கொரோனா வைரஸ் தடுப்பூசி: சவால்களும், சாதனைகளும்


கொரோனா வைரஸ் தடுப்பூசி: சவால்களும், சாதனைகளும்
x
தினத்தந்தி 24 Feb 2020 11:07 AM GMT (Updated: 24 Feb 2020 11:07 AM GMT)

பல்லாயிர வருட வரலாற்றில், மனிதர்களை தாக்கிக் கொல்லும் வைரஸ் அடிப்படையிலான உயிர்கொல்லி நோய்கள் தோன்றுவது ஒன்றும் புதிதல்ல, ஆனால் தோன்றும் ஒவ்வொரு முறையும் அவை புதிர்தான்.

இயற்கையின் இந்த விதிக்கு, தற்போது இந்தியா உள்ளிட்ட உலகின் பல நாடுகளில் பரவி மக்களை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் புதிய கொரோனா வைரசான சார்ஸ் கொ-வை-2 (SARS-CoV-2) ஒன்றும் விதிவிலக்கல்ல.

சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், சார்ஸ் கொ-வை-2 வைரஸ்க்கு எதிரான தடுப்பூசி இன்னும் 18 மாதங்களுக்குள் உருவாக்கப்படும் என்று உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. தடுப்பூசி தயாரிக்க ஏன் இவ்வளவு நாட்கள் பிடிக்கின்றன என்பதற்கான காரணங்களை, ஆஸ்திரேலியாவின் தேசிய ஆய்வு மையங்களில் ஒன்றான Commonwealth Scientific and Industrial Research Organisation (CSIRO)-வைச் சேர்ந்த விஞ்ஞானிகள் விளக்கியுள்ளனர்.

முதலில் சார்ஸ் கொ-வை-2-வின் மரபியல் தகவலான ஆர்.என்.ஏ இழையின் (full RNA sequence of the virus) தகவல்களை கடந்த ஜனவரி மாதத்தின் மத்தியில், சீனா வெளியிட்டது.

பொதுவாக, எந்தவொரு வைரஸ் தடுப்பூசி உற்பத்திக்கும் சுமார் 2 முதல் 5 வருடங்கள் வரை பிடிக்கும். ஆனால் அதிர்ஷ்டவசமாக, சார்ஸ் கொ-வை-2 சார்ந்த உலகளாவிய ஆய்வு முயற்சிகளின் உதவியுடன் அதற்கான தடுப்பூசியை குறுகிய காலத்தில் உருவாக்கிவிடலாம் என்கிறார்கள் விஞ்ஞானிகள். ஆனால் அதற்கு, முதலில் சார்ஸ் கொ-வை-2-வின் குணாதிசியங்கள் மற்றும் அது தாக்கும் உயிர்களின் (மனிதர்களின்) உடலில் அது எப்படி செயல்படும் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். அதற்கு, அவற்றைக் கண்டறிய உதவும் ஒரு ‘மாதிரி ஆய்வு விலங்கினை (animal model) உருவாக்க வேண்டும்.

அடுத்து, சார்ஸ் கொ-வை-2-வுக்கு எதிரான தடுப்பூசிகள் பாதுகாப்பானவை என்றும், அவை மனித உடலின் எதிர்ப்பு சக்தியின் சரியான பகுதிகளை, மனிதர்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் தூண்டிவிடும் என்பதை நிரூபிக்க வேண்டும். அதற்குப்பிறகுதான் தடுப்பூசி சார்ந்த மனித ஆய்வுகளுக்கு முன்பு மேற்கொள்ளப்படும் (pre-clinical animal testing) விலங்கு ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். அத்தகைய ஆய்வுகளில் வெற்றியடையும் தடுப்பூசிகளைப் பயன்படுத்தி மனித ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்.

