ரூபாய் மதிப்பு அடிப்படையில் பருப்பு வகைகள் இறக்குமதி 25 சதவீதம் குறைந்தது


ரூபாய் மதிப்பு அடிப்படையில் பருப்பு வகைகள் இறக்குமதி 25 சதவீதம் குறைந்தது
x
தினத்தந்தி 25 Feb 2020 8:42 AM GMT (Updated: 25 Feb 2020 8:42 AM GMT)

பருப்பு வகைகள் உற்பத்தி, இறக்குமதி மற்றும் நுகர்வில் உலகிலேயே இந்தியா முதலிடத்தில் உள்ளது.

புதுடெல்லி

ஜனவரி மாதத்தில் ரூபாய் மதிப்பு அடிப்படையில் பருப்பு வகைகள் இறக்கு மதி 25 சதவீதம் குறைந்துள்ளது.

இந்தியா முதலிடம்

பருப்பு வகைகள் உற்பத்தி, இறக்குமதி மற்றும் நுகர்வில் உலகிலேயே இந்தியா முதலிடத்தில் உள்ளது. மத்தியபிரதேசம், உத்தரபிரதேசம், பீகார், மகாராஷ்டிரா, கர்நாடகா, ராஜஸ்தான், ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் பருப்பு உற்பத்தியில் முன்னணியில் இருக்கின்றன. மழையை நம்பி இருக்கும் பகுதிகளில்தான் பெரும்பாலும் பருப்பு அதிகம் சாகுபடி செய்ப்படுகிறது.

பருப்பு மகசூலை அதிகரிக்கவும், புரதம் நிறைந்த பருப்பு வகைகளின் நுகர்வை அதிகரிக்கவும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 2020-21-க்குள் பருப்பு உற்பத்தியை 2.40 கோடி டன்னாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. ஆனால் 2017-18-ஆம் நிதி ஆண்டிலேயே பருப்பு விளைச்சல் 2.52 கோடி டன்னை தாண்டியது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகரித்த இறக்குமதி

நடப்பு நிதி ஆண்டின் முதல் மாதமான ஏப்ரலில் பருப்பு வகைகள் இறக்குமதி 134 சதவீதம் அதிகரித்தது. மே மாதத்தில் 84 சதவீதம் உயர்ந்தது. ஜூலை மாதத்தில் 62 சதவீதம் அதிகரித்தது. ஆகஸ்டு மாதத்தில் 54 சதவீதம் உயர்ந்தது. செப்டம்பரில் 18 சதவீதம் அதிகரித்தது. அக்டோபரில் 87 சதவீதம் உயர்ந்தது. நவம்பரில் 83 சதவீதம் அதிகரித்தது. அதே சமயம் டிசம்பரில் 37 சதவீதம் குறைந்தது.

இந்நிலையில், ஜனவரி மாதத்தில் பருப்பு வகைகள் இறக்குமதி ரூ.767 கோடியாக இருக்கிறது. சென்ற ஆண்டின் இதே மாதத்தில் அது ரூ.1,034 கோடியாக இருந்தது. ஆக, இறக்குமதி 25 சதவீதம் குறைந்து இருக்கிறது. இதே மாதத்தில், டாலர் மதிப்பில் இறக்குமதி 26 சதவீதம் குறைந்து 10 கோடி டாலராக இருக்கிறது. கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் அது 14 கோடி டாலராக இருந்தது.

9 மாதங்களில்...

டிசம்பர் வரையிலான 9 மாதங் களில் ரூ.8,210 கோடிக்கு பருப்பு வகைகள் இறக்குமதி செய்யப்பட்டு இருக் கிறது. சென்ற நிதி ஆண்டின் இதே காலத்தில் அது ரூ.5,629 கோடியாக இருந்தது. ஆக, ரூபாய் மதிப்பில் இறக்குமதி 46 சதவீதம் உயர்ந்துள்ளது. இதே காலத்தில், டாலர் மதிப்பில் பருப்பு இறக்குமதி 45 சதவீதம் உயர்ந்து இருக்கிறது.

நடப்பு 2019-20-ஆம் நிதி ஆண்டில் பருப்பு உற்பத்தி 2.8 சதவீதம் அதிகரித்து 2.35 கோடி டன்னாக இருக்கும் என இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் மதிப்பீடு செய்துள்ளது. இது சென்ற நிதி ஆண்டுடன் ஒப்பிடும்போது 2 சதவீதம் குறைவாகும். எனினும் பருப்பு இறக்குமதி 68 சதவீதம் குறையும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

நம் நாட்டில் பருப்பு நுகர்வு ஆண்டுக்கு சுமார் 2.50 கோடி டன் என்ற அளவில் இருக்கிறது. உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்ய பருப்பு இறக்குமதி செய்ய வேண்டி இருக்கிறது. பருப்பு உற்பத்தியில் நாடு தன்னிறைவு அடைந்து வந்தாலும் குறுகிய கால அடிப்படையில் இறக்குமதியை சார்ந்து இருக்க வேண்டி இருக்கும் என்று கூறப்படுகிறது.

மதிப்பீடுகள்

அடுத்த நிதி ஆண்டில் (2020-21) பருப்பு இறக்குமதி 60 சதவீதம் குறைந்து 10 லட்சம் டன்னாக இருக்கும் என இந்திய பருப்பு வகைகள் மற்றும் தானியங்கள் சங்கம் மதிப்பீடு செய்துள்ளது. நடப்பு நிதி ஆண்டில் 25 லட்சம் டன் பருப்பு இறக்குமதி ஆகும் என்று இச்சங்கம் கூறி உள்ளது.

கடந்த நிதி ஆண்டில் (2018-19) 25 லட்சம் டன் பருப்பு இறக்குமதி ஆகி இருந்தது. 2016-17-ஆம் ஆண்டில் அது வரலாறு காணாத அளவிற்கு 66 லட்சம் டன்னாக இருந்தது. நடப்பு நிதி ஆண்டில் இறக்குமதி ஏறக் குறைய 10 லட்சம் டன்னாக இருக் கும் என வர்த்தக வட்டாரங்கள் கூறுகின்றன.

2018-19-ஆம் நிதி ஆண்டில் நம் நாடு ஒட்டுமொத்த அளவில் 2.70 லட்சம் டன் பருப்பு ஏற்றுமதி செய்திருக்கிறது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 50 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது அது 1.80 லட்சம் டன்னாக இருந்தது.

சாகுபடி பரப்பளவு

நடப்பு ரபி பருவத்தில் பருப்பு சாகுபடி பரப்பளவு 1.59 கோடி ஹெக்டேராக உள்ளது. கடந்த பருவத்தில் அது 1.56 கோடி ஹெக்டேராக இருந்தது. ஆக, பரப்பளவு 1.86 சதவீதம் அதிகரித்துள்ளது. கோதுமை பயிரான பரப்பளவு 12 சதவீதம் விரிவடைந்து 3.34 கோடி ஹெக்டேராக அதிகரித்து இருக்கிறது. கோதுமை அதிகம் விளையும் பஞ்சாப், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சாகுபடி பரப்பளவு உயர்ந்ததே இதற்கு காரணமாகும்.

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

Next Story