்றுக்கொடுத்திருக்கிறார்கள். அதோடு அவர்களது பிறந்த நாட்களில் ஆளுக்கொரு ‘குரோபேக்’ கொடுத்திருக்கிறார்கள். அந்த பேக்கில் ஏதாவது ஒரு காய்கறி செடி முளைத்து வளர்ந்திருக்கும். அதனை அவர்கள் வீடுகளில் கொண்டு வளர்த்து, காய்கறிகளை பறித்து பயன்படுத்திக்கொள்ளலாம். அதனால் அவர்களது பெற்றோர்கள் வீட்டிலும் காய்கறி செடிகளை வளர்க்க களம் இறங்கிவிட்டார்கள்.

இது முற்றிலும் இயற்கை சார்ந்த விவசாயமாக நடக்கிறது. அதாவது சுற்றுச்சூழலை பாதுகாக்கும், நஞ்சில்லா ஆர்கானிக் விவசாயத்தை நடத்துகிறார்கள். அந்த சாகுபடியில் இருந்து விதைகளை எடுத்தும் சேகரிக்கிறார்கள்.

நமது முன்னோர்கள் பயன்படுத்திய விதைகளை பாதுகாப்பதும் இவர்களின் லட்சியமாக இருப்பதால், பள்ளியில் விதை சேமிப்பு கிடங்கையும் உருவாக்கிவைத்திருக்கிறார்கள். அதில் மாணவர்களும் விதைகளை கொண்டுவந்து சேமிக்கின்றனர்.

தொடக்கத்தில் இவர்களுக்கு நாட்டு விதைகள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டிருக்கிறது. ஒரே ஒரு ரக சுரைக்காயில் ஆரம்பித்தவர்கள், இப்போது 60 வகையான சுரைக்காய்களை பள்ளியிலே சாகுபடி செய்து அறுவடை செய்கிறார்கள். அதன் விதைகளையும் சேமிக்கிறார்கள். வெண்டையில் 14 வகைகள், தக் காளியில் 10 வகைகள், மிளகாயில் 10 வகைகளையும் சாகுபடி செய் கிறார்கள்.

மிளகாயில் பச்சை மட்டுமல்ல, கறுப்பு, வெள்ளை, மஞ்சள் போன்ற நிறங்களிலும் இங்கு காய்த்து குலுங்குகின்றன. நெய் மிளகாய், சம்பா மிளகாய், குண்டு மிளகாய், நீள மிளகாய், தாவனகிரி மிளகாய், சீனி மிளகாய், மைசூர் மிளகாய், கருப்பு முத்து மிளகாய் போன்ற பலவகைகள் இதில் உள்ளன.

கத்தரிக்காயில் காரமடை, தொப்பி, கொட்டாம்பட்டி, ரோசப்பியான், பூனைத்தலை, கண்ணாடி உள்பட பல்வேறு வகைகள் இங்கே விளைந்துகிடக்கின்றன. இவை அனைத்தும் பாரம்பரிய நாட்டு ரகங்களாகும்.

நாட்டு ரக விதைகள் ஒரு முறை காய்த்து பலன்கொடுத்து முடிந்ததும் இவர்கள் அதில் இருந்து விதைகளை எடுத்து, அதே இடத்தில் மீண்டும் விதைக்கிறார்கள். அந்தசெடிகள் அதே இடத்தில் பழகும்போது, முதலில் 1 கிலோ மகசூல் கொடுப்பது பின்பு அதைவிட அதிக மகசூலை வழங்குகிறது. இவர்கள் கிராமப் புறங்களில் விவசாயிகள் சாகுபடிசெய்யும் அரிதான ரக விதை களையும், நாற்றுகளையும் தேடிச்சென்று வாங்கு கிறார்கள். நெற் பயிரையும் விளைவித்து அறுவடை செய்திருக்கிறார்கள்.

இந்த பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு படிப்போடு சிறந்த விவசாய அனுபவமும் கிடைத்திருக்கிறது. அடிப்படைகளை புரிந்துகொண்டு அவர்களும் நன்றாக விவசாயம் செய்கிறார்கள். இந்த பகுதியில் எங்கு விதை திருவிழா நடந்தாலும், ஆசிரியர்களின் வழிகாட்டுதலோடு மாணவர்களும் அங்கு செல்கிறார்கள். அங்கிருந்து தரமான நாட்டு ரக விதைகளை வாங்கிவருகிறார்கள். இவர்கள் சேகரிக்கும் விதைகளை, மாடித்தோட்டம் அமைக்க விரும்புகிறவர்களுக்கு பள்ளி நிர்வாகம் இலவசமாகவே வழங்குகிறது. அரசு பள்ளிக்கூடங்களில் காய்கறி தோட்டங்கள் அமைக்கவும் இவர்கள் உதவி செய்கிறார்கள்.

