கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி ஏன்?


கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி ஏன்?
x
தினத்தந்தி 15 March 2020 9:52 AM GMT (Updated: 15 March 2020 9:52 AM GMT)

சீனாவில் யாரோ ஒருவர் தொண்டையில் சளி ஏற்பட்டு இரும, இப்போது பல்வேறு நாடுகளிலும் ஏராளமான பேர் இருமிக்கொண்டு இருக்கிறார்கள்.

“தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெரி கட்டும்” என்பார்கள்.

இது ஒரு சொலவடைதான் என்றபோதிலும், உலகமே ஒரு குடும்பமாக சுருங்கிவிட்ட நிலையில், எல்லாமே சாத்தியமாகத்தான் இருக்கிறது. பக்கத்து வீட்டில் என்ன நடந்தால் என்ன, எனக்கு கவலை இல்லை என்று யாரும் இருந்துவிட முடியாது.

சீனாவில் யாரோ ஒருவர் தொண்டையில் சளி ஏற்பட்டு இரும, இப்போது பல்வேறு நாடுகளிலும் ஏராளமான பேர் இருமிக்கொண்டு இருக்கிறார்கள். சீனாவின் உகான் நகரில் உருவான கொரோனா நோய்க்கிருமி ஒவ்வொரு நாடாக பரவி இன்று உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.

இப்படித்தான் ஒரு நாட்டில் ஏற்படும் பிரச்சினையாக இருந்தாலும் சரி; அல்லது இரு நாடுகளுக்கும் இடையேயான பிரச்சினையாக இருந்தாலும் சரி; அது மற்ற நாடுகளையும் பாதிக்கிறது.

இன்றைய காலகட்டத்தில் பெட்ரோலிய பொருட்களின் தேவை மிகவும் அத்தியாவசியமாகி, தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டால் நாடே முடங்கிவிடும். பொருட்களின் சப்ளை பாதிக்கப்பட்டு விலைவாசி கடுமையாக உயர்ந்துவிடும்.

கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளில் சவுதி அரேபியாவும், ரஷியாவும் முக்கியமான நாடுகள் ஆகும்.

கச்சா எண்ணெய் உற்பத்தி விவகாரத்தில் மேற்கு ஆசிய நாடான சவுதி அரேபியாவுக்கும், கிழக்கு ஐரோப்பிய நாடான ரஷியாவுக்கும் ஏற்பட்டுள்ள மோதல் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சிக்கு வழிவகுத்து உள்ளது.

சவுதி அரேபியா தனது நெருங்கிய நட்பு நாடான அமெரிக்காவின் எண்ணெய் உற்பத்தி நிறுவனத்துக்கு ஏற்பட்டுள்ள இழப்பை ஈடுகட்ட உதவும் வகையில் கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க முடிவு செய்தது.

இதுதொடர்பாக சவுதி அரேபியா தலைமையிலான கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்புக்கும் (‘ஓபெக்’) ரஷியாவுக்கும் இடையே கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கும் முடிவில் இருந்து பின்வாங்கப்போவது இல்லை என்று ரஷியா அறிவித்ததே இதற்கு காரணம் ஆகும்.

ரஷியாவின் இந்த முடிவு சவுதி அரேபியாவுக்கு அதிர்ச்சியையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது. கச்சா எண்ணெயின் உற்பத்தி அதிகரித்தால் விலை தானாக குறையும். எனவே ரஷியாவின் வழியிலேயே சென்று அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தாமும் கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கப்போவதாக அறிவித்தது.

கச்சா எண்ணெய் உற்பத்தியை ஒரு நாளைக்கு 1 கோடியே 20 லட்சம் பீப்பாய்களில் இருந்து 1 கோடியே 30 லட்சம் பீப்பாய்களாக அதிகரிக்குமாறு எரிசக்தி துறை அமைச்சகம் உத்தரவிட்டு இருப்பதாக சவுதி அரேபியாவின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான அராம்கோ தெரிவித்து உள்ளது.

சவுதி அரேபிய அரசு வருமானத்தின் பெரும்பகுதி கச்சா எண்ணெய் ஏற்றுமதியை சார்ந்தே இருக்கிறது. இந்த நிலையில் ரஷியாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அந்த நாடு கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிப்பது அதற்கு பெரும் வருவாய் இழப்பை ஏற்படுத்தும்.

