தன்னம்பிக்கையே வெற்றியின் முதற்படி


தன்னம்பிக்கையே வெற்றியின் முதற்படி
x
தினத்தந்தி 28 Feb 2020 8:58 AM GMT (Updated: 28 Feb 2020 8:58 AM GMT)

யானையின் பலம் தும்பிக்கையில், மனிதனின் பலம் நம்பிக்கையில் என்பது சான்றோர் வாக்கு. நாத்திகன் ஒருவன் மலை உச்சிக்கு செல்வதற்காக ஏறிக்கொண்டிருந்தான். திடீரென்று அவன் கால் வழுக்கியது. கீழே விழுந்தான்.

பாறையின் விளிம்பிற்கு மேல் நீட்டிக் கொண்டிருந்த வேரைப் பிடித்துக் கொண்டான். கீழே கிடுகிடு பள்ளம்; விழுந்தால் எலும்பு கூடக் கிடைக்காது. வேரைப் பிடித்துக் கொண்டிருந்த அவனுடைய பிடியோ நழுவிக் கொண்டிருந்தது. நடுநடுங்கினான். ‘கடவுளே! இந்த ஆபத்திலிருந்து என்னைக் காப்பாற்று’ என்று அவன் வேண்டினான். எந்த உதவியும் வரவில்லை. உரத்த குரலில் அவன் ‘கடவுளே! இனி உன்னை நான் முழுமையாக நம்புவேன். இவ்வளவு காலம் நம்பாமல் இருந்ததற்கு என்னை தண்டித்து விடாதே. என்னைக் காப்பாற்று. நீ என்ன சொன்னாலும் செய்கிறேன்’ என்று குரல் கொடுத்தான்.

அப்போது வானிலிருந்து ஒரு குரல், ‘நீ என்னை நம்ப மாட்டாய்’ என்றது. ‘கடவுளே! உன்னை நம்புகிறேன். என்னைக் காப்பாற்று’ என்று வேண்டினான் அவன்’. ‘உன்னைப் பற்றி எனக்கு தெரியும், நீ என்னை நம்ப மாட்டாய்’ என்றது மீண்டும் அந்தக் குரல். ‘கடவுளே! என்னைக் கைவிட்டு விடாதே. உன்னை முழுமையாக நம்புகிறேன்’ என்று கெஞ்சினான் அவன். ‘சரி, நீ பிடித்திருக்கும் வேரை விட்டு விடு. நான் உன்னைக் காப்பாற்றுகிறேன்’ என்றது அந்தக் குரல். ‘வேரை விட்டுவிட்டால் நான் கீழே விழுந்து விடுவேனே’ என்று அலறினான் அவன். அதன்பிறகு அந்தக் குரல் கேட்கவில்லை. எந்த ஒரு செயலுக்கும் கடவுள் மீது நம்பிக்கையும், தன் மீது நம்பிக்கையும் வேண்டும். அப்பொழுதுதான் வெற்றி பெற இயலும்.

ஒரு நிறுவனத்தில் ஒரு வேலைக்கு நேர்காணல் நடந்தது. ஒரே ஒரு வேலைக்கு நிறைய இளைஞர்கள் விண்ணப்பம் அனுப்பியிருந்தனர். நேர்காணலில், கடைசியாக இருவர் தேர்வு பெற்றனர்; இருவருக்கும் ஒரே கல்வித் தகுதி. ஒரே மதிப்பெண். இருப்பதோ ஒரு வேலை; யாரை தேர்ந்தெடுப்பது என்று அதிகாரிகளே திகைத்து நின்றனர். இறுதியாக இருவரையும் தனித் தனியே அழைத்து ஒரு கேள்வி கேட்டனர்;

‘இந்த வேலை உனக்கு கிடைக்கவில்லையென்றால் என்ன நினைப்பாய்?’ என்பது தான் அந்த கேள்வி. முதலில் வந்த இளைஞன் சொன்னான்: ‘நான் கொடுத்து வச்சது அவ்வளவுதான்னு நெனச்சுக்குவேன்’. அவனை அனுப்பி விட்டு இரண்டாவது இளைஞனை அழைத்து அதே கேள்வியை கேட்டனர் அதிகாரிகள். அவன் சொன்னான், ‘நீங்கள் கொடுத்து வச்சது அவ்வளவுதான்’.

