சிறப்புக் கட்டுரைகள்

தினம் ஒரு தகவல் : சொகுசான விமானப்பயணம் + "||" + Day One Information: Luxury Air Travel

தினம் ஒரு தகவல் : சொகுசான விமானப்பயணம்

தினம் ஒரு தகவல் : சொகுசான விமானப்பயணம்
நம்மில் பலருக்கும் விமானப்பயணம் என்பதே சொகுசுதான். அந்த நிலைமையில்தான் இந்தியாவில் பலர் இருக்கிறார்கள். அதனாலேயே எகானமி வகுப்பு மட்டுமே கொண்டிருக்கும் விமான நிறுவனங்கள் பல உள்ளன.
எகானமி வகுப்பில் இருந்து பிஸினஸ் வகுப்பு செல்வதற்கே நம்மிடையே பணமும் மனமும் இல்லாததால் ‘பிரீமியம் எகானமி’ என்று புதிய சேவையை டாடா குழு நிறுவனமான விஸ்தாரா நிறுவனம் அறிவித்தது. 

நிலைமை இப்படி இருக்க, அபுதாபியில் இருந்து நியூயார்க் செல்வதற்கு 32,000 டாலர் (ரூ 23.50 லட்சம்) கட்டணத்துடன் எதியாட் விமான நிறுவனம் சேவையை வழங்கி வருகிறது. இதற்கு எதியாட் ரெஸிடென்ஸ் என்ற பெயரில் இந்த சேவை வழங்கப்படுகிறது. சாதாரணமாக இந்த வழித்தடத்தில் செல்வதற்கு ஆகும் விமானக் கட்டணத்தை விட 26 மடங்கு கட்டணம் அதிகம்.

இந்த போக்குவரத்து 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 1-ந் தேதியில் இருந்து நடைபெற்று வருகிறது. ஏற்கனவே அபுதாபி- லண்டன் இடையே இந்த சேவை இருந்து வருகிறது. இப்போது இது மேலும் விரிவுபடுத்தப்பட்டு சிட்னி- அபுதாபி இடையேயும் சிட்னி-மாலத்தீவுகள் இடையேயும் இயக்கப்பட்டு வருகிறது.

இவ்வளவு அதிகமான கட்டணம் கொடுத்து போவதற்கு இந்த விமானத்தில் அப்படி என்ன இருக்கிறது என்பதுதான் அனைவருக்கும் உள்ளான கேள்வியே. 2 பேர் பயணம் செய்வதற்கு ஏற்ப லிவிங் ரூம், குளியல் அறை மற்றும் படுக்கை அறை என 3 அறைகள் உள்ளன. 125 சதுர அடிக்கு இந்த அறை உள்ளது. இவர்களுக்கு சேவை செய்ய ஒருவர், உணவு தயாரிக்க ஒரு செப் என பயணிகளுக்கு வசதிகள் செய்துகொடுக்க தனித்தனி ஆட்கள் இருக்கிறார்கள்.

இவ்வளவு காசு கொடுத்து யார் முன்பதிவு செய்வார்கள் என்ற எண்ணம் தோன்றுவது இயல்பே. ஆனால் இதற்கான முன்பதிவு தொடங்கி சில மணி நேரங்களில் முதலாவது டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டதாகவும், அடுத்தடுத்த நாட்களில் முன்பதிவு சிறப்பாக இருப்பதாகவும் எதியாட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜேம்ஸ் ஹோகன் தெரிவித்திருக்கிறார். 

இந்த சேவைக்கான 10 ஏர்பஸ் விமானங்களை எதியாட் வாங்கி இருக்கிறது. 6 வருட ஆராய்ச்சிக்கு பிறகு இதுபோன்ற விமானங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. 

அமெரிக்காவில் நியூயார்க் தவிர மற்ற நகரங்களுக்கு இந்த சேவை கிடையாது என்று அறிவித்துவிட்டாலும் உலகின் மற்ற நகரங்களுக்கு இந்த சேவையை தொடர்ந்து விரிவுபடுத்தும் திட்டத்தில் இருக்கிறது எதியாட் விமான நிறுவனம்.