கொரோனா நோய்க்கிருமி தாக்கம் காரணமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் தேவை கணிசமாக குறைந்துள்ள நிலையில், சவுதி அரேபியா கச்சா எண்ணெய் விலையை குறைத்து உற்பத்தியை அதிகரிப்பது அந்த நாட்டுக்கு பொருளாதார சிக்கலை உண்டாக்கும் ஆபத்து உள்ளது.

சவுதி அரேபியாவின் கோரிக்கையை ஏற்று கச்சா எண்ணெய் உற்பத்தியை ரஷியா குறைக்க முன்வந்தால், சவுதி அரேபியாவும் உற்பத்தி குறைப்பில் ஈடுபடும். அப்படி உற்பத்தி குறையும் பட்சத்தில், விலை அதிகரிக்கும். இது இழப்பை சந்தித்து வரும் அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள் அதில் இருந்து மீள வழிவகுக்கும்.

சவுதி அரேபியாவின் முடிவு பற்றி கருத்து தெரிவித்த ரஷிய எரிசக்தி துறை மந்திரி அலெக்சாண்டர் நோவாக், பேச்சுவார்த்தைக்கான கதவுகள் மூடப்படவில்லை என்றும், எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நாடுகள் கூட்டமைப்புடன் எதிர்காலத்தில் உடன்பாடு ஏற்படலாம் என்றும் கூறினார்.

சவுதி அரேபியா-ரஷியா இடையேயான இந்த வர்த்தக போரின் காரணமாக கச்சா எண்ணெய் விலை பெருமளவு வீழ்ச்சி அடைந்து உள்ளது. இதனால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை கணிசமாக குறைந்து இருக்கிறது. ஆனால் கச்சா எண்ணெய் விலை குறைந்த அளவுக்கு பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைக்கவில்லை என்று குற்றம்சாட்டியுள்ள எதிர்க்கட்சிகள், விலை குறைப்பின் பயனை மக்களுக்கு அரசு வழங்க வேண்டும் என்று வற்புறுத்தி உள்ளன.

இந்தியாவில் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலையை நிர்ணயிக்கும் அதிகாரம் முதலில் மத்திய அரசிடம் இருந்தது. பின்னர் அந்த பொறுப்பை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களிடமே மத்திய அரசு ஒப்படைத்துவிட்டது. முன்பெல்லாம் 15 நாட்களுக்கு ஒரு முறை விலையில் மாற்றம் செய்யப்பட்டது. இப்போது தங்கத்தைப் போல், பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் மாற்றி அமைக்கின்றன.

சவுதி அரேபியா-ரஷியா இடையேயான உற்பத்தி போட்டி காரணமாக கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 33.38 டாலர் (ரூ.2,480) என்ற அளவுக்கு வெகுவாக குறைந்து உள்ளது. ஆனால் அதற்கு ஏற்றபடி பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைக்கவில்லை. கச்சா எண்ணெய் விலை உயரும் போது அதே விகிதாசாரத்தில் பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்தும் எண்ணெய் நிறுவனங்கள், கச்சா எண்ணெய் விலை குறையும் போது மட்டும் அதே விகிதாசார அளவுக்கு குறைப்பது இல்லை.

பெட்ரோல், டீசல் மீது மத்திய, மாநில அரசுகள் தனித்தனியாக வரிகளை விதிக்கின்றன. அந்த வகையில் கிட்டத்தட்ட 50 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. இந்த வரியின் மூலம் அவற்றுக்கு கணிசமான வருமானம் கிடைக்கிறது. அதை இழக்க இரு தரப்புமே தயாராக இல்லை. அதனால்தான் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பெருமளவு வீழ்ச்சி அடைந்தாலும், அந்த அளவுக்கு பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படுவது இல்லை.

சர்வதேச சந்தையில் விலை உயரும் போது உடனடியாக பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்தும் அரசு, விலை குறையும் போது அதன் முழுபலனையும் வாடிக்கையாளர் களுக்கு வழங்காததற்கு இதுதான் காரணம் ஆகும்.

பெட்ரோல், டீசல் தவிர்க்க முடியாததாகிவிட்டதால், வாகன ஓட்டிகளும் முணுமுணுத்துக் கொண்டே வேறு வழியின்றி சகித்துக்கொள்ளவேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்படு கிறார்கள்.

