தானம் பெற்ற இதயம் புதிய தாயிடம் பேசியது


தானம் பெற்ற இதயம் புதிய தாயிடம் பேசியது
x
தினத்தந்தி 15 March 2020 10:38 AM GMT (Updated: 15 March 2020 10:38 AM GMT)

இசனோவாவுக்குள் இயங்கிக்கொண்டிருக்கும் இதயத்தை தந்தவன் ஆதித் பால்சன் என்ற சிறுவன்.

தாய் வயிற்றில் கருக்கொள்ளும்போது துடிக்க ஆரம்பிக்கும் இதயம், குழந்தையாக பிறந்து.. வளர்ந்து.. வாழ்ந்து.. மரணிக்கும் கடைசி நிமிடம் வரை இயங்கிக்கொண்டே இருக்கும். இதயம் ஒருபோதும் பேசாது. உடலை இயங்கவைப்பதுதான் அதன் பணி. ஆனால் கஜகஸ்தான் நாட்டை சேர்ந்த பெண்ணான தில்நாஸ் இசனோவாவின் இதயம் மட்டும், இந்தியாவில் இருக்கும் ஒரு குடும்பத்தோடு நெகிழ்ந்து பேசுகிறது. ஏன்என்றால் இசனோவாவுக்கு இதயதானம் கிடைத்தது அந்த குடும்பத்தில் இருந்துதான். அவர் உயிரோடு இருப்பதற்கு அந்த இதயம்தான் காரணம்.

இசனோவாவுக்குள் இயங்கிக்கொண்டிருக்கும் இதயத்தை தந்தவன் ஆதித் பால்சன் என்ற சிறுவன். நினைவில் மட்டும் வாழ்ந்துகொண்டிருக்கும் அந்த சிறுவனின் பெற்றோருக்கு நன்றி சொல்ல இசனோவா வந்தபோதுதான், அவரது புதிய இதயம் ஆதித்தின் பெற்றோரிடம் நெகிழ்ந்து உணர்வுகளை கொட்டியது. இசனோவா பேசியதை கேட்டதும், ‘எனது மகனின் இதயமே என்னிடம் பேசியதுபோல் இருக்கிறது’ என்று உருகினார், ஆதித்தின் அம்மா ஷின்சி.

ஆதித் பால்சனின் இதயம் கஜகஸ்தான் பெண்ணுக்கு பொருத்தப்பட்டது ஒரு நீண்ட கதை. சிறுவனின் பெற்றோர் பால்சனும்- ஷின்சியும் கேரளாவில் இரிங்காலக்குடா என்ற பகுதியை சேர்ந்தவர்கள். அவர்களை சந்தித்து நன்றிகூறத்தான் இசனோவா தனது தாயாருடன் இந்தியா வந்திருந்தார். இசனோவாவுக்கு இப்போது 15 வயது.

ஆதித்தின் வீட்டிற்குள் நுழைந்ததும், “உங்கள் மகனுக்கு ஆரஞ்சு ஜூஸ் ரொம்ப பிடிக்குமா?” என்று இசனோவாவின் தாயார் அனாரா கேட்க, பதிலுக்கு ஆதித்தின் அம்மா, “ஆமாம்.. அது எப்படி உங்களுக்கு தெரியும்?” என்று கண்கலங்க கேட்டார்.

“இவளுக்கு இதய மாற்று ஆபரேஷன் முடிந்து, நினைவு திரும்பிய உடன் ‘அம்மா எனக்கு ஒரு கப் ஆரஞ்சு ஜூஸ் கொடுங்கள்’ என்று கேட்டாள். இவளுக்கு ஆரஞ்சு ஜூஸ் பிடிக்கவே பிடிக்காது. ஆரோக்கியத்திற்கு அது நல்லது என்று நான் கட்டாயப் படுத்தினாலும் குடிக்கவே மாட்டாள். அப்படிப்பட்டவள் இதய மாற்று ஆபரேஷன் முடிந்து நினைவு திரும்பியதுமே, ஆரஞ்சு ஜூஸ் கேட்டதை என்னால் நம்பமுடியவில்லை. அதை தெளிவு படுத்தத்தான் உங்களிடம் கேட்டேன்” என்றார்.

“ஆதித்துக்கு ஆரஞ்சு ஜூஸ்தான் ரொம்ப பிடிக்கும். நான் ஏதாவது வேலையில் இருந்தால்கூட அவனே ஆரஞ்சு பழங்களை எடுத்து பிழிந்து குடித்துவிடுவான். அந்த அளவுக்கு அவனுக்கு ஆரஞ்சு பிடிக்கும்” என்று ஷின்சி சொன்னதும், அனாராவின் கேள்விக்கு விடைகிடைத்தது. இதயங்கள் உடல் மாறினாலும் இஷ்டப்படும் விஷயங்கள் மாறாது என்பதை இதன் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது.

இசனோவா மூன்று வயது சிறுமியாக இருந்தபோது அவளது இதயத்தில் ஏற்பட்ட பாதிப்பை டாக்டர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். ‘டைலேட்டட் கார்டியோமயோப்பதி’ என்பது அந்த நோயின் பெயர். இதயச் சுவர் பகுதியின் செயல்பாடுகளில் தடை ஏற்படுவதும், காலப்போக்கில் இதயம் செயலிழந்து போவதும் அதன் அறிகுறியாகும். நவீன சிகிச்சைக்காக மகளை அழைத்துக்கொண்டு தாயும்,தந்தையும் மாஸ்கோ சென்றனர். அங்குள்ள டாக்டர்கள் இதற்கு சிகிச்சையே கிடையாது. இதயமாற்று அறுவை சிகிச்சை மட்டுமே தீர்வு என்று கூறிவிட்டார்கள்.

