நாடாளத் தக்கவரை உருவாக்கிய தமிழர் திறன்


நாடாளத் தக்கவரை உருவாக்கிய தமிழர் திறன்
x
தினத்தந்தி 26 Feb 2020 9:16 AM GMT (Updated: 26 Feb 2020 9:16 AM GMT)

மன்னராட்சி முறை உலக நாடுகள் அனைத்திலும் நிலவியதை வரலாற்றில் காண்கிறோம். போர்த்திறன் ஒன்றே மன்னருக்குரிய தகுதியாக இருந்தது. ஆனால் போர்த்திறனோடு நல்லொழுக்கம், நல்லாட்சி, நற்பண்பு ஆகியவற்றைக் கட்டாயமாக்கிய ஒரே அரசமரபு பழந்தமிழரின் மூவேந்தர் மரபு என்பது வரலாற்றில் பதியப்படவில்லை.

 மூத்த மகனுக்குப் பட்டம் கட்டும் முறை பழந்தமிழகத்தில் இல்லை. அனைத்து வகையிலும் சிறந்த இளவரசனே அமைச்சர்களாலும், சான்றோர்களாலும் தேர்ந்து எடுக்கப்படுவான். இதனை,

ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும்
மூத்தோன் வருக என்னாது அவருள்
அறிவுடை யோன்ஆறு அரசும் செல்லும்

என்னும் புறநானூற்றுப் பாடல் குறிப்பிடுகிறது.

இளவரசன் பட்டம் கிடைக்காத இளவரசர்கள் குடிமக்களை அழைத்துக் கொண்டு காட்டை அழித்து நாடாக்கி குறுநில மன்னர்களாக வடக்கு நோக்கி வடநாடு முழுவதும் பரவினர். இளவரசனுக்குரிய பட்டம் பெற வேண்டுமானால் போர்த் திறமைகளோடு 64 கலைகளில் தேர்ச்சி, கடல் கடந்து சென்று புதியன கொண்டுவருதல், சரியாக நீதி வழங்குதல் ஆகிய போட்டிகளில் வெற்றிபெற வேண்டும். கி.மு.3000 ஆண்டளவில் கீழைக்கடல் தீவுகளில் இருந்து கரும்பு கொண்டுவந்து தமிழ்நாட்டில் பயிராக்கிய அதியமான் முன்னோனை அவ்வையார் பாடியிருக்கிறார். அவன் பெயர் அதியஞ்சேரல் என்றும் தெரியவந்துள்ளது.

இத்தகைய தகுதிகளுக்கும் மேற்பட்ட தகுதியாக நல்லொழுக்கமும், நற்பண்பும் வற்புறுத்தப்பட்டன. அத்தகையவனே செங்கோல் மன்னன். நற்பண்பும், நல்லொழுக்கமும் கல்வி நிலையங்களில் கற்பிக்கப்படுவது இல்லை. வீட்டில் தான் பயிற்சி அளிக்கப்படுகிறது என்று காந்தியடிகளும் கூறியுள்ளார். நற்பண்புகளையும், நல்லொழுக்கங்களையும் குடும்பச் சொத்தாகப் பேணி வளர்த்த அரசகுடும்பங்கள் நன்குடி என்றும், பழங்குடி என்றும் கூறப்பட்டன. பழங்குடி பண்பில் குறைவதில்லை என்று திருவள்ளுவரும் கூறியுள்ளார். பழங்குடியாவது படைப்புக் காலம் தொட்டே மேம்பட்டு வரும் குடி என்று பரிமேலழகர் உரை எழுதினார். இத்தகைய பண்பில் சிறந்த குடும்பத்தில் பிறப்பதே உயர்குடிப் பிறப்பு எனப்பட்டது. இவர்களுக்கு நன்குடி வேளாளர் என்றும் பெயர் இருந்தது. அக்குடியில் பிறந்த ஒவ்வொருவரும் 10 கட்டளைகளைப் பின்பற்ற வேண்டும். ஒருவன் நற்பண்பு தவறினாலும் அந்தக் குடும்பம் நன்குடி என்னும் தகுதியை இழந்துவிடும். குடவோலை முறையிலான ஊர்மன்றத் தேர்தலிலும் இத்தகையோர் போட்டியிடும் தகுதியை இழந்துவிடுவர். அந்த 10 கட்டளைகளை நன்குடி வேளாளர் வரலாறு(1902) என்னும் நூல் குறிப்பிட்டுள்ளது.