முதல் 5 நாடுகள்

2018-ம் ஆண்டின் நிலவரப்படி உலகில் ஒரு நாளைக்கு உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெயின் அளவு 8 கோடி பீப்பாய்கள் என்றும், இது 2050-ம் ஆண்டுக்குள் 10 கோடியே 70 லட்சம் பீப்பாய்களாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக எரிசக்தி தகவல் நிர்வாக அமைப்பு (இ.ஐ.ஏ.) தெரிவித்து உள்ளது.

உலகில் கச்சா எண்ணெய் உற்பத்தியில் முதல் 5 இடங்களில் இருக்கும் நாடுகளில் 2018-ம் ஆண்டின் நிலவரப்படி ஒரு நாளைக்கு எவ்வளவு பீப்பாய் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யப்பட்டது? என்ற புள்ளிவிவரத்தை அந்த அமைப்பு வெளியிட்டு உள்ளது.

அதன்படி உலகிலேயே கச்சா எண்ணெய் உற்பத்தியில் முன்னணி வகிக்கும் நாடு என்ற பெருமையை பெற்ற அமெரிக்கா கடந்த 2018-ம் ஆண்டில் ஒரு நாளைக்கு 17.87 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெயை உற்பத்தி செய்து இருக்கிறது. இது உலக கச்சா எண்ணெய் உற்பத்தியில் 18 சதவீதம் ஆகும். அதற்கு முந்தைய ஆண்டான 2017-ல் அமெரிக்காவின் கச்சா எண்ணெய் உற்பத்தி ஒரு நாளைக்கு 1 கோடியே 56 லட்சம் பீப்பாயாக இருந்தது.

கச்சா எண்ணெய் உற்பத்தியில் இரண்டாவது இடத்தில் இருந்த ரஷியாவை 2012-ம் ஆண்டில் பின்னுக்கு தள்ளிவிட்டு அந்த இடத்துக்கு வந்த அமெரிக்கா, அதற்கு அடுத்த ஆண்டில் (2013) மேற்கு ஆசிய நாடான சவுதி அரேபியாவை பின்னுக்கு தள்ளிவிட்டு முதல் இடத்தை பிடித்தது.

உலக கச்சா எண்ணெய் உற்பத்தியில் சவுதி அரேபியாவின் பங்கு 12 சதவீதம். இங்கு ஒரு நாளைக்கு 1 கோடியே 24 லட்சத்து 20 ஆயிரம் பீப்பாய்கள் உற்பத்தி செய்யப்பட்டன. அதாவது இந்த நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கச்சா எண்ணெயின் பங்களிப்பு 42 சதவீதம் ஆகும். சவுதி அரேபியாவின் ஏற்றுமதி வருவாயில் 90 சதவீதம் பெட்ரோலிய பொருட்கள் மூலமே கிடைக்கிறது.

இங்குள்ள எண்ணெய் வயல்களில் கவார், சபானியா, குரைய்ஸ், மனிபா, ஷைபா, காதிப், குர்சானியா, ஜூலுப், அப்காயிப் ஆகியவை முக்கியமானவை ஆகும்.

மூன்றாவது இடத்தில் இருக்கும் ரஷியாவில் ஒரு நாளைக்கு 1 கோடியே 14 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் உற்பத்தியாகிறது. இது உலக உற்பத்தியில் 11 சதவீதம் ஆகும். இங்கு மேற்கு சைபீரியா, வோல்கா-ஊரல், கிரஸ்னோயாஸ்க், சகாலின், கோமி குடியரசு, அகால்கெல்ஸ்க், இர்குர்ட்ஸ், யாகுதியா ஆகிய இடங்களில் எண்ணெய் வயல்கள் உள்ளன. இதில் மேற்கு சைபீரியாவில் உள்ள பிரியோப்ஸ்கோயே, சமோட்லார் எண்ணெய் வயல்களில் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. சோவியத் யூனியனாக இருந்த ரஷியா பிளவுபட்ட பிறகு அங்கு எண்ணெய் உற்பத்தி தனியார் மயமாக்கப்பட்டது. பின்னர் சில ஆண்டுகளில் எண்ணெய் உற்பத்தி அரசின் வசம் கொண்டு வரப்பட்டது. ரோஸ்னெப்ட், சர்கும்னெப்டேகாஸ், கஸ்புரோம்னெப்ட், டாட்னெப்ட் ஆகியவை இங்குள்ள முக்கியமான எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் ஆகும்.

