நல்லதை சொல்லும் நாட்டுப்புற கலைகள்


நல்லதை சொல்லும் நாட்டுப்புற கலைகள்
x
தினத்தந்தி 23 Feb 2020 12:01 PM GMT (Updated: 23 Feb 2020 12:01 PM GMT)

நமது முன்னோர்களின் நம்பிக்கைகள், சிந்தனைகள், பழக்கவழக்கங்கள் ஆகியவற்றை நாட்டுப்புறக் கலைகள் மூலம் அறியமுடிகிறது.

மது முன்னோர்களின் நம்பிக்கைகள், சிந்தனைகள், பழக்கவழக்கங்கள் ஆகியவற்றை நாட்டுப்புறக் கலைகள் மூலம் அறியமுடிகிறது. முற்காலத்தில் இக்கலைகளே தகவலை பரப்பும் ஊடகமாகவும், பண்பாட்டுப் பெட்டகமாகவும் திகழ்ந்துள்ளன. இத்தகைய நாட்டுப்புற கலைகளில் கணியான் ஆட்டமும் ஒன்று. இது கணியான் கூத்து என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. மகுடம் என்ற இசைக் கருவியை இசைத்து நிகழ்த்தப்படுவதால் இக்கலை, மகுடாட்டம் என்றும் குறிப்பிடப்படுகிறது.

சுடலைமாடன், அம்மன் மற்றும் சாஸ்தா கோவில்களில் நடைபெறும் திருவிழாக்களில் இ்ந்த ஆட்டம் நடைபெறுகிறது. முழுவதுமாக ஆண்களைச் சார்ந்தே இயங்கும் இக்கலை 16-ம் நூற்றாண்டுக்கும் முற்பட்ட ஆதிக்கலை என்பது ஆய்வாளர் களின் கருத்தாக இருக்கிறது. இந்தக் கலையாடல் வரைமுறைகளுக்கு உட்பட்டது. இடைவெளி இல்லாமல் இரவு முழுவதும் ஆடப்படும் இக்கலை தெய்வத்தின் எதிர்ப்புறத்தில் மட்டுமே ஆடப்படும்.

தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில், குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களின் கிராமப்புற கோவில் கொடை விழாக்களில் இது நிகழ்த்தப்படுகிறது. கணியான் கூத்தில் இசை முக்கிய இடம் பெறுகிறது. மகுடம், ஜால்ரா போன்றவை இசைக்கப்படுகிறது. மகுடம் என்பது தப்பட்டை எனப்படும் வாத்தியத்தை ஒத்ததாகும். பூம்பசுவின் தோலில் இந்த இசைக்கருவி உருவாக்கப்படுகிறது.

உச்சம், மந்தம் என்ற நுண்ணிய வேறுபாடுகளைகொண்ட இரண்டுவிதமான மகுடங்களை இதில் இசைக்கலைஞர்கள் பயன்படுத்துகிறார்கள். அதிக ஓசையைத் தருவது உச்சம். மிதமான ஓசையைத் தருவது மந்தம். கோவில் சாமியாடியின் உக்கிரத்தை அதிகரிக்க உச்சம் இசைக்கப்படும். அமைதிப் படுத்தும்போது மந்தம் இசைக்கப்படும். முதலில் மகுடம் இசைக் கப்படுகிறது. உடன்பாடுபவர் ஜால்ராவில் தாளம் போடுவார். ஆசிரியர் பாடும்போது இடது காதை இடது கையால் பொத்தி வலது கையை வீசிப் பாடுவார். இசை கலந்த உரையாக இது அமைந்திருக்கும். பாடல்கள் ஆங்காங்கே விரவி வரும்.

கர்நாடக சங்கீதம், கிராமிய இசை போன்ற இசைக்கூறுகளும் கல்யாணி, ஆனந்த பைரவி, முகாரி, பூபாளம், தோடி, நாட்டை, அடாணா, பைரவி போன்ற ராகங்களும் இடம்பெறும். இந்த கலைஞர்கள் உடம்பு முழுவதும் திருநீறு பூசிக்கொள்வதும் உண்டு. கணியான் கூத்தின் ஒரு பகுதியான அம்மன் கூத்தின் போது இலை தழைகளைக் கட்டிக் கொள்வதும் குறிப்பிடத்தக்க ஒப்பனையாக உள்ளது.

சுடலை மாடன் கோவிலில் கணியான் கூத்துக் குழுவினர் வேதாள ஆட்டம் என்னும் நிகழ்வினை நடத்தும்போது விகாரமான தோற்றத்துடனான முகமூடி அணிந்துகொள்வதுண்டு. மேலும் இரண்டு கணியான்கள் பெண் வேடம் கட்டி ஆடும்போது பெண்களுக்கான ஒப்பனை செய்திருப்பர். இவர்கள் நீளமான கூந்தல் கொண்டையும், கழுத்தில் ஆபரணமும், கைக்கடிகாரமும் கட்டியிருப்பார்கள். கணியான் கூத்தின்போது சிறு தெய்வங்களின் கதைகள் பாடி ஆடப்படுகிறது. சுடலை மாடனுக்கும் கணியானுக்கும் தொடர்பு இருப்பதாகக் கதையில் கூறப்படுகிறது.