ஆனால் மாஸ்கோவில் உடல்உறுப்பு தானம் என்பது மிகமிக குறைவு. அதனால் இதயதானம் கிடைக்க வாய்ப்பில்லை என்பதை அறிந்த அவர்கள், அடுத்து என்ன வழி என்று சிந்தித்தபோது, ‘இ்ந்தியா உடல்உறுப்புதானத்தில் முன்னோடியாக இருக்கிறது. அங்கு செல்லுங்கள். இதயம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது’ என்று மாஸ்கோ சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள்.

“நாங்கள் முயற்சிகளை தொடர்ந்துகொண்டிருந்தபோதே இசனோவாவுக்கு பத்து வயது ஆகிவிட்டது. ஒரு டாக்டரையும் அழைத்துக்கொண்டு மருந்து, மாத்திரைகள், டிரிப்போடு அவளை இந்தியா விற்கு அழைத்துவந்தோம். சென்னையில் உள்ள ஒரு மருத்துவ மனையில் எங்கள் மகளை அனுமதித்துவிட்டு, ஆறு மாதங்களாக இதயத்திற்காக காத்திருந்தோம். கேரள அரசின் மிருதசஞ்சீவினி என்ற திட்டத்தின் கீழ் எங்களுக்கு ஆதித்தின் இதயம் கிடைத்தது.

2015-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 18-ந்தேதி சென்னை டாக்டர்கள் பொருத்தமான இதயம் தானமாக கிடைத்துவிட்டது என்று கூறினார்கள். அது யாருடைய இதயம் என்று எங்களுக்கு தெரியாது. என் மகளின் சிகிச்சைக்காக நான் வேலையை ராஜினாமா செய்துவிட்டு அவளுடனே இருந்தேன். என் கணவர் கட்டுமானத் துறை சார்ந்த தொழிலில் இருப்பதால் அப்போது அவரால் சென்னைக்கு வரமுடியவில்லை. மகளை ஆபரேஷன் தியேட்டருக்குள் அனுப்பிவிட்டு நான் தனிமையில் தவித்துக்கொண்டிருந்தபோது டாக்டரின் மனைவி என்னை தேடிவந்து, ‘பயப்படாதீர்கள்.. நல்லதே நடக்கும்’ என்றார். அதுபோல் ஆபரேஷன் வெற்றிகரமாக முடிந்தது.

பின்புதான் இதயத்திற்கு சொந்தமான சிறுவன் கேரளாவை சேர்ந்தவன் என்பது எனக்கு தெரியவந்தது. அந்த குடும்பத்தை சந்தித்து நன்றிகூற வேண்டும் என்று விரும்பினோம். நான் என் மகளிடம், அவளுக்கு இரண்டு அம்மாக்கள் என்று கூறியுள்ளேன். ஆதித்தின் தாயும் என் மகளுக்கு அம்மாதான்” என்று ஷின்சியின் கைகளை பற்றிக்கொண்டு அனாரா சொன்னார்.

இசனோவாவுக்கு இதயம் தந்த ஆதித் பால்சன் மூளைச்சாவு அடைய என்ன காரணம்?

2015-ம் ஆண்டு சுதந்திரதின நாளில் ஆதித் தனது தந்தையுடன் காரில் சென்றுகொண்டிருந்தபோது விபத்து நடந்துள்ளது. அவனது அம்மாவும், அக்காளும் உறவினர் திருமணத்திற்காக சென்றிருந்தார்கள். அவர்களை அழைத்துவர சென்றபோது விபத்தில் சிக்கிக்கொண்டார்கள். தந்தைக்கு காயம் ஏற்பட்டாலும் உயிர்பிழைத்துவிட்டார். ஆதித் படுகாயமடைந்து, உயர் சிகிச்சையும் பலன் அளிக்காமல் மூளைச்சாவு நிலையை அடைந்தான்.

ஏற்கனவே தேவாலயத்தில் நடந்த விழா ஒன்றில் உடல் உறுப்பு தான உறுதிமொழி பத்திரத்தில் பால்சனின் குடும்பமே கையெழுத்திட்டிருந்ததால், ‘எங்கள் குழந்தையின் உடல் உறுப்புகளை தானமாக எடுத்துக்கொள்ளுங்கள்’ என்று பெற்றோர் கூறிவிட்டார்கள். அப்படித்தான், காத்திருந்த இசனோவாவுக்கு ஆதித்தின் இதயம் கிடைத்திருக்கிறது. இன்னும் சிலரும் அவனால் உறுப்புகள் பெற்று உயிர்பிழைத்தார்கள்.

நன்றி சொல்ல தன் வீடு தேடிவந்த இசனோவாவையும் அவரது குடும்பத்தாரையும் ஷின்சி கட்டிப்பிடித்து வரவேற்றார். இசனோவாவின் நெஞ்சில் ‘ஸ்டெதஸ்கோப்’வைத்து கேட்டுவிட்டு, அவர் ‘என் மகனின் இதயம் துடித்துக்கொண்டிருக்கிறது. என் மகன் உயிரோடு இருக்கிறான்’ என்று ஆனந்தகண்ணீர் வடித்தார். மொத்த குடும்பமும் நெகிழ்ந்தது.

உடல் உறுப்பு தானம் உன்னதமானது!

Next Story