நான்காவது இடத்தில் உள்ள கனடாவின் எண்ணெய் உற்பத்தி 2018-ம் ஆண்டின் புள்ளிவிவரப்படி ஒரு நாளைக்கு 52 லட்சத்து 70 ஆயிரம் பீப்பாய்கள். இது உலகின் மொத்த உற்பத்தியில் 5 சதவீதம் ஆகும். அமெரிக்காவின் அண்டை நாடாக விளங்கும் கனடா 2050-ம் ஆண்டுக்குள் எண்ணெய் உற்பத்தியை இரு மடங்காக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கு அல்பெர்டா, கனடாவின் மேற்கு பகுதியில் உள்ள செடிமென்டரி பள்ளத்தாக்கு, அட்லாண்டிக் கடலில் உள்ள எண்ணெய் கிணறு ஆகிய இடங்களில் கச்சா எண்ணெய் உற்பத்தி நடைபெறுகிறது.

இந்தியாவின் அண்டை நாடான சீனா, எண்ணெய் உற்பத்தியில் 5-வது இடத்தில் உள்ளது. 2018-ம் ஆண்டின் நிலவரப்படி இங்கு ஒரு நாளைய கச்சா எண்ணெய் உற்பத்தியின் அளவு 48 லட்சத்து 20 ஆயிரம் பீப்பாய்கள். இது உலக உற்பத்தியில் 5 சதவீதம் ஆகும். சீனாவின் கச்சா எண்ணெய் உற்பத்தியில் வடகிழக்கு மற்றும் வடக்கு மத்திய பிராந்தியங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. பெரிய நாடு மட்டுமின்றி மக்கள் தொகையும் அதிகம் என்பதால் பெட்ரோலிய பொருட்களின் தேவையை சமாளிக்க சீனா பெருமளவு இறக்குமதியை சார்ந்தே இருக்கிறது. கடந்த ஆண்டில் மட்டும் சீனா 1 கோடியே 27 லட்சத்து 90 ஆயிரம் பீப்பாய் எண்ணெயை பயன்படுத்தி இருக்கிறது.

இந்த பட்டியலில் ஈராக் (5 சதவீதம்) 6-வது இடத்திலும், ஈரான் (4 சதவீதம்) 7-வது இடத்திலும், ஐக்கிய அரபு அமீரகம் (4 சதவீதம்) 8-வது இடத்திலும், பிரேசில் (3 சதவீதம்) 9-வது இடத்திலும், குவைத் (3 சதவீதம்) 10-வது இடத்திலும் உள்ளன.

உலகில் சப்ளையாகும் கச்சா எண்ணெயில் 71 சதவீதம் மேற்கண்ட 10 நாடுகளில் உற்பத்தியாவது குறிப்பிடத்தக்கது ஆகும்.

இந்தியாவின் நிலை என்ன?

நம் நாட்டில் கச்சா எண்ணெய் குறைந்த அளவிலேயே கிடைக்கிறது. இந்தியாவில் முதன் முதலாக, அசாம் மாநிலம் திக்போய் நகரின் அருகே பூமிக்கு அடியில் கச்சா எண்ணெய் இருப்பது கடந்த 1889-ம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. அசாம் மட்டுமின்றி, மும்பை அருகே அரபிக் கடல், கிருஷ்ணா-கோதாவரி நதிகளின் படுகை ஆகிய இடங்களிலும் எண்ணெய் துரப்பண பணிகள் நடைபெறுகின்றன.

2018-ம் ஆண்டின் நிலவரப்படி, உலகில் அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளில் 3-வது இடத்தில் இந்தியா உள்ளது. இந்த விவகாரத்தில் முதல் இரண்டு இடங்களில் அமெரிக்காவும், சீனாவும் உள்ளன.

நமக்கு தேவையான பெட்ரோலிய பொருட்களில் 82 சதவீதம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, எத்தனால் எரிபொருள் உற்பத்தி ஆகியவற்றின் மூலம் 2022-ம் ஆண்டுக்குள் கச்சா எண்ணெய் இறக்குமதியை 67 சதவீதமாக குறைக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.

