இஸ்ரோவில் டெக்னீசியன் பணிகள்


இஸ்ரோவில் டெக்னீசியன் பணிகள்
x
தினத்தந்தி 24 Feb 2020 9:57 AM GMT (Updated: 24 Feb 2020 9:57 AM GMT)

இஸ்ரோ ஆராய்ச்சி மையத்தில் டெக்னீசியன் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. மொத்தம் 182 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதுபற்றிய விரிவான விவரம் வருமாறு:-

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் சுருக்கமாக இஸ்ரோ (ISRO) எனப்படுகிறது. இதன் துணை அமைப்பாக செயல்படும், யூ.ஆர். ராவ் சேட்டிலைட் சென்டர் (யூ.ஆர்.எஸ்.சி.) அமைப்பில் தற்போது பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

டெக்னீசியன், டிராப்ட்ஸ்மேன், டெக்னிக்கல் அசிஸ்டன்ட், சயின்டிபிக் அசிஸ்டன்ட் உள்ளிட்ட பணியிடங்களுக்கு 182 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் டெக்னீசியன் பணிக்கு மட்டும் 102 இடங்களும், டெக்னிக்கல் அசிஸ்டன்ட் பணிக்கு 41 இடங்களும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...

வயது வரம்பு

ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. டெக்னீசியன், சயின்டிபிக் அசிஸ்டன்ட் உள்ளிட்ட சில பணியிடங்களுக்கு 35 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி

10-ம்வகுப்பு தேர்ச்சியுடன், ஐ.டி.ஐ. படித்தவர்கள், என்.டி.சி., என்.ஏ.சி. பயிற்சிச் சான்றிதழ் பெற்றவர்கள் டெக்னீசியன் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

அறிவியல் பிரிவில் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு சயின்டிபிக் அசிஸ்டன்ட் பணியிடங்களிலும், டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்களுக்கு டெக்னிக்கல் அசிஸ்டன்ட் பணியிடங்களிலும் வாய்ப்பு உள்ளது. 10-ம் வகுப்பு, படித்தவர்களுக்கு இதர பணியிடங்களில் வாய்ப்பு உள்ளது.

அந்தந்த பணிக்கான சரியான கல்வித்தகுதி, வயது வரம்பு விவரங்களை முழுமையான அறிவிப்பில் பார்க்கலாம்.

கட்டணம்

பொது, ஓ.பி.சி. பிரிவினர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் ரூ.250 கட்டணம் செலுத்தி இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். பெண் விண்ணப்பதாரர்கள், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் முன்னாள் ராணுவ வீரர்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

விண்ணப்பிக்கும் முறை

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசிநாள் மார்ச் 6-ந் தேதியாகும். விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் https://www.isro.gov.in/ என்ற இணையதள பக்கத்தை பார்க்கலாம்.

Next Story