10 கட்டளைகள்:

1. ஆணைவழி நிற்றல் (பேரரசன் ஆணைப்படி நடத்தல்) 2. அழிந்தோர் நிறுத்தல் (நல்ல நிலையில் இருந்து வீழ்ந்தாரை நன்கு வாழச் செய்தல்) 3. கைக்கடன் ஆற்றல் (தனக்கே உரிய திறமைகளை வெளிப்படுத்தல்) 4. கசிவகத்துண்மை (இரக்க குணம் உடையவராதல்) 5. ஒக்கல் போற்றல் (சுற்றத்தாரைப் பாதுகாத்தல்) 6. ஓவா முயற்சி (இடையறாத உழைப்பு) 7. மன்னிறை தருதல் (அரசனுக்கு 6-ல் ஒன்று வரி செலுத்துதல்) 8. ஒற்றுமை கோடல் (எக்காரணத்தை முன்னிட்டும் தமிழின ஒற்றுமை குலையாமல் காத்தல்) 9. விருந்து புறந்தருதல் (விருந்தினரை நன்கு கவனித்தல்) 10. திருந்திய ஒழுக்கம் (சிறு குற்றமும் சுட்டிக்காட்டப்படாத வகையில் நல்லொழுக்கம் உடையவராக வாழ்நாள் வரை வாழ்ந்து காட்டுதல்.)

நாடு நலம்பெற பண்புள்ள மன்னன் தேவை என்பதை திருவள்ளுவர் இறைமாட்சி என்னும் தலைப்பில் கூறியுள்ளார். மன்னனை ஊரில் எவரேனும் பழித்துப் பேசினால் மன்னன் பெரிதும் வெட்கப்பட்டு அஞ்சுவான், குடிபழி தூற்ற வாழேன் என்பான். இத்தகைய சிறந்த தகுதிகளை உடையவர்களாக இருந்ததால்தான் இறையனார் களவியல் என்னும் சங்க நூலில் கூறியுள்ளபடி 10,000 ஆண்டுகளாக நீடித்த மூவேந்தர் ஆட்சி, வரலாற்றுச் சிறப்பு பெற்றது. எகிப்து, சீனம், கிரேக்கம், பாபிலோனியா போன்ற உலக நாடுகளில் ஒரு அரச மரபிற்குப் பிறகு அதே மரபு மீண்டும் ஆட்சிக்கு வந்ததில்லை. ஆனால், தமிழர் வரலாற்றில் மூன்று தமிழ்சங்க காலத்திலும் பாண்டியனுக்குப் பின் பாண்டியனும், சேரனுக்குப் பிறகு சேரனும், சோழனுக்குப் பிறகு சோழனும் தொடர்ந்து ஆட்சி செய்ததை காண்கிறோம். இதை வரலாற்றில் ஒரு புதுமை என்றும் சொல்லலாம். மன்னன் ஒரே மனைவியோடு தான் வாழ்வான். எந்த மன்னனாவது பிற மகளிருடனும் தொடர்பு கொண்டதில்லை என்பதை “பல்லிருங் கூந்தல் மகளிர்ஒல்லாமுயக்கிடை குழைகயென்தாரே” எனப் பாண்டியன் பாடியிருப்பதில் இருந்து அறியலாம். சான்றோர், புலவர் ஆகியோரை மன்னன் பெரிதும் மதித்தான்.