பள்ளியின் தாளாளரும் விவசாய ஆர்வலருமான அரவிந்தன் சொல்கிறார்:

‘‘நாங்கள் ஒன்று முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவ-மாணவிகளுக்கு கல்வியோடு சேர்த்து மாதத்திற்கு இருமுறை இயற்கை விவசாயத்தையும் கற்றுக்கொடுக்கிறோம். மாணவ-மாணவிகள் அதில் நன்றாக தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். நாங்கள் விவசாயத்தில் நாட்டு ரகங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கிறோம். நாட்டு ரகங்களை நோய் அதிகம் தாக்காது. பொதுவாக மண்ணோடு ஒரு செடி பழகிவிட்டால், அதற்கு நோய் எதிர்ப்பு சக்தி தானாகவே வந்துவிடும். ஆனாலும் தொடர்ந்து அதில் சாகுபடி செய்தால்தான் முழுபலனையும் பெறமுடியும். நாங்கள் இயற்கை பூச்சிக்கொல்லி மருந்தான தசகவ்யத்தை பூச்சிக் கொல்லி மருந்தாக பயன்படுத்துகிறோம். இதை உருவாக்க பல நாட்கள் தேவைப்படும். அதற்கும் மாணவ-மாணவிகளே உறுதுணையாக இருக்கிறார்கள். அவர்கள் பயிற்சியும் பெற்றிருக்கிறார்கள்.

மாணவர்கள் பஞ்சகவ்யமும் தயாரிக்கிறார்கள். அதில் விதைகளை ஊறவைத்தால் முளைக்காத விதையும் முளைத்துவிடும். பஞ்சகவ்யம் செடிகளுக்கு உரமாகவும், பூச்சிவிரட்டியாகவும் பயன்படுகிறது. விதைகளின் முளைப்பு திறனிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இது தவிர மீன் அமிலத்தையும் தயாரித்து செடிகளுக்கு பயன்படுத்துகிறோம். அது மீன்கழிவுகள் மற்றும் நாட்டு சர்க்கரை கலந்து தயார்செய்யப்படுகிறது.

எங்களிடம் அவரைக் காயில் 12 வகைகள் உள்ளன. அதில் சில ரகங்களை பச்சையாக பறித்து சாப்பிடலாம். சுரைக்காய்களை பள்ளி விடுதியில் சமையலுக்கு பயன்படுத்துகிறோம். இது தவிர பள்ளி மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் தங்கள் வீடுகளுக்கும் எடுத்துச்செல்வார்கள். விதைக்காகவும் சுரைக்காய்களை பயிரிடுகிறோம். அவை விளைந்ததும், அவற்றில் இருந்து விதைகளை எடுத்துவிட்டு அந்த சுரைக்காய்களை அழகுக் கலைப்பொருட்களாக உருவாக்குகிறோம். அவைகளை அன்றாட வாழ்வியல் செயல்களுக்கும் பயன் படுத்துகிறோம்’’ என்றார்.

சுரைக்காய் குடுவைகள் தண்ணீர் பருகவும், பனைமரம் ஏறுகிறவர் களுக்கு அரிவாள்களை வைக்கும் பெட்டியாகவும், பாம்பாட்டி களுக்கு மகுடியாகவும் பயன்பட்டது குறிப்பிடத்தக்கது.

காய்கறி அறுவடையில் ஈடுபட்டிருந்த மாணவ-மாணவிகள் தங்கள் விவசாய அனுபவங்களை நம்மோடு பகிர்ந்துகொண்டார்கள்.

‘‘நாங்கள் படிப்போடு விவசாயத்தையும் கற்றுக்கொண்டுள்ளோம். அடிப்படையை புரிந்துகொண்டதால் எங்களாலும் விவசாயத்தை சிறப்பாக செய்யமுடிகிறது. நாங்கள் பயிரிடும் செடி, கொடிகளுக்கு இயற்கையான மண்புழு உரத்தை பயன்படுத்துகிறோம். அதனையும் நாங்களே உற்பத்தி செய்கிறோம். அதற்கு மாட்டுச் சாணம், கால்நடை கழிவுகள் முக்கியமாக பயன்படுகிறது.

நாங்களே விதையிட்டு வளர்க்கும் செடிகள் எங்கள் கண்முன்னாலே பூப்பதும், காய்ப்பதும் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. ஆரோக்கியமான உணவு மனிதர்களுக்கு எவ்வளவு முக்கியம் என்பதையும் நாங்கள் உணர்ந் திருக்கிறோம். விவசாய பணிகள் அதிக உற்சாகத்தை தருவதால், எங்களால் படிப்பிலும் சிறந்துவிளங்க முடிகிறது. குறிப்பிட்ட நேரத்தில்தான் நாங்கள் விவசாயப் பணிகளில் ஈடுபடுகிறோம். அதற்கு பள்ளி நிர்வாகமும், ஆசிரியர்களும் வழிகாட்டுகிறார்கள். எதிர்காலத்தில் கல்வியோடு, விவசாயத்திலும் சாதிக்க நாங்கள் ஆசைப்படுகிறோம்’’ என்றார்கள்.

பள்ளிச் சீருடை அணிந்த மாணவ-மாணவியர் ஏர்உழவர் களாகி விவசாய பணிகளில் ஈடுபடுவதும், பாரம்பரிய விதைகளை பாதுகாப்பதும் பாராட்டிற்குரியதாக இருக்கிறது.

Next Story