2017-2018-ம் நிதி ஆண்டில் இந்தியாவில் பயன்படுத்தப்பட்ட பெட்ரோலிய பொருள்களின் அளவு 20 கோடியே 49 லட்சம் டன். அந்த ஆண்டில் பெட்ரோலிய பொருட்களின் தேவையை பூர்த்தி செய்ய 82.8 சதவீதம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது. இதற்காக செலவிடப்பட்ட அன்னிய செலாவணி 63.305 பில்லியன் டாலர் (சுமார் ரூ.6,300 கோடி) ஆகும்.

ஈராக், சவுதி அரேபியா, ஈரான், நைஜீரியா, ஐக்கிய அரபு அமீரகம், வெனிசூலா, குவைத், மெக்சிகோ, அங்கோலா, அமெரிக்கா, மலேசியா, ஓமன், பிரேசில், கத்தார், ரஷியா ஆகிய நாடுகளில் இருந்து இந்தியா கச்சா எண்ணெயை இறக்குமதி செய்கிறது. ஈராக்கில் இருந்து அதிக அளவில் இறக்குமதி நடைபெறுகிறது.

ஈரானில் இருந்து 1,300 கோடி டாலர் அளவுக்கு இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வந்தது. அந்த நாட்டின் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்ததை தொடர்ந்து, ஈரானில் இருந்து தற்போது குறைந்த அளவிலேயே இறக்குமதி செய்யப்படுகிறது.

ஏற்றுமதியில் சவுதி அரேபியா முன்னணி

கச்சா எண்ணெய் உற்பத்தியில் சவுதி அரேபியா 2-ம் இடத்தில் இருந்தாலும், ஏற்றுமதியில் முதல் இடத்தில் உள்ளது. உலக அளவில் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் சவுதி அரேபியாவின் பங்கு 16.1 சதவீதம் ஆகும். அமெரிக்கா அதிக அளவு கச்சா எண்ணெய் உற்பத்தி செய்தாலும், அதன் பெரும்பகுதியை தனது சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்திக்கொள்கிறது. வெளிநாடுகளுக்கு குறைந்த அளவே ஏற்றுமதி செய்கிறது.

ஏற்றுமதியில் ரஷியா (11.4 சதவீதம்) இரண்டாம் இடத்திலும், ஈராக் (8.7 சதவீதம்) மூன்றாம் இடத்திலும், கனடா (5.9 சதவீதம்) நான்காம் இடத்திலும், ஐக்கிய அரபு அமீரகம் (5.2 சதவீதம்) ஐந்தாம் இடத்திலும், குவைத் (4.6 சதவீதம் ) ஆறாம் இடத்திலும், ஈரான் (4.5 சதவீதம்) ஏழாம் இடத்திலும், அமெரிக்கா (4.3 சதவீதம்) எட்டாம் இடத்திலும், நைஜீரியா (3.8 சதவீதம்) ஒன்பதாவது இடத்திலும், கஜகஸ்தான் (3.3 சதவீதம்) பத்தாம் இடத்திலும் உள்ளன.

முதல் இடத்தில் அமெரிக்கா

கச்சா எண்ணெய் உற்பத்தியில் முதல் இடத்தில் இருக்கும் அமெரிக்காதான், பெட்ரோலிய பொருட்களை உபயோகப்படுத்துவதிலும் முன்னணியில் இருக்கிறது. உலகில் உற்பத்தியாகும் பெட்ரோலிய பொருட்களில் 20 சதவீதத்தை அமெரிக்கா பயன்படுத்துவதாக 2017-ம் ஆண்டின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த பட்டியலில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக சீனா (14 சதவீதம்) இரண்டாவது இடத்திலும், இந்தியா (4 சதவீதம்) மூன்றாவது இடத்திலும் உள்ளன.

இதற்கு அடுத்த இடங்களில் ஜப்பான், ரஷியா, சவுதி அரேபியா, பிரேசில், தென்கொரியா, ஜெர்மனி, கனடா நாடுகள் உள்ளன.

உலகில் உற்பத்தியாகும் கச்சா எண்ணெயில் 60 சதவீதத்தை மேற்கண்ட 10 நாடுகளும் பயன்படுத்துகின்றன.

Next Story