‘லீப் நாள்’ வினோதங்கள்


‘லீப் நாள்’ வினோதங்கள்
x
தினத்தந்தி 28 Feb 2020 3:30 AM GMT (Updated: 27 Feb 2020 9:29 AM GMT)

குட்டீஸ் லீப் நாள் பற்றி கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? நான்கு ஆண்டு களுக்கு ஒருமுறையே வரும் சிறப்பு கொண்டது லீப் நாள். ஆமாம், லீப் நாளில் யாராவது பிறந்திருந்தால் அவர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் உண்மையான பிறந்தநாள் வரும். பிறகு அவர்களின் வயதை எப்படி கணக்கிடுவார்கள் என்று யோசிக்கிறீர்களா? இது பற்றியும், லீப் நாள் வினோதஙக்ள் பற்றியும் அறிந்து கொள்வோமா?

நாம், நாள் என்பதை பூமி சுற்றுவதில் இருந்து கணக்கிடுகிறோம். பூமியானது தன்னைத்தான் சுற்றிக் கொள்வதால் இரவு பகல் ஏற்படுகிறது. அதேபோல பூமி சூரியனையும் ஒரு நீள்வட்டப்பாதையில் சுற்றி வருகிறது. இந்த நீண்ட வட்டப்பாதையில் பூமி சூரியனை ஒரு சுற்று சுற்றிவர ஆகும் காலமே ஒரு ஆண்டு எனப்படுகிறது.

இப்படி பூமி சூரியனை ஒரு சுற்று சுற்றிவர 365 நாட்கள் எடுத்துக் கொள்கிறது. துல்லியமாக சொல்லப்போனால் அந்த 365 நாட்களுக்கும் கூடுதலாக சில மணி நேரங்களை எடுத்துக் கொள்கிறது. அதாவது 365.242189 நாட்கள் கொண்டதுதான் துல்லியமான ஒரு வருடமாகும். கூடுதலாக இருக்கும் நேரம் 5 மணி நேரம் 48 நிமிடங்கள், 45 வினாடி களாகும். இந்த கூடுதல் நேரமானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை சேர்ந்து கூடு தலாக ஒரு நாளை உருவாக்கிவிடுகிறது. அதுவே லீப் ஆண்டு என்று அழைக்கப்படு கிறது. அந்த ஆண்டில் பிப்ரவரி மாதத்தில் கூடுதலாக ஒரு நாள் சேர்த்து கணக்கிடப்படுகிறது. அதுவே லீப் நாள் என்றும் வரை யறுக்கப்படுகிறது. 100 ஆண்டுகளில் சுமார் 24 லீப் நாட்களே வந்து செல்லும்.

லீப் நாளை பிப்ரவரியில் சேர்த்ததன் பின்னால் ஒரு வரலாற்றுக் கதை உள்ளது. நாம் இப்போது பின்பற்றும் உலகளாவிய பொது காலண்டர் முறை ஜூலியன் நாட்காட்டி முறையாகும். ஆங்கிலேய நாட்காட்டி முறையான இதில் மற்ற எல்லா மாதங்களும் 30 அல்லது 31 நாட்கள் கொண்டு உள்ளன.

ஆனால் பிப்ரவரி மட்டும் ரோமானிய பேரரசர் சீசர் அகஸ்டஸின் பொறாமை எண்ணத்தால் குறைந்த நாட்களை கொண்டுள்ளது என்பது ஒரு ரகசிய உண்மையாகும். அவரது முன்னோடி ஜூலியஸ் சீசர் நாட்காட்டியை அமல்படுத்தியபோது, பிப்ரவரி மாதத்தில் 30 நாட்கள் இருந்தன. அவரது பெயரால் அழைக்கப்டும் ஜூலை மாதத்தில் 31 நாட்கள் இருந்தன. அப்போது ஆகஸ்டுக்கு 29 நாட்கள் மட்டுமே இருந்தன.

சீசர் அகஸ்டஸ் பேரரசராக ஆனபோது, தனது பெயர் சார்புடைய ஆகஸ்ட் மாதத்தை ஜூலை மாதத்திற்கு இணையாக மாற்ற அவர் ஆகஸ்டு மாதத்திற்கு இரண்டு நாட்களை சேர்த்தார். அந்த இரண்டு நாட்கள் பிப்ரவரியில் இருந்து எடுக்கப்பட்டது. எனவே பிப்ரவரி குறைந்த நாட்கள் கொண்டமாதமாக மாறியது. நாட்களை துல்லியமாக கணக்கிடும் முறை வந்தபோது, குறைந்த நாட்களுள்ள பிப்ரவரி மாதத்தில் கூடுதலாக சேரும், லீப் நாள் சேர்க்கப்பட்டு, அந்த வருடம் மட்டும் பிப்ரவரி 29 நாட்களுடன் கணக்கிடப் படுகிறது.

கிரீஸ் நாட்டில் ஐந்து பேரில் ஒருவர் தங்களது திருமணத்தை லீப் ஆண்டில் வைத்துக் கொள்வதை விரும்பவில்லை. ஏனெனில் அவர்கள் அதை கெட்டதாக நினைக்கிறார்கள்.

