பொன்விழா காணும் தமிழ்த்தாய் வாழ்த்து


பொன்விழா காணும் தமிழ்த்தாய் வாழ்த்து
x
தினத்தந்தி 15 March 2020 9:00 AM GMT (Updated: 15 March 2020 9:00 AM GMT)

“நீ ராருங் கடலுடுத்த” என தொடங்கும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் தமிழ் மொழியை வாழ்த்தி வணக்கம் செலுத்தும் பாடல் ஆகும்.

“நீ ராருங் கடலுடுத்த” என தொடங்கும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் தமிழ் மொழியை வாழ்த்தி வணக்கம் செலுத்தும் பாடல் ஆகும். இப்பாடல் அரசு விழாக்கள், பள்ளி கல்வி நிறுவன விழாக்கள், பள்ளிகளின் காலை இறைவணக்க கூட்டம் முதலான நிகழ்வுகளின் தொடக்கத்தில் பாடப்படுகிறது. இப்பாடல் 1970-ம் ஆண்டு முதல் பாடப்பட்டு வருவதால், நம் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு பொன்விழா ஆண்டாக இந்த ஆண்டு(2020) விளங்குகிறது.

1967-ம் ஆண்டு தமிழ்நாட்டு வரலாற்றின் ஒரு திருப்பு மையமாக தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றது எனலாம். தமிழ் எழுச்சி, தமிழ் மறுமலர்ச்சி ஆகியவையே தி.மு.க.வின் தலையாய கொள்கையாக திகழ்ந்ததால், அதற்கேற்ப பல மாற்றங்களை அறிஞர் அண்ணா அறிமுகப்படுத்தினார். அதுவரை தமிழ்நாட்டு அரசின் சின்னத்தில் குறிக்கோள் வாசகமாக நிலவி வந்த “சத்யமேவ ஜெயதே” என்னும் வடமொழித் தொடர் “வாய்மையே வெல்லும்” என தமிழில் மாற்றப்பட்டது. சென்னை மாகாணம், “தமிழ்நாடு” என பெயர்மாற்றம் அடைந்தது. மந்திரி என்பது “அமைச்சர்” என்றும், கனம் என்ற சொல் “மாண்புமிகு” எனவும், சபாநாயகர் என்பது “அவைத்தலைவர்” ஆகவும், இப்படி எல்லா பிறமொழி சொற்களும் அழகுமிக்க தமிழ்ச்சொற்களாக உருமாற்றம் அடைந்து பொலிந்தன.

அரசு விழாக்களின் இறைவணக்க பாடலாக பல்வேறு பாடல்கள் அதுவரை பாடப்பட்டு வந்தன. அவற்றுள் பல பாடல்கள் பிறமொழி பாடல்களாய் இருந்தன. தமிழ்நாடு அரசு விழாக்களில் பிறமொழி பாடல்களை தவிர்க்கும் வகையிலும், சமய சார்பற்ற அரசின் நோக்கிற்கேற்ப சமய சார்பினை தவிர்க்கும் வகையிலும் தமிழ் வாழ்த்து பாடல் ஒன்றினை அறிமுகப்படுத்த அண்ணா விரும்பினார். பேராசிரியர் பெ.சுந்தரம் பிள்ளை எழுதி 1891-ம் ஆண்டில் வெளியிடப்பட்ட மனோன்மணியம் என்னும் நாடகநூலில் அமைந்த “நீராருங் கடலுடுத்த” என தொடங்கும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் இதற்கு பொருத்தமானதாக அவர் கருதினார். இந்த பாடல் கரந்தை தமிழ்ச்சங்கத்தின் மூன்றாம் ஆண்டு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலாக (1914-ல்) பாடப்பட்டு, அதன்பின் எல்லா விழாக்களிலும் பாடப்பட்டு வந்துள்ளதாக கரந்தை ஜெயகுமார் தமது ஆய்வுரையில் குறித்துள்ளார்.

இப்பாடலை ‘தமிழ்த்தெய்வ வணக்க பாடல்’ என்றே கரந்தை தமிழ் சங்கம் போற்றியதாகவும் தெரிகிறது. இந்த பாடலையும் கரந்தை கவியரசு வேங்கடாசலம் பிள்ளை இயற்றிய ஒரு பாடலையும் அண்ணாவின் பரிசீலனைக்கு அனுப்பியுள்ளனர். அண்ணா “‘நீராருங் கடலுடுத்த” என தொடங்கும் மனோன்மணீயம் சுந்தரனாரின் பாடலை தேர்வுசெய்துள்ளார். எனினும் அது குறித்த அரசாணை பிறப்பிக்கும் வாய்ப்பை அளிக்காமல் காலம் அவர் இன்னுயிரை கவர்ந்துவிட்டது.

அண்ணாவுக்குப் பின் ஆட்சிப் பொறுப்பேற்ற கலைஞர் மு.கருணாநிதி இதற்கான அரசு ஆணையைப் பிறப்பித்தார். 23.11.1970-ம் நாளன்று, மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை இயற்றிய “நீராருங் கடலுடுத்த” என்னும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை, அரசு நிகழ்ச்சிகளில் பாட வேண்டும் என, அரசு பொதுத்துறையின் சார்பாக அரசாணை வெளியிட பட்டது. இப்பாடலைச் சிறந்த முறையில் இசையமைத்து பாடகர்களுடன் தாமும் பாடிய எம்.எஸ்.விசுவநாதன் இப்பாடலின் மூலம் இறவா புகழ் பெற்றுள்ளார். தொடர்ந்து ஐம்பது ஆண்டுகளாக, எந்த ஆட்சி அமைந்தாலும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் அரசு விழாக்களிலும், அரசு சார்பு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களின் விழாக்களிலும் விழா நிறைவின்போது பாடப்பெற்று வருகிறது. இதற்கு காரணம் தமிழர் உள்ளத்தில் உறுதியாக அமைந்துள்ள தமிழ்ப்பற்றும் தமிழ் உணர்வுமே எனலாம்.