சிவபெருமான் இரண்டு முரடர்களைப் படைத்து பூவுலகிற்கு அனுப்பினார் என்றும் அதில் ஒருவர் சுடலைமாடனாகவும் மற்றொருவர் கணியான் ஆகவும் அழைக்கப்பெற்று, கணியான் சுடலை மாடனுக்குப் பல வழிகளில் உதவி செய்ததாக அந்த புராண கதைக்கரு உள்ளது. தான் குருதி சிந்தி, சுடலைமாடனுக்கு உதவுவதைக் காட்ட, கணியான் ஆட்டத்தை வழிநடத்தும் தலைமையாளர் தனது விரல் அல்லது நாக்கை அறுத்து சில சொட்டு குருதியை வழங்குவார். வெட்டிய இடத்தில் திருநீறு பூசப்படும். அது விரைவாக ஆறிவிடுவது நம்பிக்கை சார்ந்த விஷயம்.

வில்லுப்பாட்டுக்கும்- கணியான்கூத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இரண்டு கலைகளிலும் எடுத்தாளப்படும் கதைகள் பெரும்பாலும் ஒன்றாகவே இருக்கின்றன. சிறு தெய்வவழிபாட்டில், சிறு தெய்வங்களின் கதைகளை முதன்மைப்படுத்துவதே கணியான் கூத்தின் நோக்கமாக உள்ளது. இதில் நாடகக்கூறுகளும் உள்ளன. மக்களின் தெய்வீக நம்பிக்கைகளை மேம்படுத்துவதே இந்த கலையின் நோக்கம்.

கோவில் விழாக்களில் இரவு ஒன்பது மணிவாக்கில் கணியான் கூத்து நிகழ்வு தொடங்கும். சுடலைமாடன் கோவில்களில் வெள்ளிக்கிழமை இரவுகளிலும், அம்மன் கோவில்களில் செவ்வாய்க்கிழமை இரவிலும் கணியான் கூத்து நடக்கிறது. நடு இரவு நேரத்தில் சாமியாடியும் கணியான் ஆட்டக்காரர்களும் இணைந்து ஆடுவார்கள். வழிபாட்டுக்குரிய தெய்வம் பூசாரியின் மீது வந்து இறங்கும் என்பது சமய நம்பிக்கை. அப்போது அவர் தன்னை மறந்த நிலையில் ஆடுவார். அப்போது அவரிடமிருந்து வெளிப்படும் பேச்சு தெய்வத்தின் கட்டளையாகக் கருதப்படும்.

கணியான் கூத்தில் மொத்தம் ஏழு கலைஞர்கள் இடம் பெறுவர். இரண்டு பேர் பெண்வேடமிட்டு ஆடுவார்கள். கதை கூறிப்பாடும் ஆசிரியர் அண்ணாவி எனப் படுவார். இவரே குழுவுக்குத் தலைவராகவும் இருப்பார். ஒரு துணைப்பாடகரும், ஜால்ரா இசைப்பவரும், மகுடம் அடிப்பவரும் அந்த குழுவில் இடம்பெற்றிருப்பார்கள்.

மகுடம் இசைப்பவர்களில் ஒருவர் அண்ணாவியின் பாட்டை பின்பற்றி பின்பாட்டு பாடும்போது அண்ணாவி மேல் துண்டை வேட்டிக்கு மேல் இடுப்பில் கட்டிக் கொள்வார். மகுடக்காரர்கள் அவருக்கு இருபக்கங்களிலும் நின்று கொள்வார்கள். இவர்கள் மகுடத்தை இடுப்பில் கயிற்றினால் கட்டிக் கொண்டு தோற்றமளிப்பார்கள். அண்ணாவி முதலில் பாட அப்போது பெண்வேடமிட்ட ஆண்கள் ஆட, மகுட இசை, பக்கவாத்திய மேளக்காரர் களின் குரல்கள், ஜால்ரா இசை போன்ற பின்னணிகளுடன் கூத்து நடத்தப்படும்.

பாடல்களை அண்ணாவி பாடும்போது பின்னணி இசை குறைவாகவே இருக்கும். பெண்வேடமிட்டவர்கள் அப்போது ஆடுவது இல்லை. அண்ணாவியின் வலது புறத்தில் ஒருவரும் இடது புறத்தில் ஒருவருமாக நின்றுகொண்டு தங்களது கால் சலங்கைகள் ஒலிக்குமாறு தரையில் கால்களைத் தட்டிக்கொண்டே இருப்பார்கள். பெண் வேடமிட்டவர்கள் ஆடலில் தேர்ச்சிபெற்றவர்களாக இருப்பார்கள். அண்ணாவி பாடும்போதும், கதையினைக் கூறும்போதும் மகுடக்காரர்கள் இசைத்துக்கொண்டே இருப்பார்கள்.

காலங்களை கடந்து வாழும் கணியான் கூத்துக்கலைக்கு இப்போதும் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. அவர்கள் கோவில் விழாக்களில் விடிய விடிய உட்கார்ந்து இந்த தெய்வீக கலையை ரசிக்கிறார்கள்.

- கலை வ(ள)ரும்.

கட்டுரை: இளவழகன், பகுதிநேர விரிவுரையாளர், நாட்டுப்புற கலைத்துறை, அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி.

Next Story