பிப்ரவரி 29-ந் தேதி பிறந்தவர்கள் ‘லீப்பிங்ஸ்’ என்றும் ‘லீப்பர்ஸ்’ என்றும் அழைக்கப்படுகிறார்கள்.

பிப்ரவரி 29-ந் தேதி பிறந்த தினம் கொண்டவர்களுக்கு 4 ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நிஜமான பிறந்த தினம் வருகிறது. இந்த நாளில் பிறந்தவர்களுக்காக உலகளாவிய சங்கம் இருக்கிறது தெரியுமா? ‘ஹானர் சொசைட்டி ஆப் லீப் இயர் பேபீஸ்’ எனப்படும் இந்த அமைப்பில் உலகம் முழுக்க 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினராக உள்ளனர்.

பிப்ரவரி 29-ல் பிறப்பவர்கள் அபூர்வ திறன்களை பெற்றிருப்பார்கள் என்று ஜோதிட நம்பிக்கை கூறுகிறது. அதாவது எந்தத் துறையில் இருந்தாலும் அதில் முன்னணி வகிக்கும் அளவுக்கு ஆழ்ந்த அறிவுத்திறன் கொண்டவர்களாக இருப்பார்கள் என்று நம்பப்படுகிறது.

பிப்ரவரி 29-ந் தேதியில் பிறந்தவர்களும், இதே நாளில் இறந்தவர்களும் பலர் இருக்கலாம். ஆனால் பிப்ரவரி 29-ந் தேதி பிறந்து, அதே போன்ற லீப்நாளில் உயிர் துறந்த அரிய ஒற்றுமைக்குரிய நபர் இதுவரை உலகில் ஒரே ஒருவருக்குத்தான் உண்டு. அவர் டாஸ்மேனியைாவைச் சேர்ந்த ‘சர் ஜேம்ஸ் வில்சன்’ ஆவார். இவர் 1812-ல் லீப்நாளில் பிறந்தார். 1880-ல் லீப் நாளில் இறந்தார்.

1500 பேரில் ஒருவர்தான் லீப்நாளில் பிறப்பதாக மதிப்பிடப்படுகிறது.

நார்வேயைச் சேர்ந்த ஹரின் ஹென்ரிக்சென் என்னும் பெண்மணி தனது 3 குழந்தைகளையும் அடுத்தடுத்த பிப்ரவரி 29-ந் தேதியில் பெற்றெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு 1960-ல் லீப்நாளில் பெண் குழந்தை பிறந்தது, அடுத்து 1964 மற்றும் 1968 லீப் நாட்களில் ஆண் குழந்தைகள் பிறந்தன.

பிப்ரவரி 29-ல் பிறந்தவர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் சரியாக அதே தேதியில் பிறந்த நாள் வரும் என்று சொன்னோம். அதனால் இந்த நாளில் பிறந்தவர்கள் பிப்ரவரி 28-ல் அல்லது மார்ச் 1-ல் பிறந்த நாளை கொண்டாடுவது உண்டு. இதே முறையில் வயதை கணக்கிடுவதும் உண்டு. இந்த நடைமுறை பல்வேறு நாடுகளிலும் வேறுபட்டதாக உள்ளது. ஹாங்காங்கில் மார்ச்-1-ந்தேதியை அடிப்படையாகக் கொண்டும், நியூசிலாந்தில் பிப்ரவரி 28-ந் தேதியை அடைப்படையாகக் கொண்டும் பிறந்தநாள் மற்றும் வயது கூடுதல் கணக்கிடப்படுகிறது.

ரஷியாவில் லீப் ஆண்டு என்பது, வித்தியாசமான காலநிலையைக் கொண்டிருக்கும் என்றும், மரணம் மற்றும் கெட்ட நிகழ்வுகள் நிறைய நடைபெற வாய்ப்புள்ளது என்ற நம்பிக்கையும் நிலவுகிறது.

டைட்டானிக் கப்பல் மூழ்கியது (1912), மின்னலில் இருந்து மின்சாரம் பெறும் முறையை பெஞ்சமின் பிராங்கிளின் உருவாக்கியது (1752), கலிபோர்னியாவில் தங்கம் கிடைத்தது (1848), லிட்டில் பிக்கார்ன் போர் நடந்தது (1876) போன்றவை லீப் ஆண்டுகளில் நடந்த முக்கிய நிகழ்வுகளில் சிலவாகும்.

லீ ப் நாளுக்கு அடையாளமாக தவளை சின்னம் பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ராக்கெட் தவளை இனம், ஒரு தாவுதலில் 2 மீட்டர் தூரத்தை கடக்கக்கூடியதாகும். எனவே இவை ராக்கெட் தவளை என்று பெயர் பெற்றன. லீப்நாள் நீண்ட இடைவெளியுடன் தாவி வருவதால், லீப் தினத்திற்கும் இந்த தவளையை அடையாளமாக பயன்படுத்துகிறார்கள். 

Next Story