கனவுகண்ட வாழ்க்கை கலைந்துபோகவில்லை..


கனவுகண்ட வாழ்க்கை கலைந்துபோகவில்லை..
x
தினத்தந்தி 15 March 2020 10:23 AM GMT (Updated: 15 March 2020 10:23 AM GMT)

பத்து மாதங்கள் குழந்தையை வயிற்றில் சுமக்கும்போதே, பெரும்பாலான தாய்மார்கள் அதோடு சேர்த்து சில கனவுகளையும் வளர்க்கிறார்கள்.

த்து மாதங்கள் குழந்தையை வயிற்றில் சுமக்கும்போதே, பெரும்பாலான தாய்மார்கள் அதோடு சேர்த்து சில கனவுகளையும் வளர்க்கிறார்கள். பெற்றோரின் அந்த கனவுகளை நிறைவேற்றி அவர்களுக்கு சர்வதேச அளவில் பெயரையும், புகழையும் வாங்கிக்கொடுக்கிறார்கள், சில தங்க மகள்கள். அதில் குறிப்பிடத்தக்கவர் இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து. புசரல வெங்கிட சிந்து என்பது அவரது முழுப்பெயர். பெற்றோர்: பி.வி.ரமணா- விஜயா. இவர்கள் இருவரும் கைப்பந்து விளையாட்டு சாதனையாளர்கள். ரமணா ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய அணிக்காக விளையாடி வெண்கல பதக்கம் வென்றவர். இவர்கள் ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் வசிக்கிறார்கள்.

இந்த தம்பதிகளின் மூத்த மகள் டாக்டர் திவ்யா! இரண்டாவதாக தாய்மையடைந்த போதே விஜயா வயிற்றில் குழந்தையையும், மனதில் கனவுகளையும் சுமந்திருக்கிறார். பி.வி.சிந்து பிறந்தார். குழந்தை தவழ்ந்து, நடக்க தொடங்கிய காலகட்டத்திலே அந்த கனவை நோக்கி அவரை அழைத்துச் சென்றிருக்கிறார்கள். தினமும் அதி காலையில் ரமணாவும், விஜயாவும் கைப்பந்து பயிற்சிக்கு மைதானத்திற்கு செல்வார்கள். அப்போது சிந்துவையும் உடன் அழைத்துச் சென்றார்கள். பெற்றோர் கைப்பந்து மைதானத்தில் வியர்க்க விறுவிறுக்க பயிற்சி செய்வதை சிந்து பார்த்துக்கொண்டிருந் தாலும், அவர் கவனமெல்லாம் சற்று தூரத்தில் நடந்துகொண் டிருந்த பேட்மிண்டன் விளையாட்டிலே பதிந்திருந்திருக்கிறது.

மகள் அவ்வப்போது தங்கள் கண்பார்வையில் இருந்து மறைந்து போவதை உணர்ந்த அவர்கள், சிந்து எங்கே போகிறார் என்பதை கண்காணித்து அவர் பேட்மிண்டன் மைதானத்தில் இருந்ததை கண்டுபிடித் தார்கள். அந்த காலகட்டத்தில் பேட்மிண்டன் வீரர் கோபிசந்த் ‘ஆல் இங்கிலாந்து கிரீடம்’ வென்று, புகழின் உச்சத்தில் இருந்தார். மைதானத்தில் அவர் கொடுக்கும் பயிற்சியை தான் 6 வயதிலேயே சிந்து ஆழ்ந்து கவனித்திருக்கிறார்.

மகளின் பேட்மிண்டன் ஆர்வத்தை பார்த்த பெற்றோர், ‘நாம் விரும்பியபடி அவள் கைப்பந்தில் ஆர்வம்காட்டாவிட்டாலும், அவளுக்கு விளையாட்டில் அதிக ஈடுபாடு இருப்பது தெரிந்துவிட்டது. அவள் எதை விரும்புகிறாளோ அதில் ஊக்குவிப்போம்’ என்ற முடிவுக்கு வந்தார்கள். பேட்மிண்டன் பேட்டையும், ராக்கெட்டையும் சிந்துவின் கையில் கொடுத்தார்கள்.

ஆறு வயதில் சிந்துவை பேட்மிண்டனில் வளர்த்தெடுக்க அவர்கள் மிகவும் சிரமப்பட்டார்கள். அப்போது செகந்திராபாத்தில் வசித்துவந்தார்கள். தினமும் அதிகாலை 3 மணிக்கு விழித்துவிடும் ரமணா மகளோடு 30 கி.மீ. தூரம் பயணித்து, கோபிசந்த்தின் பேட்மிண்டன் கிரவுண்டில் கொண்டுபோய் விடுவார். அங்கு சில மணிநேரம் பயிற்சி நடக்கும். திரும்பி வரும்போது பெரும்பாலான நாட்கள் சோர்ந்துபோய் தந்தையின் தோளில் சாய்ந்து சிந்து அசந்து தூங்கிவிடுவார்.

8 வயதில் இருந்து பயிற்சி கடுமையானது. அன்றிலிருந்து இன்று 25 வயது வரை சிந்து ஒருநாளும் பயிற்சிக்கு ஓய்வு கொடுத்ததில்லை. தனது மாதவிடாய் நாட்களிலும் தவறாமல் பயிற்சிக்கு சென்றுவிடுவதுண்டு. ‘நான் பூப்படைந்ததைகூட பேட்மிண்டன் கிரவுண்டில்தான் உணர்ந்தேன். அதற்கு அதிக முக்கியத்துவம்கொடுத்து என் லட்சியத்தில் விட்டுக்கொடுக்க நான் தயாராக இருந்ததில்லை’ என்று சிந்துவே கூறியிருக்கிறார்.

தந்தை, தாய் இருவருமே ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார்கள். அதில் ஒருவரது வருமானத்தை சிந்துவுக்காக செலவிட்டுக் கொண்டிருந்தார்கள். மகள் விளையாட்டில் வெற்றிகளை குவிக்கத்தொடங்கியதும் விஜயா தான் பார்த்து வந்த ரெயில்வே பணியில் இருந்து விருப்ப ஓய்வுபெற்று முழுநேரத்தையும் மகளுக்காக அர்ப்பணித்தார். ஆனாலும் தாயார் மிக அடக்கமாக ‘அவள் வாழ்க்கையில் எனது பங்களிப்பு ஒன்றும் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. அன்று பள்ளியில் படிக்கும்போது ஹோம் ஒர்க் முதல் இன்று வரை அவளது வேலையை அவளே கவனித்துக்கொள்கிறாள். அவளுக்கு தேவையான உணவை சமைத்துகொடுப்பது மட்டுமே என் வேலை’ என்கிறார்.

ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம். தங்கம் உள்பட ஐந்து உலக சாம்பியன்ஷிப் பதக்கங்கள், இரண்டு ஆசிய விளையாட்டுப்போட்டி களில் வெள்ளி பதக்கங்கள்.. இப்படியே நீளும் பதக்க பட்டியலின் பின்னால் சிந்துவின் கடுமையான முயற்சிகள் மட்டுமல்ல, பெற்றோரின் மிகப்பெரிய கனவும் ஒத்துழைப்பும் இருந்துகொண்டிருக்கிறது. 18 வயதில் அர்ஜூனா விருதும், 20 வயதில் பத்மஸ்ரீ விருதும் பெற்றதிலும் அந்த பெற்றோரின் வியர்வையும் கலந்திருக்கிறது.

Next Story