மாநில கீதம் என்பது தேசிய கீதத்துக்கு சமமான சிறப்பும், மதிப்பும் வாய்ந்தது. விழா நிறைவில் தேசிய கீதத்துக்கு எழுந்து நிற்பதை போன்று, விழா தொடக்கத்தில் மாநில கீதத்துக்கு எழுந்து நிற்க வேண்டும். இந்திய தேசியம் என்பது பல மொழிவழி தேசியங்கள், பண்பாட்டுவழி தேசியங்களின் ஒருங்கிணைவே ஆகும்.

தமிழ்நாட்டில் “நீராருங் கடலுடுத்த” மாநில கீதமாக விளங்குவதை போன்று, மேலும் ஆறு மாநிலங்களில் மாநில கீதம் அரசு விழாக்களில் நடைமுறையில் இருப்பது பலருக்கு தெரியாது. காந்தியடிகள் மொழிவழி மாநிலங்களாக இந்தியா பிரிக்கப்பட வேண்டும் என முன்மொழிவதற்கு முன்னே 1936 ஏப்ரல் முதல் நாளில் தனிமாநிலமாக அமைந்த ஒடிசா “பந்தே உத்கல் ஜன்னி” என தொடங்கும் பாடலை தங்களது மாநில கீதமாக கொண்டது. மக்கள் செல்வாக்கு பெற்ற இந்த மாநில கீதம் 1990-ல் பிஜு பட்நாயக் ஆட்சியில் சட்டபேரவையின் நிறைவில் பாடப்படுவது கட்டாயம் ஆக்கப்பட்டது. அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் என்று அரசாணை வெளியிடப்பட்டது.

“ஓ மு அப்னா தேஷ்” என தொடங்கும் பாடல் அசாம் மாநிலத்தின் மாநில கீதம் ஆகும். “ஜெய பாரத ஜனனிய தனுஜதே” என தொடங்கும் பாடல் கர்நாடகா மாநிலத்தின் மாநில கீதம் ஆகும். இவை அரசு ஆணை பெற்றவை. அரசு நடைமுறையில் இல்லாவிட்டாலும் மக்களால் போற்றபட்டு விழாக்களில் பாடப்பட்டுவரும் மாநில கீதங்களும் குறிப்பிடத்தக்கன.

“‘மா தெலுகு தல்லிகி” என்னும் ஆந்திர மாநில கீதமும் “ஜெய் ஜெய் காரவி குஜராத்” என தொடங்கும் குஜராத் மாநில கீதமும், “மேரா மத்தியப் பிரதேஷ்” என தொடங்கும் மத்திய பிரதேச மாநில கீதமும் “ஜெய ஜெய மஹராஷ்ட்ர மாசா” என தொடங்கும் மகாராஷ்ட்ர மாநில கீதமும் அந்தந்த மாநில மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றவை. இவற்றுக்கு அரசு ஆணை இல்லை என கூறி, அந்த மாநிலங்களுக்கு செல்பவர்கள் இப்பாடல்களுக்கு மதிப்பும், மரியாதையும் வழங்க தவறினால் பெரும் துன்பத்தையே சந்திக்க நேரிடும்.

மக்கள் உணர்வுக்கு ஓர் எடுத்துக்காட்டாக தெலுங்கானா மாநில கீதத்தை குறிப்பிடலாம். இந்தியாவின் 29-வது மாநிலமாக அண்மையில் உருவாகிய தெலுங்கானா மாநிலம் தனது மாநில கீதமாக “ஜெய ஜெய ஹே தெலுங்கானா ஜனனி ஜன கேதனம்” என தொடங்கும் பாடலை அறிவித்து அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இந்த பாடலை இயற்றிய அந்தே சிரீ என்பவர் பள்ளிக்கல்வி கூட பெறாதவர். எனினும் இப்பாடல் தெலுங்கானா மாநில பிரிவினை போராட்டத்துக்கான போர் முழக்கமாக, லட்சக்கணக்கான மக்கள் உள்ளத்தில் எழுச்சியூட்டி அவர்களால் உணர்வுடன் முழங்கப்பெற்ற பாடல் ஆகும்.

மாநில உணர்வுகளுக்கு மதிப்பளித்து சாதி, சமய வேறுபாடின்றி மக்களை ஒன்றுபடுத்துவதில் மாநில கீதங்களின் பங்களிப்பை குறைத்து மதிப்பிடமுடியாது. அவ்வகையில் 50 ஆண்டுகள் அல்ல; 500 ஆண்டுகள் ஆனாலும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலின் மதிப்பை பின்வருகின்ற தலைமுறைகள் போற்றும் என்பதில் ஐயமில்லை.

பேராசிரியர் மறைமலை இலக்குவனார் (தமிழக அரசின் திரு.வி.க.விருது பெற்றவர்).

Next Story