சான்றோர் அவைக்கு வந்தால் 7 அடி முன்னே சென்று வரவேற்று, போகும் போது 7 அடி பின்னே சென்று வழியனுப்புவான் கரிகாலன் என்று கூறப்பட்டுள்ளது. கரிகாலன் நரைமுடி தரித்து முதியோர் இருவருக்கு நீதி வழங்கிய மதிநுட்பம் அக்காலத்தில் பஞ்சாப் வரை பரவி இருந்தது. இந்திப் பாடநூலில் “சச்சா நியாய” என்னும் தலைப்பில் இருந்த சிறுகதையைப் படித்தேன். அதில் அலெக்சாண்டர் பஞ்சாப் வந்த போது ஒரு சிற்றூரில் இக்கதை கூறப்பட்டதை நேரில் கண்டதாக கூறியிருக்கிறார். தமிழரின் வரலாற்று உண்மைகள் எங்கெங்கோ மறைந்துள்ளன.

சிந்துவெளி நாகரிக காலம் முதல் வேத காலம் வரை இந்தியா முழுவதும் தமிழர்களே நாடு ஆண்டனர். ராமாயண, பாரத முன்னோரும் சமண, பவுத்த, ராஜபுத்திர, சாதவாகனரின் முன்னோரும் இக்சுவாகு மரபில் தோன்றியவர்கள் எனக் கூறப்பட்டுள்ளது. ராஜபுத்திரர்கள் தாம் சூரிய சந்திர அக்கினி குலப்பிரிவுகளைச் சார்ந்தவர்கள் என்கிறார்கள். இருங்கோவேள் பாண்டிய மரபினர் புலால் உண்ணாதவர்கள். அவர்களின் நெடுங்கால முன்னோர்களாகிய எவ்வி தொல்குடி பாண்டிய மரபினர் என்று கபிலர் கூறியுள்ளார். எவ்வி என்னும் சொல் சிந்துவெளி முத்திரைகளில் பல இடங்களில் காணப்படுகிறது. இருங்கோவேள் என்பது இருக்கு வேள்கள் இக்சுவாகு என மாறிவிட்டது. வேதகாலத்தில் ஆரியர்களுக்கு பல்பூதன், நார்மாறன் என்னும் இரு பாண்டியர்கள் உதவி செய்ததாக ரிக் வேதம் குறிப்பிடுகிறது.

கி.மு.10000 முதல் கி.மு.200 வரை சீரும் சிறப்பும் பெற்றிருந்த மூவேந்தர் மரபு யவனர், ஆரியர், மங்கோலியர், ஈரானியர் போன்ற அயலவர் வரவால் பண்பாட்டுக் கலப்புகள் ஏற்பட்டு தமிழர் பண்பாடு சீரழிந்தது. அரச குடும்பத்திலும் இந்தச் சீரழிவு உட்புகுந்தது. மது அருந்துதல், பல பெண்களை மணந்து கொள்ளுதல் போன்றவற்றால் தமிழ் அரச மரபுக்கே உயிராக இருந்த 10 கட்டளைகள் மீறப்பட்டன. மூவேந்தரின் ஒற்றுமை குலைந்தது. நற்பண்புகளால் எந்த உயரத்தில் தமிழினம் உலக அரங்கில் கோலோச்சியதோ அவை அனைத்தும் அடியோடு சரிந்தன.

தமிழன் தமிழனுக்கே பகைவன் ஆனான். ஈராயிரம் ஆண்டுகளாக தமிழன் வீழ்ச்சியடைந்தான் என்பது 10 கட்டளைகளை மீறிய பாவத்தின் விளைவு என்று கருத வேண்டும். அதே 10 கட்டளைகளை தமிழினத்தில் அனைவரும் மீண்டும் பின்பற்ற தொடங்கினால் தமிழன் உலக அரங்கில் உயர்ந்து நிற்க முடியும். நடந்த வரலாற்றை கடந்த வரலாறு என்று பார்க்காமல், வருங்கால தலைமுறைக்கு எச்சரிக்கை விடுத்து வழிகாட்டும் வரலாறு என்பதை வரலாற்று ஆசிரியர்கள் பாடநூல்களில் பதிவு செய்ய வேண்டும். 

- பேராசிரியர் இரா.மதிவாணன், இயக்குனர், சிந்துவெளி எழுத்தாய்வு நடுவம், சென்னை.

Next Story