இரண்டாமவன் அந்த வேலைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டான். காரணம் அவனிடம் இருந்த தன்னம்பிக்கை. இது தான் அவனுக்கு வெற்றியை தேடி தந்தது.

உலகமே அமெரிக்காவை பார்த்து அஞ்சுகிறது; ஆனால் அமெரிக்காவோ அப்துல்கலாம் என்ற மாமனிதரைப் பார்த்து அஞ்சியது. ஐ.டி. என்றால் தகவல் தொழில்நுட்பம் என்று அழைத்த உலகை, இந்திய தொழில்நுட்பம் என்று உறுதியுடன் கூற வைத்த அறிவுலக சிற்பி அவர்.

“எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணிய ராகப் பெறின்”

என்னும் வள்ளுவர் வாக்கு அவரது வாழ்க்கையின் வேதவாக்கு ஆயிற்று.

ஸ்ரீஹரிகோட்டாவில் முதல் செயற்கை கோள் இந்திய விஞ்ஞானிகள் குழுவோடு கலாமால் வடிவமைக்கப்படுகிறது. விண்ணை நோக்கிய அறிவியல் பந்தயத்தில் இந்தியாவா? அத்துனை அறிவு இந்தியருக்கு உண்டா? என்று எள்ளலுடன் கவனித்த உலகுக்கு முன்னர், ஆர்யபட்டா விண்ணில் சீறிப் பாய்ந்தது; அடுத்த ஐந்தாம் நொடியில் கடல் தண்ணீரில் விழுந்து தற்கொலை செய்து கொண்டது. ஆர்யபட்டாவிற்கு நாட்டுப்பற்று அதிகம். அதனால்தான் விண்ணை நோக்கிச் செல்லாமல், அன்னை மண்ணை நோக்கித் திரும்பிவிட்டது என்று எல்லோரும் எள்ளி நகையாடினர். சோர்ந்து போனாரா அப்துல் கலாம்? தோல்விதான் வெற்றிக்கு முதற்படி என்று கூறும் வகையில் மீண்டும் 3 வாரத்திற்குள் புதிதாக மற்றொரு செயற்கை கோளை உருவாக்கினார்; அக்னி என அதற்கு பெயர் சூட்டினார். ‘ஏன் இந்தப் பெயர்?’ என்று பத்திரிகையாளர்கள் கேட்டபோது, ‘ஆர்யபட்டா’ புறப்பட்ட வேகத்தில் கவிழ்ந்து விழுந்துவிட்டது. அப்படிப்பட்ட அவலம் இனி வரல் ஆகாது. தீப்பந்தத்தை கவிழ்த்தாலும் நிமிர்ந்து தான் எரியும். இந்த அக்னியும் கவிழ்த்தாலும் நிமிர்ந்து விண்ணோக்கி செல்லும் என்ற நம்பிக்கையில் ‘அக்னி’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது என்றார். பெயருக்கேற்ப, வானில் சீறிப் பாய்ந்து சென்றது அக்னி. உலகமே மெய்மறந்து கைதட்டி மகிழ்ந்தது. உலக வரலாற்றில் நாயகராய் மிளிர்ந்தார் அப்துல்கலாம். அவரது தன்னம்பிக்கையோடு கூடிய முயற்சி தான் அவருக்கு வெற்றியைத் தந்தது.

இதைத்தான் விவேகானந்தர் சொன்னார்:

‘உலக வரலாறு என்பது கடைசி வரை தன்னம்பிக்கையோடு இருந்து விடாமுயற்சி செய்து சாதித்துக் காட்டுகிற சாதனையாளர்களின் வரலாறு தான் உலக வரலாறு’.

- முனைவர் நிர்மலா மோகன், முன்னாள் பேராசிரியர், காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம்.

Next Story