இந்த ஆய்வுகள் அனைத்திலும் வெற்றிபெறும் தடுப்பூசிகளுக்கு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டுக் கழகம் போன்ற நிறுவனங்கள் மக்கள் பயன்பாட்டுக்கு ஒப்புதல் மற்றும் தரக்கட்டுப்பாட்டு சான்றிதழ் அளிக்க வேண்டும். இறுதியாக, அந்த தடுப்பூசிகளை பாதுகாப்பான முறையில் உற்பத்தி செய்து உலகுக்கு விநியோகம் செய்யும் தொழிற்சாலைகளை அடையாளம் கண்டு உற்பத்தியைத் தொடங்கினால் மட்டுமே சார்ஸ் கொ-வை-2 தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

சார்ஸ் கொ-வை-2 தடுப்பூசி தயாரிப்பில் உள்ள சவால்கள்: முதல் சவால் என்னவெனில், சார்ஸ் கொ-வை-2 வைரஸை மிகவும் அதிக அளவில் தயாரித்தால் மட்டுமே அதன்மீதான பல ஆய்வுகளை மேற்கொள்ள முடியும். முக்கியமாக, வைரஸ்களை மிகவும் பாதுகாப்பாகவும், பிற உயிர்கொல்லிகளின் கலப்படமில்லாமல் சுத்தமான முறையிலும் உற்பத்தி செய்ய வேண்டும்.

இரண்டாவது சவால்: சார்ஸ் கொ-வை-2 மீதான ஆய்வுகளை மேற்கொள்ள அவசியமான மாதிரி ஆய்வு விலங்குகளை உருவாக்குதல். அதிர்ஷ்டவசமாக, சார்ஸ் கொ-வை-2 வைரஸானது, கடந்த 2002-2003 ஆண்டுகளில் உலகில் பரவிய சார்ஸ் வைரஸ் குடும்பத்தின் மற்றொரு உறுப்பினர் என்பதாலும், இவ்விரு வைரஸ் களுக்கும் சுமார் 80-90 சதவீதம் மரபணு ஒற்றுமை இருப்பதாலும், சார்ஸ் ஆய்வுகளுக்கு உதவிய மரநாய்கள் (ferrets) புதிய சார்ஸ் கொ-வை-2 தடுப்பூசி ஆய்வுகளுக்கான ஒரு சிறந்த தொடக்கப்புள்ளியாக இருக்குமென்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

இவை அனைத்தையும் விட, மிகவும் மோசமான சவால் ஒன்று உள்ளது. அதுதான் சார்ஸ் கொ-வை-2 வைரஸின் மரபணு மாற்றம் (mutation).

அடிப்படையில் ஒரு விலங்கு வைரஸான சார்ஸ் கொ-வை-2, முதலில் ஒரு விலங்கின் உடலில் இருந்து மற்றொரு விலங்குக்கு தாவும்போதே மரபணு மாற்றம் அடைந்திருக்கும். அதன்பிறகு, விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு தாவும்போதும், பின்னர் அதனைத் தொடர்ந்து தற்போது மனிதர்களில் இருந்து பிற மனிதர்களுக்குத் தாவும்போது என சார்ஸ் கொ-வை-2 தற்போது பல மடங்கு மரபணு மாற்றம் அடைந் திருக்கும்.

ஆக, சார்ஸ் கொ-வை-2 வைரஸின், பல சிக்கல்கள்/மாற்றங்கள் நிறைந்த மற்றும் புரிந்துகொள்ள மிகவும் கடினமான தற்போதைய மரபணு மாற்றத்தை குறிப்பாகத் தாக்கி தகர்க்கும் ஒரு தடுப்பூசியைக் கண்டுபிடித்தால்தான் சார்ஸ் கொ-வை-2-வை அழிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

சார்ஸ் கொ-வை-2 வைரஸ் மனிதர்களுக்கு முன்பே பரிச்சயமான சார்ஸ் வைரஸ்களின் நெருங்கிய உறவினர் என்பதால், அதற்கு எதிரான தடுப்பூசியை விரைவில் கண்டுபிடித்துவிடலாம் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

தொகுப்பு: ஹரிநாராயணன்

Next Story