தங்கம் விலை உயர்ந்து வருவதால் உலக அளவில், கோல்டு ஈ.டி.எப். திட்டங்களில் முதலீடு அதிகரிப்பு


தங்கம் விலை உயர்ந்து வருவதால் உலக அளவில், கோல்டு ஈ.டி.எப். திட்டங்களில் முதலீடு அதிகரிப்பு
x
தினத்தந்தி 14 March 2020 10:01 AM GMT (Updated: 14 March 2020 10:01 AM GMT)

பரஸ்பர நிதி துறையின் தங்க பரஸ்பர நிதி திட்டம் தங்கத்தை வாங்காமலேயே அதில் முதலீடு செய்யும் வாய்ப்பை வழங்குகிறது.

ங்கம் விலை உயர்ந்து வருவதால் உலக அளவில், கோல்டு ஈ.டி.எப். எனும் தங்க பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீடு அதிகரித்துள்ளது.

தங்கத்தில் முதலீடு

பரஸ்பர நிதி துறையின் தங்க பரஸ்பர நிதி திட்டம் தங்கத்தை வாங்காமலேயே அதில் முதலீடு செய்யும் வாய்ப்பை வழங்குகிறது. தங்க நாணயங்கள், கட்டிகள், நகைகள் போன்றவற்றை நேரில் வாங்கும்போது அதன் தரத்தை மதிப்பீடு செய்வது சிரமம். மேலும் அவற்றை பாதுகாத்து வைப்பதில் இடர்பாடுகள் உள்ளன. அதே சமயம் தங்க பரஸ்பர நிதி திட்டங்கள் வாயிலாக முதலீடு செய்யும்போது இதுபோன்ற சிக்கல்கள் கிடையாது.

இந்த திட்டத்தின் கீழ் முதலீடு செய்யும் தொகைக்கு ஏற்ப முதலீட்டாளர்களுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் யூனிட்டுகள் வழங்கப்படும். அவை பங்குச்சந்தைகளிலும் பட்டியலிடப்படுகின்றன. எனவே அந்த யூனிட்டுகளை பங்குகளை போன்று எளிதில் வாங்கவும், விற்பனை செய்யவும் முடியும்.

சர்வதேச அளவில், பிப்ரவரி மாதத்தில் கோல்டு ஈ.டி.எப். திட்டங்கள் 490 கோடி டாலரை (சுமார் ரூ.37,000 கோடி) ஈர்த்துள்ளன. இதனால் இப்பிரிவில் பரஸ்பர நிதி துறையினர் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு 4.4 சதவீதம் அதிகரித்துள்ளது. வட அமெரிக்காவில் சொத்து மதிப்பு 2.9 சதவீதம் உயர்ந்து இருக்கிறது. ஐரோப்பாவில் 2.8 சதவீதமும், சீனாவில் 9.5 சதவீதமும் அதிகரித்து உள்ளது. ஆசியாவில் இத்திட்டங்கள் 36.80 கோடி டாலரை ஈர்த்துள்ளன. ஐரோப்பாவில் 370 கோடி டாலர் ஈர்க்கப்பட்டுள்ளது. வட அமெரிக்காவில் 370 கோடி டாலர் முதலீடு செய்யப்பட்டுள்ளது. ஆசியாவில் கோல்டு ஈ.டி.எப். திட்டங்களில் மொத்தம் 7,830 கோடி டாலர் நிர்வகிக்கப்படுகிறது. ஐரோப்பாவில் நிர்வகிக்கும் சொத்து 7,180 கோடி டாலராக உள்ளது. வட அமெரிக்காவில் 7,830 கோடி டாலராக இருக்கிறது.

7 ஆண்டுகளுக்குப் பின்...

இந்தியாவில், ஜனவரி மாதத்தில் தங்க பரஸ்பர நிதி திட்டங்கள் ரூ.202 கோடியை ஈர்த்தன. 7 ஆண்டுகளுக்குப் பின் அதுவே அதிகபட்ச முதலீடாக இருந்தது. அதற்கு முன் 2012-ஆம் ஆண்டில் ரூ.474 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டது. இந்நிலையில், பிப்ரவரி மாதத்தில் ரூ.1,483 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது.

Next Story